தில்லியில் காணாமல்போகும் 10-இல் 6 குழந்தைகள் கண்டுபிடிக்க முடிவதில்லை!: ஆய்வில் தகவல்

"நாட்டின் தலைநகர் தில்லியில் காணாமல்போகும் 10 குழந்தைகளில் 6 குழந்தைகள் கண்டுபிடிக்க முடிவதில்லை' என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.
தில்லியில் காணாமல்போகும் 10-இல் 6 குழந்தைகள் கண்டுபிடிக்க முடிவதில்லை!: ஆய்வில் தகவல்

"நாட்டின் தலைநகர் தில்லியில் காணாமல்போகும் 10 குழந்தைகளில் 6 குழந்தைகள் கண்டுபிடிக்க முடிவதில்லை' என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மக்கள் உரிமைகள் கூட்டமைப்பு (ஏபிஆர்), குழந்தைகளின் உரிமை (சிஆர்ஒய்) ஆகிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆய்வு நடத்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. "தில்லியில் காணாமல்போன குழந்தைகள் -2018' என்ற தலைப்பிலான இந்த ஆய்வு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஐந்து ஆண்டுகளில் தில்லியில் 26,761 குழந்தைகள் காணாமல்போய் உள்ளனர். அதில், 9,727 குழந்தைகள் மட்டுமே கண்டுபிடிக்க முடிந்துள்ளது. தில்லியில் காணாமல்போகும் குழந்தைகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் குறைந்து வருகிறது. அந்தக் குழந்தைகளைக் கண்டுபிடிப்பது குறைவாக உள்ளது. ஆகையால், இதில் அதிகாரிகள் முழு கவனம் செலுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் போலீஸ் துறை முழுவதும் முனைப்பு காட்டவில்லை. தில்லியில் குழந்தைகள் காணாமல்போகும் சம்பவங்களை வைத்து முழுமையான ஆய்வு நடத்தி தீர்வு காணப்பட வேண்டும். தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் 2016ஆம் ஆண்டு தகவல்களை வைத்து பார்க்கும்போது, தேசிய தலைநகர் தில்லி, குழந்தைகளுக்கு பாதுகாப்பாற்ற 7 நகரங்களில் முதலிடத்தில் உள்ளது. இதில் இருந்து மீள போலீஸ் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும். காணாமல்போன குழந்தைகள் குறித்து பொது இடங்களில் அறிவிப்புப் பலகைகளை வைத்து அறிவிக்க வேண்டும். குழந்தைகள் காணாமல்போகும் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும்.
தில்லி காவல் துறையில் போதிய காவலர்கள் இல்லாததால் காணால்போகும் குழந்தைகளைக் கண்டுபிடிப்பதில் தோய்வு ஏற்படுகிறது.  காவலர்களுக்கு பல்வேறு பணிகளுடன் சேர்த்து குழந்தைகளைக் கண்டுபிடிக்கும் பணியும் வழங்கப்படுவதாலும், பணிச்சுமையின் காரணத்தாலும் இந்த வழக்குகளில் போலீஸாரால் கவனம் செலுத்த முடிவதில்லை. 
காணாமல் போகும் குழந்தைகளில் 12-18 வயதுடையவர்களே அதிகமாக உள்ளனர். அதிலும் சிறுமிகள்தான் அதிகம். குழந்தை தொழிலாளர்களாகவும், பாலியல் தொழில்களிலும், கட்டாய திருமணத்திலும், வீட்டு பணிகளிலும், பிச்சை எடுப்பதிலும் அவர்களை ஈடுபடுத்துகின்றனர். தில்லியில் குழந்தைகளை பாதுகாக்க 11 மாவட்டங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த மையங்கள் சமூக கண்காணிப்பு குழுக்களுடன் இணைக்கப்பட வில்லை. ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு (ஐசிபிஎஸ்) திட்டத்தின்படி, இந்த இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
எனினும், தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் தகவல், தில்லி போலீஸாரிடம் இருந்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி சேகரிக்கப்பட்ட தகவல்களில் தில்லியில் காணாமல்போகும் குழந்தைகளில் 63 சதவீதம் கண்டுபிடிக்க முடிவதில்லை என்றும் பிற மாநிலங்களில் இது 30 சதவீதமாக இருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
தில்லி போலீஸிடம் இருந்து பெறப்பட்ட தகவலில் 2015-இல் தினந்தோறும் காணாமல்போகும் குழந்தைகளின் எண்ணிக்கை 22-ஆக இருந்தது. இது 2017-இல் 17ஆக குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் இணை அமைச்சர் கிருஷ்ண ராஜிடம் இருந்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்ட தகவலில், 2012, ஜனவரி 1 முதல் கடந்த ஆண்டு மார்ச் 20ஆம் தேதி வரை நாடு முழுவதும் காணாமல்போன 2,42,938 குழந்தைகளில், 1,70,173 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிஆர்ஒய் அமைப்பின் வடக்கு மண்டல இயக்குநர் சோஹா மோத்ரா கூறுகையில், "காணாமல்போகும் குழந்தைகளைக் கண்டுபிடிப்பதில் காவல் துறையினரின் பங்குதான் முதன்மையானதாகும். ஐசிபிஎஸ் திட்டத்தில் இந்தப் பிரச்னைக்கு சமூக அளவில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், விசாரணையில் அண்டை மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து நடத்தப்பட வேண்டும். மீட்பு, மறுவாழ்வு திட்டங்களுக்கு தேவையான வளங்களை ஏற்படுத்தி அதில், பயிற்சி பெற்றவர்களை ஈடுபடுத்த வேண்டியது அவசியம்' என்றார். 
ஏபிஆர் அமைப்பின் மாநில அமைப்பாளர் ரீனா பாணர்ஜி கூறுகையில், "ஒவ்வொரு பகுதியில் உள்ள சமூக அமைப்புகள் தங்களுக்கு இடையே குழந்தைகள் கண்காணிப்பு குழுக்களை அமைத்து செயல்பட வேண்டும். இதுபோன்று செயல்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் குழந்தைகள் காணாமல்போகும் சம்பவம் நடைபெறவில்லை.
அப்படியே குழந்தைகள் காணாமல்போகும் சமயத்தில் இந்தக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உடனடியாக தகவலைத் தெரிவித்து மீட்க நடவடிக்கை எடுப்பார்கள்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com