இந்தியா

ஒரே மாதிரியான பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம்! விரைவில் மதுவுக்கும் அமல்! வடமாநிலங்கள் திட்டம்

DIN

ஒரே மாதிரியான பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யவும், விரைவில் மது மற்றும் சாலைப் போக்குவரத்துக்கும் அமல்படுத்த வடமாநிலங்கள் முடிவு செய்துள்ளன.

பொருளாதாரத்தில் நிலையான தன்மையை ஏற்படுத்தவும், மாநில வருமானங்களில் சீரான வருமானம் பெறும் நிலையை ஏற்படுத்திக்கொள்ள ஒரே மாதிரியான பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்துகொள்ள வடமாநிலங்கள் முடிவு செய்துள்ளன. மேலும் இதனை மது மற்றும் சாலைப் போக்குவரத்துக்கும் நீட்டிக்க திட்டமிட்டுள்ளன.

ஹரியாணா, பஞ்சாப், ஹிமாச்சலபிரதேசம், உத்தரபிரதேசம் மற்றும் புதுதில்லி ஆகியன இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளன. இதன்மூலம் தங்கள் மாநிலங்களின் வருவாய் இழப்பை தவிர்க்கவும், நிலையான பொருளாதார திட்டத்தை ஏற்படுத்திக்கொள்ளவும் இந்த நடைமுறையை ஏற்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளன.

ஒரே நாடு, ஒரே வரி என்ற அடிப்படையின் கீழ் ஹரியாணா நிதி மற்றும் வரித்துறை அமைச்சர் கேப்டன் அபிமன்யூ இதற்கான முயற்சியை முன்னெடுத்தார். இதுதொடர்பான பரிந்துரைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வடமாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டன. இதையடுத்து இந்த 5 மாநிலங்களும் இதில் கலந்துகொண்டன.

இதுகுறித்து கேப்டன் அபிமன்யூ கூறுகையில்,

இந்த பரிந்துரைக் கூட்டத்தில் ஹரியாணா, பஞ்சாப், ஹிமாச்சலபிரதேசம், உத்தரபிரதேசம் மற்றும் புதுதில்லியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில் மதுவுக்கும் இதேபோன்று ஒரே விலையை நிர்ணயம் செய்ய புதுதில்லி அரசு பரிந்துரைத்தது. இதேபோன்று சாலைப் போக்குவரத்தில் வாகனங்களின் பதிவு, பெர்மிட் உள்ளிட்ட வரிகளை ஒரே மாதிரி அமைக்க வேண்டி பஞ்சாப் அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதுகுறித்து முடிவுகளை மேற்கொள்ளவும், இந்த திட்டத்தை கண்காணிக்கவும் பங்கேற்ற இந்த மாநிலங்களைச் சேர்ந்த பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு அதன் கீழ் கண்காணிக்கப்படும். அடுத்த 15 நாட்களில் நடைபெறவுள்ள இந்த குழுவின் முதல் சந்திப்பின் போது இதுதொடர்பான பரிந்துரைகளின் ஆய்வு முடிவுகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

SCROLL FOR NEXT