பசுப் பாதுகாப்பு, கும்பல் கொலைகள் தொடர்பான உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும்: மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்

பசுப் பாதுகாப்பு மற்றும் கும்பல் கொலைகள் தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மாநில அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் பின்பற்ற வேண்டும்


பசுப் பாதுகாப்பு மற்றும் கும்பல் கொலைகள் தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மாநில அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் பின்பற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. 
பொதுமக்கள் கும்பலாக சேர்ந்து ஒருவரைஅடித்து உதைப்பது என்பதும், அது கொலை வரை செல்வதும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்த விஷயத்தில் மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதேபோல சமூக ஒழுக்கத்தைக் காப்பதாக கூறிக் கொண்டு வன்முறையில் ஈடுபடுபவர்களையும், தங்களைக் காவலர்களாக முன்னிறுத்தி சில கும்பல் செயல்படுவதையும் முற்றிலுமாக இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க புதிய சட்டம் இயற்றுவது குறித்து மத்திய அரசும், மாநில அரசுகளும் பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஜுலை மாதம் 17-ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், அல்வர் மாவட்டத்தில் கடந்த ஜுலை மாதம் 20-ஆம் தேதி, பசுக்களை இறைச்சிக் கூடத்துக்கு கடத்திச் சென்றதாகக் கூறி, அக்பர் கான் (28) என்ற இளைஞரை மர்ம கும்பல் அடித்துக் கொலை செய்தது. இதையடுத்து, இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்த போதிலும், இந்தக் கொலையைத் தடுக்க தகுந்த நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்கவில்லை என்று கூறி, பத்திரிகையாளரும், மகாத்மா காந்தியின் பேரனுமான துஷார் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் தேசீன் பூனாவாலா ஆகியோர் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
கும்பல் கொலைகளும், சட்டத்தை மக்கள் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு செயல்படுவதும் நீதித்துறையின் கோபத்துக்கு ஆளாக வழிவகுக்கும் என்பதை அவர்கள் உணர வேண்டும். இது தொடர்பாக தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை ஆகியவற்றின் மூலமாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்தது. அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், கும்பல் கொலைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு இழப்பீட்டுத் தொகை அளிப்பது குறித்தும் அவை ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும்.
மேலும், கும்பல் கொலைகளைத் தடுக்க மாநில அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து, அது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. மிசோரம், தெலங்கானா, மேகாலயம், அருணாசலப் பிரதேசம், தில்லி உள்ளிட்ட 8 அரசுகள் இன்னும் அறிக்கை அளிக்கவில்லை. அந்த அரசுகள் 3 நாள்களுக்குள் அறிக்கையைத் தாக்கல் செய்ய இறுதி வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்று கூறிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதனிடையே, மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கும்பல் கொலைகளைத் தடுக்கும் வகையில் தகுந்த சட்டத்தை இயற்ற, மத்திய அமைச்சர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com