இபிஎஸ் அரசுக்கு எதிராக வாக்களிப்பு: ஓபிஎஸ் உள்ளிட்ட 7 எம்எல்ஏக்கள் விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்  

கடந்த ஆண்டு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் இபிஎஸ் அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில், ஓபிஎஸ் உள்ளிட்ட 7 எம்எல்ஏக்கள் விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
இபிஎஸ் அரசுக்கு எதிராக வாக்களிப்பு: ஓபிஎஸ் உள்ளிட்ட 7 எம்எல்ஏக்கள் விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்  

புது தில்லி: கடந்த ஆண்டு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் இபிஎஸ் அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில், ஓபிஎஸ் உள்ளிட்ட 7 எம்எல்ஏக்கள் விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

கடந்த ஆண்டு பிப்ரவரி 18 -ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தற்போதைய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் க. பாண்டியராஜன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர். நட்ராஜ், எஸ். செம்மலை, எஸ்.பி. சண்முகநாதன், என். மனோரஞ்சிதம், எஸ்.எஸ். சரவணன், வி.சி. ஆறுக்குட்டி, ஓ.கே. சின்னராஜ், கே. மாணிக்கம், ஏ. மனோகரன் உள்ளிட்ட 11 பேரும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். 

இவர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக கொறடா சக்கரபாணியும், இதே கோரிக்கையை வலியுறுத்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வெற்றிச்செல்வன், தங்கத்தமிழ்ச் செல்வன், ரங்கசாமி, பார்த்திபன் ஆகியோர் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. 

இது தொடர்பாக அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஆண்டு ஏப்ரல் 27 -ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதில், 11 சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பேரவைத் தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது' எனத் தெரிவித்து, தகுதி நீக்கம் செய்யக் கோரிய அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு கடந்த ஆண்டு மே 1 -ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு கடந்த மே 9-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

அதேசமயம் தற்போதைய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் க. பாண்டியராஜன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர். நட்ராஜ், எஸ். செம்மலை, என். மனோரஞ்சிதம், ஓ.கே. சின்னராஜ், ஏ. மனோகரன் ஆகிய 7 பேருக்கு எதிராக டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களும், தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களான வெற்றிவேல், பார்த்திபன், ரங்கசாமி, தங்கத் தமிழ்ச்செல்வன் ஆகியோரது சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்கள் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டன.  அதில், இந்த விவகாரத்தை சென்னை உயர் நீதிமன்றம் சட்ட ரீதியாக ஆராயாமல் உத்தரவு பிறப்பித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் இபிஎஸ் அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில், ஓபிஎஸ் உள்ளிட்ட 7 எம்எல்ஏக்கள் விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

உச்ச நீதிமன்ற நீதிபதி சிக்ரி முன்னிலையில் செவ்வாயன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் உள்ளிட்ட 7 எம்எல்ஏக்கள் விளக்கமளிக்க வேண்டும் என்று கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ள உச்ச நீதிமன்றம் , இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 30-ஆம் தேதிக்கு ஓத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.    
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com