ஆதார் அட்டை:  சந்தித்த வழக்குகள்; சாதித்த விஷயங்கள்! சரியா சொல்லனும்னா கடந்து வந்த பாதை!!

ஆதார் அட்டை எனும் இந்திய குடிமக்களுக்கான அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது முதலே பல தரப்பில் எதிர்ப்புகளையும், வரவேற்பையும் பெற்றே தனது பாதையைக் கடந்து வந்துள்ளது.
ஆதார் அட்டை:  சந்தித்த வழக்குகள்; சாதித்த விஷயங்கள்! சரியா சொல்லனும்னா கடந்து வந்த பாதை!!


ஆதார் அட்டை எனும் இந்திய குடிமக்களுக்கான அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது முதலே பல தரப்பில் எதிர்ப்புகளையும், வரவேற்பையும் பெற்றே தனது பாதையைக் கடந்து வந்துள்ளது.

கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கும் மேல் ஆதார் அட்டை தொடர்பான வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் நடைபெற்று, தீர்ப்பு, மேல்முறையீடு, மனு தள்ளுபடி என பல சோதனைகளையும், சாதனைகளையும் சந்தித்து வந்துள்ளது.

முதல் முதலாக கடந்த 2012ம் அண்டு ஆதார் அட்டையை தனி நபர் அடையாள அட்டையாக கட்டாயமாக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி  கே.எஸ். புட்டாஸ்வாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதுதான் ஆதார் மீதான முதல் வழக்காகக் கருதப்படுகிறது.

2013 செப்டம்பர் 23.. யாரும் பாதிக்கப்படக் கூடாது: உச்ச நீதிமன்றம்
ஆதார் இல்லை என்பதால் தனி நபர் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்றும், ஆதார் எண் என்பது ஒரு வாய்ப்பு மட்டுமே என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

2014 மார்ச் 24.. கட்டாயமில்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம் 
அரசின் நலத்திட்டங்களைப் பெற ஆதார் அட்டை கட்டாயம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால் அதனை உடனடியாக திரும்பப் பெறுமாறு ஆதார் அட்டை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

2015 ஜூலை 21.. ஆதார் திட்டத்தை திரும்பப் பெற முடியாது.. மத்திய அரசு

ஆதார் திட்டத்தை கட்டாயமாக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் சில மாநிலங்களில் ஆதார் கட்டாயமாக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த மத்திய அரசு, ஆதார் திட்டத்தை திரும்பப் பெற முடியாது என்றும், அதற்காக சுமார் 5 ஆயிரம் கோடி அளவுக்கு செலவிடப்பட்டிருப்பதாகவும், மத்திய அரசின் சமூக நலத் திட்டங்களிலும், எரிவாயு உருளைக்கான மானியத் திட்டத்திலும் ஆதார் இணைக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்திருந்தது.

2015, ஆகஸ்ட் 11 :  ஆதார் அட்டை கட்டாயமல்ல; ஆதார் அட்டைக்கு எதிரான வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்

அரசின் நலத் திட்ட உதவிகளைப் பெற ஆதார் அட்டை கட்டாயமல்ல என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், ஆதார் அட்டையை கட்டாயமாக்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

2015 அக்டோபர் 15 - 4 திட்டங்களுக்கு மட்டும் ஆதார் எண்ணைப் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி

மறு உத்தரவு வரும் வரை அரசுத் திட்டங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆதார் அட்டை கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை மாற்றக் கோரும் மனு மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்தது. அதில், மறு உத்தரவு வரும் வரை அரசுத் திட்டங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கக் கூடாது.

மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் ஆதார் எண்ணை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

100 நாள் வேலை உறுதி திட்டம், ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி, ஜன் தன் திட்டம் என மத்திய அரசின் 4 திட்டங்களுக்கு ஆதார் எண்ணைப் பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர்.

2017, மே 27 - ஆதார் அட்டை பெறுவது குறித்து மக்களின் விருப்பத்துக்கு அனுமதிக்கலாமா? உச்ச நீதிமன்றம் கேள்வி

ஆதார் அட்டை பெறுவது மற்றும் பயன்படுத்துதல் குறித்து மக்களே முடிவெடுத்துக் கொள்ள அனுமதிக்கலாமா என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆதார் அட்டை கட்டாயமல்ல என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்வு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆதார் அட்டையை பெறுவது மற்றும் பயன்படுத்துவது என்பது மக்களின் விருப்பத்துக்கு விட்டு விட அனுமதிக்கலாமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதில் அவசரம் காட்டக் கூடாது என்று எதிர் தரப்பு வாதிட்டது.

இதைத் தொடர்ந்து, தீர்ப்பை மாற்றக் கோரும் வழக்கு விசாரணையை மட்டுமே இந்த அமர்வு விசாரிக்கும் என்றும், தனிநபர் சுதந்திரம் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 9 அல்லது 11 நபர் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தும் என்று கூறினர்.

2017, ஜூலை 19 - தனிநபர் ரகசியம் காத்தல் விவகாரம்: 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும்

தனிநபர் ரகசியம் காத்தல் என்பது அரசமைப்புச் சட்டத்தின்கீழ் மக்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமையா? என்பது குறித்து 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம்  அறிவித்தது.

ஆதாருக்கு அரசியல் சாசன ரீதியில் அங்கீகாரம் அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தொடுக்கப்பட்டுள்ளன. அந்த மனுக்களில், ஆதார் திட்டமானது, தனிநபர் ரகசியம் காத்தல் தொடர்பான அடிப்படை உரிமையில் குறுக்கிடுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சார்பில் அப்போதைய அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜராகி, இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் முன்பு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகவும், ஆதலால், தனிநபர் ரகசியம் காத்தல் என்பது அடிப்படை உரிமையா? அல்லது அடிப்படை உரிமை இல்லையா? என்பது குறித்து முதலில் முடிவெடுக்க வேண்டும் என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள், அந்த மனுக்களை 5 நீதிபதிகள் கொண்ட மிகப்பெரிய அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

இந்நிலையில், மேற்கண்ட மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், ஜே. செலமேஸ்வர், எஸ்.ஏ. பாப்தே, டி.ஒய். சந்திரசூட், எஸ். அப்துல் நாசீர் ஆகிய 5 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

காரக் சிங், எம்.பி. சர்மா ஆகியோரது வழக்குகளில், தனிநபர் ரகசியம் காத்தல் என்பது அடிப்படை உரிமையாகாது என்று உச்ச நீதிமன்றத்தால் முன்பு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதாவது, காரக் சிங் வழக்கு மீதான தீர்ப்பை கடந்த 1960-ஆம் ஆண்டில் 6 நீதிபதிகள் கொண்ட அமர்வும், எம்.பி. சர்மா வழக்கு மீதான தீர்ப்பை கடந்த 1950-ஆம் ஆண்டில் 8 நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு சாசன அமர்வும் அளித்துள்ளன.

இந்த 2 தீர்ப்புகளும் சரியானவைதானா? என்பது குறித்து, 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு புதன்கிழமை (ஜூலை 19) முதல் விசாரித்து, அரசமைப்புச் சட்டத்தின் 3-ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளில், தனிநபர் ரகசியம் காத்தல் உள்ளிட்டவை அடங்குமா? என்பது குறித்து முடிவெடுக்கும்.

ஆதார் திட்டம் தொடர்பான வழக்கில் மத்திய அரசின் சார்பில் வாதிடும் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபாலையும், மனுதாரர்கள் சார்பில் வாதிடும் மூத்த வழக்குரைஞர்கள் அரவிந்த் தாதர், ஷியாம் திவன், கோபால் சுப்பிரமணியம், ஆனந்த் குரோவர் ஆகியோரையும், அவர்கள் தரப்பு விளக்கங்களை தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து, தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையில், நீதிபதிகள் ஜே. செலமேஸ்வர், எஸ்.ஏ. பாப்தே, ஆர்.கே. அகர்வால், ரோஹின்டன் ஃபாலி நாரிமன், அபேய் மனோகர் சாப்ரே, டி.ஒய். சந்திரசூட், சஞ்சய் கிஷாண் கௌல், எஸ். அப்துல் நஸீர் ஆகிய 9 நீதிபதிகளைக் கொண்ட அமர்வை உச்ச நீதிமன்றம் அமைத்தது.

தனிநபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமையே என ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம்  பரபரப்புத் தீர்ப்பினை அளித்துள்ளது.

ஆதார் விவரங்களால் தனிநபர் சுதந்திரம் பறிக்கப்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கில், தனிநபர் சுதந்திரம் என்பது அனைவருக்கும் முக்கியமானது என்று 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. இதில், 9 நீதிபதிகளுமே ஒருமித்த கருத்தைத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தனிநபர் ரகசியம் என்பது அடிப்படை உரிமை இல்லை என்ற மத்திய அரசின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

ஆதாரைக் கட்டாயமாக்கி மத்திய பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைககளை முன்னெடுத்து வந்த நிலையில், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எத்தகைய தீர்ப்பை வழங்கப்போகிறது என்பதை அனைத்துத் தரப்பினரும் ஆவலோடு எதிர்நோக்கியிருந்தனர். இந்த நிலையில், மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்புத் தீர்ப்பினை வழங்கியுள்ளது.

2017, ஆகஸ்ட் 30 - அந்தரங்கம் தொடர்பான தீர்ப்பை ஆய்வு செய்தபின் ஆதார் மனு விசாரணை: உச்ச நீதிமன்றம்

அந்தரங்கம் தொடர்பாக அண்மையில் அளிக்கப்பட்ட தீர்ப்பை ஆய்வு செய்த பிறகே ஆதார் மசோதா சம்பந்தமாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தாக்கல் செய்துள்ள மனு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.


ஆதார் அட்டை வழங்கும் திட்டத்துக்கு வல்லுநர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்; இத்திட்டம் அரசின் கொள்கை முடிவு என்பதால் நீதித்துறையின் ஆய்வுக்கு உள்படுத்தவில்லை என்று உச்ச நீதிமன்ற அரசியல்சாசன அமர்விடம் மத்திய அரசு தெரிவித்தது.

அப்போது, நீரவ் மோடி உள்ளிட்ட தொழிலதிபர்கள் வங்கிகளில் செய்யும் முறைகேடுகளை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், வங்கி முறைகேடுகளை ஆதாரால் நிறுத்த முடியாது என்று தங்களது கருத்தைப் பதிவு செய்தனர்.


2018 ஜனவரி 17 - 'ஆதார்' மனித உரிமைகளை கொன்றுவிடும்: உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் வாதம் 

இந்தியாவில் 12 எண்கள் அடங்கிய தனிமனித அடையாளம் தொடர்பான ஆதார் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம் தனிநபர் ஒருவரின் அனைத்து அடையாளங்களும் சேகரிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இந்த ஆதார் விவரங்களை வங்கிக் கணக்கு எண், தொலைபேசி எண் உள்ளிட்டவைகளுடன் மார்ச் 31-ந் தேதிக்குள் இணைக்க அவசியமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆதாரில் சேகரிக்கப்பட்ட தனிமனித விவரங்கள் அனைத்தும் திருடப்பட்டுவிட்டதாக அவ்வப்போது புகார்கள் எழத்தொடங்கியுள்ளது. இதனால் பல போலியான அடையாள விவரங்கள் உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், மத்திய அரசு இதனை தொடர்ந்து மறுத்து வருகிறது. மேலும் ஆதார் தொடர்பான அனைத்து விவரங்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

ஆதார் அட்டைக்காக மக்களிடம் பெறப்படும் பயோமெட்ரிக்' தகவல்கள் (கைரேகை, கருவிழித்திரை பதிவு) மிகவும் பாதுகாப்பாக உள்ளன என்று மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) தலைவர் ஆர்.எஸ்.சர்மா தனது ஆதார் எண்ணை சுட்டுரையில் வெளியிட்டு, இதன் மூலம் தனக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியுமா? என்று சவால் விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து, அவரது புகைப்படம், பிறந்த தேதி, நிரந்தர கணக்கு எண் (பான்) உள்ளிட்ட விவரங்களை இணையதள ஊடுருவல் நபர்கள் (ஹேக்கர்கள்) வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். எனினும், இத்தகவல்கள் மூலம் தனக்கு எந்த பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று ஆர்.எஸ்.சர்மா கேள்வியெழுப்பினார். இதனிடையே, அவரது வங்கிக் கணக்கை சிலர் ஹேக்' செய்து, ஒரு ரூபாயை டெபாசிட் செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இதைத் தொடர்ந்து, ஆதார் தகவல்களின் பாதுகாப்பு குறித்து, மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து, மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலளித்தார்.

இன்று.. 2018, செப்டம்பர் 26 - அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புது தில்லி: அரசு திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

அதே சமயம், தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைக் கோருவது சட்டவிரோதம் என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைப் பெறும் அதிகாரம் அளிக்கும் சட்டத்தை நீக்கியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com