பெங்களூரு ஏரியில் தொடரும் நச்சுக் கழிவு தாக்கம்: 10 அடி உயரத்தை தாண்டியது

பெங்களூருவில் அமைந்துள்ள பெல்லந்தூர் ஏரியில் நச்சுக் கழிவின் தாக்கம் அதிகரித்துள்ளது. இது செவ்வாய்கிழமை பெய்த மழையால் 10 அடிக்கும் மேல் உயர்ந்துள்ளது. 
பெங்களூரு ஏரியில் தொடரும் நச்சுக் கழிவு தாக்கம்: 10 அடி உயரத்தை தாண்டியது

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தென்கிழக்கு பருவ மழை காரணமாக கடந்த சில தினங்களில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் அடுத்த சில தினங்களுக்கும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், பெங்களூருவில் அமைந்துள்ள பெல்லந்தூர் ஏரியில் நச்சுக் கழிவின் தாக்கம் அதிகரித்துள்ளது. இது செவ்வாய்கிழமை பெய்த மழையால் 10 அடிக்கும் மேல் உயர்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மூச்சு விடுவதற்கும் சிரமமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

சுமார் 900 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த பெல்லந்தூர் ஏரி பெங்களூருவில் மிகப்பெரிய ஏரியாகவும் உள்ளது. இந்த ஏரியில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அப்பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் இருந்து நச்சுக் கழிவுகள் கலந்து வருகின்றன என்று சமூக ஆர்வலர்கள் புகார் கூறினர். 

அங்கு ஒவ்வொரு முறை கனமழை பெய்யும் போதும் இதுபோன்று நச்சுக் கழிவுகளின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீர் திறக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அனைத்து தொழிற்சாலைகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரி தெரிவித்தார். 

முன்னதாக, பிப்ரவரி மாதம் இதே ஏரியில் நச்சுக் கழிவு காரணமாக தீ மற்றும் கடும் புகை ஏற்பட்டது. இது சுமார் 5 ஆயிரம் ராணுவ வீரர்களை கொண்டு 7 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த ஏரியில் ஏற்படும் நச்சுக் கழிவு பாதிப்புக்கு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com