ஆதார் தீர்ப்பு சரி.. ஏற்கனவே தனியார்கள் சேகரித்துள்ள 'ஆதார் டேட்டாவின்' கதி?: வல்லுநர் எழுப்பும் வலிமையான கேள்விகள்

ஆதார் தொடர்பான வழக்கில் தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைக் கோருவது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், ஏற்கனவே அந்நிறுவனங்கள சேகரித்து வைத்துள்ள 'ஆதார் டேட்டாவின்' நிலை... 
ஆதார் தீர்ப்பு சரி.. ஏற்கனவே தனியார்கள் சேகரித்துள்ள 'ஆதார் டேட்டாவின்' கதி?: வல்லுநர் எழுப்பும் வலிமையான கேள்விகள்

புது தில்லி: ஆதார் தொடர்பான வழக்கில் தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைக் கோருவது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், ஏற்கனவே அந்நிறுவனங்கள சேகரித்து வைத்துள்ள 'ஆதார் டேட்டாவின்' நிலை குறித்து வல்லுநர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

ஆதாரை கட்டாயமாக்கும் மத்திய அரசின் திட்டம், ஆதார் சட்டம் ஆகியவற்றை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 31 மனுக்கள் தொடுக்கப்பட்டன. 

இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திராசூட் மற்றும் அசோக் பூஷண் ஆகிய 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. 

இந்த விசாரணை கடந்த மே மாதம் 10ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் புதனன்று தனது தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

ஆதார் தீர்ப்பின் முக்கியம்சங்கள்: 

தனிநபர் கண்ணியம் காக்கப்பட ஆதார் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கும் ஆதார் கட்டாயமாக்கக் கூடாது.

நீட், சிபிஎஸ்இ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கும் ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது.

ஆதார் அடையாள அட்டைக்கும் பிற அடையாள அட்டைகளுக்கும் வித்தியாசம் உள்ளது.

ஆதார்  அட்டையை போலியாக உருவாக்க முடியாது. 
ஆதார் என்பது மற்ற அடையாள ஆவணங்களைப் போல அல்ல. குறைந்த, அத்தியவாசியத் தகவல்கள் மட்டுமே ஆதாருக்காகப் பெறப்படுகிறது.

ஆதார் சிறந்தது என்பதை விட தனித்துவமானது என்பதே நல்லது. 

தனி நபர் சுதந்திரத்தை ஆதார் திட்டமும், அட்டையும் பாதிக்கிறது என்பதே பிரச்னையாக உள்ளது.

ஆதார் இல்லை என்பதற்காக தனிநபரின் உரிமைகள் பறிக்கப்படக் கூடாது.

வங்கி மற்றும் அது தொடர்பான சேவைகளுக்கும், செல்போன் சேவைக்கும் ஆதார் எண்ணைக் கேட்கக் கூடாது.

ஆதார் இல்லை எனக் கூறி குழந்தைகளுக்கு கல்வி உள்ளிட்டவை மறுக்கப்படக் கூடாது.

பான் எண் பெற ஆதார் எண் கட்டாயம் என்பது சரியே.

எந்தக் காரணத்தைக் கொண்டும் தனியார் நிறுவனங்கள் ஆதார் எண்ணை பெறக் கூடாது, ஆதார் எண்ணைக் கையாளக் கூடாது என்று மிக பரபரப்பான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது. 

இந்நிலையில் ஏற்கனவே தனியார்  நிறுவனங்கள் சேகரித்து வைத்துள்ள 'ஆதார் டேட்டாவின்' நிலை குறித்து வல்லுநர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

இது தொடர்பாக இந்தியாவின் முன்னணி சைபர் சட்ட நிபுணரான பவன் துகால் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

ஆதார் தீர்ப்பு என்பது இந்திய குடிமக்களுக்கு மிகுந்த நிம்மதியைத் தரும் ஒன்றாகும். ஆனால் இப்போதுள்ள பெரிய வேலை என்ன என்றால் , தனியார் நிறுவனங்கள் தங்கள் முன்னரே சேகரித்து வைத்துள்ள ஆதார் தகவல்களை தவறாகப் பயன்படுத்தாமலும், விற்று விடாமலும் இருப்பதை உறுதி செய்வதுதான். 

அந்த தகவல்கள் கண்டிப்பாக அழிக்கப்பட வேண்டும். ஆனால் அவை பிரதி எடுக்கப்படாமலும், நிறுவனங்களின் ஆதாயத்திற்காக, செயல்பாடுகளுக்கு ஏதுவாக விற்கப்பப்படாமலும் இருப்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். ஆனால் இந்திய அரசின் எந்த நிறுவனம் இதனை தணிக்கை செய்யும் என்பது பெரிய கேள்வி?

தங்களது நிறுவன கணிப்பொறிகளுடன் பயனாளிகளின் ஆதார் தகவல்களை இணைப்பதற்காக அதிக பணத்தினை நிறுவனங்கள் செலவு செய்து ஒரு பெரிய சூதாட்டத்தினை நடத்தியுள்ளன.  அது முற்றிலும் தற்போது பயனற்றதாகி, நாடு ஒரு புதிய ஆதார் சூழலை நோக்கிச் செல்கிறது. 

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இதுவரை ஆதார் தகவல் கசிவிற்காக 50-க்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்துள்ளது. 

இத்தகைய ஆதார் டேட்டாக்கள் இந்தியாவின் எல்லைக்கும் சட்ட வரைமுறைகளுக்கும் வெளியே உள்ள நாடுகளில் அமைந்துள்ள டேட்டா சென்டர்களில் சேகரிக்கப்பட்டுள்ளன. எனவே தீர்ப்பிற்கு பிறகான புதிய ஆதார் சூழலில் மாறிவரும் சட்ட மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பான சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். 

இந்தியா இது தொடர்பாக பிற நாடுகளின் சட்டங்களை அப்படியே எடுத்து பயன்படுத்தி விடக் கூடாது. டேட்டா பயன்பாட்டில் உள்ளூர்த்தன்மையை கொண்டு வர வேண்டும்,

இவவறு அவர் தெரிவித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com