நியூயார்க்: ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் சுஷ்மா சந்திப்பு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்து
நெல்சன் மண்டேலாவின் பெயரில் நடைபெற்ற அமைதி மாநாட்டில் உரை நிகழ்த்தும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.
நெல்சன் மண்டேலாவின் பெயரில் நடைபெற்ற அமைதி மாநாட்டில் உரை நிகழ்த்தும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்து பேசினார்.
ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சுஷ்மா ஸ்வராஜ் சென்றுள்ளார். அங்கு அவர், ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் மேரீஸ் பெய்ன், மங்கோலிய வெளியுறவுத் துறை அமைச்சர் தாம்தின் சோக்பதார், நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலி, ஸ்பெயின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோசப் பொரல், கொலம்பிய வெளியுறவுத் துறை அமைச்சர் கார்லஸ் ஹோல்ம்ஸ் ஆகியோரை தனித்தனியே சந்தித்துப் பேசினார்.
இதேபோல், ஈகுவடார் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோஸ் வாலன்சியா, ஐரோப்பிய யூனியன் வெளியுறவுத் துறை இலாகா மூத்த பிரதிநிதி பெடரிகா மொஹர்ஜினி, மொரக்கோ வெளியுறவுத் துறை அமைச்சர் நாஸர் பௌரிடா உள்ளிட்டோரையும் அவர் சந்தித்து பேசினார்.
இதனிடையே, நியூயார்க்கில் தென்னாப்பிரிக்காவின் மறைந்த முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் பெயரில் நடைபெற்ற அமைதி மாநாட்டிலும் சுஷ்மா ஸ்வராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
மோதல்கள், பயங்கரவாதம், வெறுப்புணர்வு சித்தாந்தங்கள் ஆகியவற்றை உலகம் தற்போது எதிர்கொண்டுள்ளது; பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதையும், பயங்கரவாத செயல்களையும் யாரும் அனுமதிக்கக் கூடாது.
நெல்சன் மண்டேலாவால் முன்வைக்கப்பட்ட மன்னித்தல், அன்பு செலுத்துதல், அனைவரையும் அரவணைத்தல் ஆகிய கோட்பாடுகள், முன்பை விட தற்போதுதான் மிகவும் அவசியமாகும். மடிபாவுடன் (மண்டேலா) இந்தியாவுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. அவரை தங்களில் ஒருவராகவே இந்தியர்கள் கருதினர். அவரை பாரத ரத்னாவாக அழைப்பதில் பெருமிதம் அடைகிறோம்.
அவரது வாழ்க்கை, அனைவருக்கும் உத்வேகத்தை அளிக்கக் கூடியது. பாகுபாடு, பிரச்னைகள் ஆகியவற்றை எதிர்கொள்வதில், மிகவும் துணிச்சல் உடையவராகவும், அச்சமில்லாதவராகவும் அவர் செயல்பட்டார் என்று சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.
முன்னதாக, ஐ.நா. தலைமையகத்தில் நெல்சன் மண்டேலாவின் உருவச் சிலை ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸால் திறந்து வைக்கப்பட்டது. 
இந்நிகழ்ச்சியில் தென்னாப்பிரிக்க அதிபர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com