ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை: அருண் ஜேட்லி

பிரான்ஸ் அரசுடன் மேற்கொண்டுள்ள ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை: அருண் ஜேட்லி

பிரான்ஸ் அரசுடன் மேற்கொண்டுள்ள ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
 இந்த விவகாரத்தில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்சுவா ஹொலாந்த் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
 பிரான்ஸில் போர் விமானத் தயாரிப்பில் முன்னணியில் உள்ள டஸால்ட் ஏவியேஷன் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்காக, அந்நாட்டு அரசுக்கும், இந்திய அரசுக்கும் இடையே கடந்த 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது, பிரான்ஸ் அதிபராக பிராங்சுவா ஹொலாந்த் இருந்தார்.
 போர் விமானத்துக்கு தேவையான உதிரி பாகங்களை தயாரிப்பதற்காக, அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
 இந்த ஒப்பந்தத்தை அரசின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்காமல், போர் விமானத் தயாரிப்பில் முன் அனுபவமில்லாத ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கியது ஏன்? என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியது. மேலும், இந்த ஒப்பந்தத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் அக்கட்சி குற்றம் சாட்டி வருகிறது.
 இதனிடையே, "உதிரி பாகங்களைத் தயாரிக்கும் ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் வழங்குமாறு இந்திய அரசுதான் பரிந்துரை செய்தது. வேறு நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்க எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை' என்று பிராங்சுவா ஹொலாந்த் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அவரது கருத்து இந்திய அரசியல் வட்டாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
 இதனிடையே, இந்த ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், ஊழலுக்கு பொறுப்பேற்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.
 இந்நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும், ஹொலொந்துக்கும் இடையே தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது என்றார். அந்தப் பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:
 ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி பதிவொன்றை வெளியிட்டிருந்தார். அதில், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக, பிரான்ஸில் பூகம்பம் வெடிக்கப்போகிறது என்று குறிப்பிட்டிருந்தார். அதன்படி, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக, ஹொலாந்த் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டார். இந்தச் சம்பவம் முன்கூட்டியே ராகுலுக்கு தெரிந்தது எப்படி? ராகுலுக்கும், ஹொலாந்துக்கும் தொடர்பு இருப்பதை நிரூபிப்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை. எனினும், அவர்களின் செயல்பாடுகளும் சந்தேகத்துக்குரியதாக உள்ளன.
 மேலும், ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்ததில், இரு நாட்டு அரசுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அந்த நிறுவனத்தை டஸால்ட் ஏவியேஷன் நிறுவனமே தேர்வு செய்தது என்றும் இரு நாட்டு அரசு தரப்பில் இருந்து விளக்கம் அளித்தாகி விட்டது.
 இதனிடையே, ரிலையன்ஸ் நிறுவனத்தை டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் தேர்வு செய்ததில் பிரான்ஸ் அரசுக்கு தொடர்பு இருந்ததா என்று தனக்குத் தெரியாது என்று ஹொலாந்த் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் முன்னுக்குப் பின் முரணாக அவர் பேசுகிறார்.
 இந்த நிலையில், இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுமா என்று பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. நமது விமானப் படைக்கு போர் விமானங்கள் தேவைப்படுவதால், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட மாட்டாது. ரஃபேல் போர் விமானங்கள் நிச்சயம் இந்திய விமானப் படைக்கு வரும் என்றார் அருண் ஜேட்லி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com