பிணைத்தொகைக்கு வட்டி கோரும் கார்த்தி சிதம்பரத்தின் மனு தள்ளுபடி

நீதிமன்றத்தில் செலுத்தும் ரூ.10 கோடி பிணைத்தொகையை வட்டி கிடைக்கும் வகையில் சேமித்து வைக்கக் கோரிய கார்த்தி சிதம்பரத்தின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பிணைத்தொகைக்கு வட்டி கோரும் கார்த்தி சிதம்பரத்தின் மனு தள்ளுபடி


நீதிமன்றத்தில் செலுத்தும் ரூ.10 கோடி பிணைத்தொகையை வட்டி கிடைக்கும் வகையில் சேமித்து வைக்கக் கோரிய கார்த்தி சிதம்பரத்தின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
டென்னிஸ் தொடர் ஒன்றில் கலந்துகொள்ள வேண்டியிருப்பதால், பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளுக்குச் செல்ல கடந்த ஜனவரி மாதம் 30-ஆம் தேதி அனுமதி அளித்தது.
ஆனால், நீதிமன்றத்தின் பொதுச் செயலாளரிடம் பிணைத்தொகையாக ரூ.10 கோடியைச் செலுத்த வேண்டும் எனவும், வெளிநாட்டிலிருந்து திரும்பிய பிறகு அந்தத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும், ஏர்செல்-மேக்சிஸ், ஐஎன்எக்ஸ் மீடியா ஆகிய வழக்குகள் தொடர்பாக வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அமலாக்கத் துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தான் செலுத்தும் பிணைத்தொகையை வட்டி கிடைக்கும் வகையிலான குறுகிய கால டெபாசிட் கணக்கில் 3 மாதங்களுக்குச் சேமித்து வைக்கக் கோரி கார்த்தி சிதம்பரத்தின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், இதுபோன்ற கோரிக்கைகளை மனுதாரர் முன்வைத்தால், அடுத்தமுறை வெளிநாடு செல்ல அவர் அனுமதி கோரும்போது அது குறித்து முடிவெடுக்க நாங்கள் மேலும் பல விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறி, மனுவைத் தள்ளுபடி செய்தனர். 
ஏர்செல்-மேக்சிஸ், ஐஎன்எக்ஸ் மீடியா ஆகிய வழக்குகள் தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்குப் பதிவு செய்துள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக அவரிடம் அவ்வப்போது விசாரணையும் நடத்தி வருகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com