இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து மல்லையா மனு

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து மல்லையா மனு

கடன் மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, தாம் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார்.


கடன் மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, தாம் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார்.
இந்தியாவிலுள்ள பொதுத் துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் வாங்கிய தொழிலதிபர் விஜய் மல்லையா, அந்தப் பணத்தைத் திருப்பிச் செலுத்தத் தவறியதாக அவர் மீது கடந்த 2016-ஆம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது. எனினும், அவரை அதிகாரிகள் கைது செய்வதற்கு முன்னரே அவர் லண்டன் தப்பிச் சென்றார். அதையடுத்து, அவர் தலைமறைவுக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், பிரிட்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக நடைபெற்று வந்த வழக்கில், மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அந்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பிரிட்டன் சட்ட விதிகளின்படி, மல்லையாவை நாடு கடத்துமாறு பிரிட்டன் உள்துறை அமைச்சகத்துக்கு நீதிமன்றம் பரிந்துரைத்தது. 
அதையடுத்து, மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தி அனுப்பும் உத்தரவில் பிரிட்டன் உள்துறை அமைச்சர் சஜீத் ஜாவித் கையெழுத்திட்டார். எனினும், அந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய மல்லையாவுக்கு 14 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தம்மை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி லண்டன் உயர்நீதிமன்றத்தின் நிர்வாகப் பிரிவில் விஜய் மல்லையா வியாழக்கிழமை விண்ணப்பித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகையில், இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான மல்லையாவின் விண்ணப்பம் உயர்நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குள் இதுகுறித்து முடிவெடுக்கப்படும்.
அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், வழக்கின் மறுவிசாரணைக்கு விஜய் மல்லையா விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். அந்த விசாரணையின்போது மல்லையா தரப்பிடமும், இந்திய அரசுத் தரப்பிடமும் 30 நிமிடங்கள் விசாரணை நடத்தி, இதுகுறித்து முடிவெடுக்கப்படும். இந்த விசாரணையை நடத்த நீதிபதிகள் கிடைப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அது பல மாதங்களுக்கு இழுத்தடிக்கப்படக்கூடிய வாய்ப்புள்ளது.
எனவே, விஜய் மல்லையாவை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்தும் சூழல் ஏற்படாது என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com