சிறப்பு பாதுகாப்புக் குழு மீதான ராகுலின் விமர்சனம்: மத்திய அரசு திட்டவட்டமாக மறுப்பு

சிறப்பு பாதுகாப்புக் குழு (எஸ்பிஜி) தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று மத்திய உள்துறை


சிறப்பு பாதுகாப்புக் குழு (எஸ்பிஜி) தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விளக்க அளிக்கை ஒன்றும் அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் பிரதமர், முன்னாள் பிரதமர்கள், அவர்தம் குடும்பத்தினர் உள்ளிட்டோருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் ராகுல் காந்தி, அவரது தாயார் சோனியா, சகோதரி பிரியங்கா ஆகியோருக்கும் அத்தகைய பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம், கல்வி நிறுவனங்கள் ஆகியவை தற்போது ஆர்எஸ்எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாகக் குற்றம்சாட்டினார். மேலும், எஸ்பிஜி தலைவராக இருந்த ஒருவர் சமீபத்தில் அப்பதவியில் இருந்து விலகியதைச் சுட்டிக் காட்டிய ராகுல், அதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பே காரணம் என்றார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பால் கைகாட்டப்படும் நபர்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று எஸ்பிஜி தலைவருக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும், அதை ஏற்க மறுத்ததன் விளைவாகவே அவர் அப்பதவியை இழக்க நேர்ந்ததாகவும் ராகுல் கூறியிருந்தார். இத்தகவலை சம்பந்தப்பட்ட அதிகாரியே தம்மிடம் கூறியதாகவும் ராகுல் தெரிவித்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:
சிறப்பு பாதுகாப்புக் குழு என்பது மிகவும் நம்பிக்கைக்கும், அர்ப்பணிப்புக்கும் பெயர் பெற்ற ஓர் அமைப்பு. அக்குழுவின் பாதுகாப்பைப் பெற்று வரும் ராகுல் காந்தியே, அதற்கு எதிராக கருத்து தெரிவிப்பது துரதிருஷ்டவசமானது.
ராகுல் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை; துளியளவும் உண்மையற்றவை. இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடமே மத்திய அரசு விசாரித்தது. ராகுலிடம் அவ்வாறு தாம் எதுவுமே தெரிவிக்கவில்லை என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். வேண்டுமென்றே அவதூறு பரப்பும் நோக்கில் இவ்வாறு ராகுல் பேசி வருகிறார் என்று அதில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com