தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

நாட்டில் 50 கோடி மக்களுக்கு பயனளிக்கும் வகையிலான, தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

நாட்டில் 50 கோடி மக்களுக்கு பயனளிக்கும் வகையிலான, தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
 ஏழைகளுக்கு சேவையளிக்கும் மாபெரும் முயற்சியாக அத்திட்டம் விளங்கும் என்று அவர் கூறினார்.
 "பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா - ஆயுஷ்மான் பாரத்' என்று பெயரிடப்பட்டுள்ள தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் தொடக்க விழா, ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது:
 மத்திய அரசின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்டுள்ள தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்பது உலகிலேயே மாபெரும் சுகாதாரத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் பயனாளர்கள் எண்ணிக்கை என்பது, கனடா, மெக்ஸிகோ, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கு சமமானதாகும்.
 இதற்கு முன்பு இருந்த ஆட்சியாளர்கள் ஏழைகளின் வாழ்வை மேம்படுத்தாமல், வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், தற்போது பாஜக தலைமையிலான அரசு, அவர்களது மேம்பாட்டில் கவனம் செலுத்தி வருகிறது.
 இதய நோய்கள், சிறுநீரக மற்றும் கல்லீரல் குறைபாடுகள், நீரிழிவு நோய்கள் உள்பட 1300-க்கும் மேற்பட்ட நோய்களுக்கு தேசிய மருத்துவக் காப்பீட்டின் மூலம் மருத்துவ சிகிச்சை பெற முடியும்.
 மக்கள் இந்தத் திட்டத்தை "மோடிகேர்' என்றும், வேறுசில பெயர்களிலும் அழைக்கின்றனர். ஆனால், என்னைப் பொருத்தவரையில் இது ஏழைகளுக்கு சேவையளிப்பதற்கான வாய்ப்பு மட்டுமே. சமூகத்தில் கடை நிலையில் வாழும் மக்களும் இந்தத் திட்டத்தில் பயன்பெறலாம்.
 தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு காரணகர்த்தாவாக அமைந்த அதிகாரிகளுக்கு, திட்டத்தின் மூலம் பயனடையும் 50 கோடி மக்களின் ஆசிகள் கிடைக்கும்.
 ஏழைகள் மருத்துவமனைகளுக்கு செல்வதற்கான இக்கட்டான சூழல் ஏற்படக் கூடாது என பிரார்த்தனை செய்து கொள்கிறேன். ஆனால், அப்படியொரு நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் சேவையளிக்கும். பணக்காரர்களுக்கு கிடைக்கும் அனைத்து வசதிகளும் ஏழை மக்களுக்கும் கிடைக்க வேண்டும்.
 தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஜாதி, மதம் மற்றும் இடத்தின்அடிப்படையில் பாகுபாடு காட்டப்படாது. தகுதியுள்ள ஒவ்வொரு நபரும் திட்டத்தின் பலன்களை பெற முடியும்.
 இந்தத் திட்டத்தில் பயன்பெற யாரும் பதிவு செய்ய வேண்டியதில்லை. பயனாளர்கள் அனைவருக்கும் சுகாதார அட்டை வழங்கப்படும். திட்டத்தை பற்றி மக்கள் மேலும் அதிகமாக தெரிந்து கொள்வதற்காக இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்படும்.
 தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் நாடெங்கிலும் உள்ள 13,000 மருத்துவமனைகள் இணைக்கப்படும். மேலும் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் 2,500 அதிநவீன மருத்துவமனைகள் கட்டப்படவுள்ளன. இதனால் ஏராளமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றார் மோடி.
 முன்னதாக, தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பயனாளிகள் சிலருக்கு, அதற்கான அடையாள அட்டைகளை பிரதமர் மோடி வழங்கினார். ஜார்க்கண்ட மாநிலம், சைபாஸா, கோதெர்மா ஆகிய இடங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
 ஜனசங்கத்தின் நிறுவனத் தலைவர்களின் ஒருவரான தீனதயாள் உபாத்யாவின் பிறந்த தினமான செப்டம்பர் 25-ஆம் தேதியில் இருந்து தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் முறைப்படி அமலுக்கு வருகிறது. தில்லியில் சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி உரையாற்றியபோது அந்தத் தகவலை குறிப்பிட்டிருந்தார்.
 25 மாநிலங்கள் 9,000 தனியார் மருத்துவமனைகள்
 தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதாக 25 மாநிலங்களும், 6 யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளன.
 நாடெங்கிலும் இதுவரையில் 9,000 தனியார் மருத்துவமனைகள் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
 மேலும், 3,000-க்கும் அதிகமான தனியார் மருத்துவமனைகளின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.
 மாநிலத்துக்கான பிரத்யேக காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுவதால் பஞ்சாப், தில்லி, கேரளம், தெலங்கானா, ஒடிஸா ஆகியவை இத்திட்டத்தில் இணைய மறுத்துவிட்டன.
 தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் செலவுகளை 60:40 என்ற அடிப்படையில் மத்திய அரசும், மாநில அரசும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
 ஏறத்தாழ 10 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 50 கோடி மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையில் இலவச காப்பீடு வழங்கப்படும்.
 இதய நோய்கள், சிறுநீரக மற்றும் கல்லீரல் குறைபாடுகள் உள்பட மொத்தம் 1,350 வகையான நோய்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
 தமிழகத்தில் 1.57 கோடி குடும்பங்கள்
 சென்னை, செப். 23: பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 1.57 கோடி குடும்பங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
 பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் தொடக்க விழா, சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 இவ்விழாவுக்குத் தலைமை வகித்து திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள 1.57 கோடி குடும்பத்தைச் சேர்ந்த பயனாளிகள் ஆண்டுக்கு தலா ரூ. 5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு பெற முடியும் என்றார். 10 பயனாளிகளுக்கு காப்பீட்டுத் திட்டத்துக்கான அடையாள அட்டை, காப்பீடு மூலம் சிகிச்சைக்கான அனுமதியை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழங்கினார்.
 சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் பி.உமா மகேஸ்வரி, மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டின் தேசிய ஆரோக்கிய நிறுவன நிபுணர் சச்சின் போக்கரே, ஆலோசகர் ராம்கோபால் சுக்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com