தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே தர்ணாவில் ஈடுபட்டார் மம்தா: ஜவடேகர் பளீர் 

சீட்டுக் கம்பெனி ஊழல் விவகாரத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டார் என்று மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே தர்ணாவில் ஈடுபட்டார் மம்தா: ஜவடேகர் பளீர் 

அல்வார்: சீட்டுக் கம்பெனி ஊழல் விவகாரத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டார் என்று மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் "சாரதா சிட்பண்ட்ஸ்', "ரோஸ் வேலி' ஆகிய இரு நிதி நிறுவனங்களில் முதலீட்டாளர்களின் கோடிக்கணக்கான ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டது தொடர்பான வழக்குகளை, சிபிஐ விசாரித்து வருகிறது. மேற்கண்ட நிறுவனங்களுடன் தொடர்புடையதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான மின்னணு ஆதாரங்களை அழிக்க முயற்சிப்பதாக, கொல்கத்தா மாநகர காவல்துறை ஆணையர் ராஜீவ் குமார் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக விசாரணை நடத்த கொல்கத்தாவிலுள்ள அவரது இல்லத்துக்கு சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சென்றனர். ஆனால், உரிய ஆவணங்களின்றி விசாரணை நடத்த வந்துள்ளதாக கூறி, அவர்களை காவல்துறை உயரதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

பின்னர், அவர்களை வலுக்கட்டாயமாக  காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். சிறிது நேரத்துக்கு பிறகு, சிபிஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர். மேற்கு வங்க காவல்துறையினரின் இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக மம்தா பானர்ஜி, "அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்' என்ற பெயரில் கொல்கத்தாவின் மெட்ரோ சேனல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவில் தர்னாவை தொடங்கினார்.

முன்னதாக தனது அதிகாரிகள் நடத்தப்பட்ட விதம் தொடர்பாக சிபிஐ  உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவை செவ்வாயன்று காலை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு கூறியதாவது

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரை கைது செய்யக் கூடாது. அதே சமயம் சிபிஐ விசாரணைக்காக மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ராஜீவ் குமார் ஆஜராக வேண்டும்.

சிபிஐ தொடர்ந்த வழக்கு குறித்து மேற்கு வங்க முதன்மைச் செயலரும், காவல்துறை டிஜிபி மற்றும் ஆணையர் ராஜீவ் குமார் ஆகியோர் பிப்ரவரி 18ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். பிப்ரவரி 20ம் தேதியன்று நடைபெறும் விசாரணையன்று 3 பேரும் நேரில் ஆஜராக வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதையடுத்து மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் மூன்று நாட்களாக நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை செவ்வாய் இரவு வாபஸ் பெற்றார்.

இந்நிலையில் சீட்டுக் கம்பெனி ஊழல் விவகாரத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டார் என்று மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

புதனன்று மத்திய பிரதேச மாநிலம் அல்வாரில் பாஜக உறுப்பினர்கள் மத்தியில் பேசிய அவர் கூறியதாவது:

கொல்கத்தா மாநகர காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரை சிபிஐ விசாரணையில் இருந்து காப்பதற்காக மம்தா தர்ணாவில் ஈடுபட்டார். ஆனால் உண்மை என்னவென்றால் சீட்டுக் கம்பெனி ஊழல் விவகாரத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே மம்தா பானர்ஜி தர்ணாவில் ஈடுபட்டார். இருபதாயிரம் நபர்களிடம் இருந்து ரூ.40 ஆயிரம் கோடி பணத்தினை கையாடல் செய்துள்ள மாபெரும் ஊழல் அது. சிபிஐயின் தொடர் விசாரணையில் இந்த ஊழலில் ஈடுபட்டவர்களின் பெயர்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் துவங்கியது. மம்தா கொல்கத்தாவில் சட்டத்தை தனது கையில் எடுத்துக் கொண்டு செயல் பட்டுள்ளார். அதை பொதுமக்களும் உணர்ந்து கொண்டுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com