இந்தியா

ரஃபேல்: வழக்குப் பதிவு செய்ய காங்கிரஸ் மனு

DIN


ரஃபேல் போர் விமான ஊழல் விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அடங்கிய குழு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரை(சிவிசி) நேரில் சந்தித்து மனு அளித்து வலியுறுத்தியுள்ளது.
மூத்த காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அகமது படேல், ஆனந்த் சர்மா, கபில் சிபல், ரந்தீப் சிங் சுர்ஜிவாலா, ஜெய்ராம் ரமேஷ், அபிஷேக் மனு சிங்வி, மனிஷ் திவாரி, விவேக் டங்கா, பிரமோத் திவாரி, பிரணவ் ஜா ஆகியோர் அடங்கிய குழு, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் கே.வி. செளதரியை திங்கள்கிழமை சந்தித்துப் பேசியது.
அப்போது, ரஃபேல் ஊழல் குறித்த விரிவான தகவல்கள் அடங்கிய மனு ஒன்றை ஆணையரிடம் வழங்கிய அந்தக் குழு, இந்த ஊழல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியது. 
அந்த மனுவில், பாதுகாப்புத் துறையின் மிகப் பெரிய ஊழலாக ரஃபேல் ஊழல் உருவெடுத்துள்ளது. மத்திய அரசின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு (எச்.ஏ.எல்.) வழங்கப்பட இருந்த ரஃபேல் ஒப்பந்தத்தை, பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தனது நண்பர்களின் தனியார் நிறுவனத்துக்கு வழங்கி அரசு கருவூலத்துக்கு இழப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற ஊழல்களும், ஆதாயம் பார்த்து நண்பர்களுக்கு அரசுத் திட்டங்களை ஒதுக்கும் நடவடிக்கைகளும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. 
இது குறித்து மத்திய அரசிடமிருந்தோ, பாதுகாப்புத் துறை அமைச்சரிடமிருந்தோ எந்த வித சரியான பதிலும் இதுவரை கிடைக்கவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்த, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கே முழு உரிமை உள்ளது. அந்த நிலையில், போர் விமானங்களின் உண்மையான விலை குறித்து, மத்திய அரசு ஆணையத்திடம் தெரிவித்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதன் மூலம், அரசுக் கருவூலத்துக்கு ஏற்பட்டுள்ள இழப்பு பற்றி எளிதில் தெரிந்துவிடும். எனவே, கண்காணிப்பு ஆணையர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, இந்தப் பிரச்னைக்கு உடனடித் தீர்வு காண வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
ஆணையரைச் சந்தித்தது குறித்து ஆனந்த் சர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ரஃபேல் ஒப்பந்தம் குறித்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கோ, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவன அதிகாரிகளுக்கோ, விமானப்படை அதிகாரிகளுக்கோ முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் ஒப்பந்தம் செய்யப்பட்ட அதே போர் விமானங்களை 300 சதவீதம் அதிக விலை கொடுத்து வாங்க, பாஜக தலைமையிலான மத்திய அரசு புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண்காணிப்பு ஆணையரிடம் வலியுறுத்தியுள்ளோம் என்று அவர் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே தலைமை கணக்குத் தணிக்கையாளரைச்(சிஏஜி) சந்தித்த காங்கிரஸ் குழுவினர், ரஃபேல் ஊழல் விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றினைத் தயார் செய்து, அதை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டினை முன்வைத்து, கடும் நெருக்கடியைக் கொடுத்துவரும் காங்கிரஸ், இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்காசி மாவட்ட மகிளா காங்கிரஸ் நிா்வாகி நியமனம்

பொய் வழக்கு: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை

பால்டிமோா் விபத்து: ‘இந்திய மாலுமிகள் நலமாக உள்ளனா்’

ஏப்.4, 5-ல் அமித் ஷா தமிழகத்தில் பிரசாரம்

சி-விஜில் செயலியில் இதுவரை 1,383 புகாா்கள்: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

SCROLL FOR NEXT