நிர்மலா சீதாராமன் அடுத்த மாதம் பிரான்ஸ் பயணம்

இந்தியா-பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம், பிரான்ஸில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கிறது. 
நிர்மலா சீதாராமன் அடுத்த மாதம் பிரான்ஸ் பயணம்


இந்தியா-பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம், பிரான்ஸில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அங்கு செல்லவிருப்பதாக அத்துறையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரஃபேல் ஒப்பந்தம் குறித்து பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்சுவா ஹொலாந்த் கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அந்த நாட்டுக்கு நிர்மலா சீதாராமன் செல்லவிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதுதொடர்பாக பாதுகாப்புத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கடந்த மார்ச்சில் இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போது, இந்திய-பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர்களின் கூட்டத்தை ஆண்டுதோறும் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பாதுகாப்புத் துறை அமைச்சர்களின் முதல் கூட்டம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் அக்டோபர் 12 மற்றும் 13 ஆகிய இரு தினங்கள் நடைபெறவுள்ளது. 
இதில் பங்கேற்பதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் செல்ல இருக்கிறார். இந்த பயணத்தின் போது, அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானையும் அவர் சந்திக்க உள்ளார். இந்த கூட்டத்தில் இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. முக்கியமாக இந்திய-பசிபிக் மற்றும் மேற்கு ஆசிய பிராந்திய பிரச்னைகள் குறித்து விவாதிக்கவுள்ளனர் என்றார் அந்த அதிகாரி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com