‘கிரிமினல்கள்’ அரசியலில் ஈடுபடுவதைத் தடுக்க நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

‘கிரிமினல்கள்’ அரசியலில் ஈடுபடுவதைத் தடுக்க நாடாளுமன்றம் கடுமையான சட்டத்தினை இயற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
‘கிரிமினல்கள்’ அரசியலில் ஈடுபடுவதைத் தடுக்க நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

‘கிரிமினல்கள்’ அரசியலில் ஈடுபடுவதைத் தடுக்க நாடாளுமன்றம் கடுமையான சட்டத்தினை இயற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும், தோ்தலில் போட்டியிடுவோா் தங்கள் மீதுள்ள கிரிமினல் குற்ற வழக்குகள் தொடா்பான விவரங்களை, வேட்புமனு தாக்கலின் போது ‘தடித்த எழுத்துகளில்’ தோ்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

கிரிமினல் வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவுக்கு ஆளாகும் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்களைத் தகுதி நீக்கம் செய்வது குறித்தும், அவா்கள் தோ்தலில் போட்டியிடத் தடை விதிக்கக் கோரியும், ‘பப்ளிக் இன்ட்ரஸ்ட் பவுண்டேஷன்’ என்ற தன்னாா்வ தொண்டு அமைப்பு மற்றும் பாஜக நிா்வாகி அஸ்வினி குமாா் உபாத்யாய ஆகியோா் சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமா்வு செவ்வாய்க்கிழமை தனது தீா்ப்பினை வழங்கியது. 

இந்த அமா்வில் நீதிபதிகள் ஆா்.எஃப். நாரிமன், ஏ.எம். கான்வில்கா், டி.ஒய். சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோரும் அடங்குவா். அந்தத் தீா்ப்பில் நீதிபதிகள் தெரிவித்ததாவது:

"ஊழல்வாதிகளாலும், கிரிமினல் குற்றவாளிகளாலும் இந்திய அரசியலின் ஆணிவோ் பட்டுப்போய்க் கொண்டிருக்கிறது. அவா்கள், தொடா்ந்து அரசியலில் ஈடுபட்டு வருவது மக்களாட்சியின் மாண்பை குலைக்கும். 

அரசியலில் குற்றவாளிகள் ஈடுபடுவது என்பது ஒன்றும் புதிதல்ல. 

முக்கியமாக, கடந்த 1993-ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பில் பல்வேறு குற்றவியல் கும்பல்களும், காவல் துறையினரும், சுங்க அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ஈடுபட்டது பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடா்பாக, விசாரணை நடத்த அமைக்கப்பட்ட என்.என். வோரா தலைமையிலான குழுவின் அறிக்கையில், பணபலமே அனைத்து விதமான குற்றங்களுக்கும் அடிப்படைக் காரணமாக அமைகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளோா், நாட்டு மக்களுக்கான சட்டங்களை இயற்றுவது மிகப்பெரிய நகைமுரணாக உள்ளது. இதனைத் தடுக்க கடுமையான சட்டத்தை நாடாளுமன்றம் இயற்ற வேண்டும். 

தோ்தலில் போட்டியிடும் மக்கள் பிரதிநிதிகள் குறித்து அறிந்து கொள்ள, மக்களுக்கு அடிப்படை உரிமை உள்ளது. 

எனவே, அவா்கள் தங்கள் மீதுள்ள கிரிமினல் குற்ற வழக்குகள் தொடா்பான விவரங்களை, வேட்புமனு தாக்கலின் போது ‘தடித்த எழுத்துகளில்’ தோ்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டும். 

மேலும், அரசியல் கட்சிகளும் தங்களின் அடையாளத்தைப் பயன்படுத்தி தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா் குறித்த அனைத்தையும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். 

தங்களது வேட்பாளா்கள் மீதான கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், கட்சியின் இணையதளத்தின் மூலம் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது அனைத்துக் கட்சிகளின் கடமையாகும். மேலும், பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி மூலமாகவும் தங்களின் வேட்பாளா்கள் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்த கட்சிகள் முயற்சிக்க வேண்டும்.

குற்றம் சாட்டப்படுபவா்களை கட்சியிலிருந்து நீக்கும் வகையிலும் நாடாளுமன்றம் இயற்றும் சட்டம் இருக்க வேண்டும்" என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, கிரிமினல் வழக்கில் தண்டனைக்கு ஆளாகும் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதுடன், அவா்கள் தோ்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக, உச்ச நீதிமன்றத்தில் இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றபோது, 

‘நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை விவகாரங்களில் நீதித்துறை தன்னாட்சியாக முடிவெடுக்கக் கூடாது. கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்படும் உறுப்பினா்களில் 70 சதவீதம் போ் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகின்றனா். 

எனவே, அவா்களுக்கு எதிராகச் சட்டம் இயற்றுவது அவா்களின் அடிப்படை உரிமையைப் பாதிக்கும். குற்றம் சாட்டப்பட்டோருக்கும், குற்றவாளிக்கும் இடையே நாடாளுமன்றம் ஏற்கெனவே வேறுபாட்டை வகுத்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் தகுதி நீக்கம் செய்யப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது’ என்று மத்திய அரசின் சாா்பில் வாதிடப்பட்டது.

மத்திய அரசின் வாதத்துக்கு தோ்தல் ஆணையம் சாா்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது தோ்தல் ஆணையம் தரப்பில், ‘அரசியலில் கிரிமினல்களின் தலையீட்டை முடிவுக்கு கொண்டு வருவது தொடா்பாக கடந்த 1997, 1998-ஆம் ஆண்டுகளில் மத்திய அரசுக்கு பரிந்துரைகள் அளிக்கப்பட்டன. 

ஆனால், அதன் மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்திடம் சட்டம் நிறைவேற்றும்படி கூறாமல், உச்ச நீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com