புல்வாமா தாக்குதலில் மூளையாக இருந்தவன் 2 மாதங்களுக்கு முன்பே இந்தியாவுக்குள் ஊடுருவினானா?

புல்வாமா தாக்குதலில் மூளையாக இருந்து செயல்பட்ட இரண்டு பயங்கரவாதிகள் இன்று சுட்டுக் கொல்லப்பட்டனர்.
புல்வாமா தாக்குதலில் மூளையாக இருந்தவன் 2 மாதங்களுக்கு முன்பே இந்தியாவுக்குள் ஊடுருவினானா?

புது தில்லி: புல்வாமா தாக்குதலில் மூளையாக இருந்து செயல்பட்ட இரண்டு பயங்கரவாதிகள் இன்று சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த பயங்கரவாதிகள் இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்திய எல்லைக்குள் ஊடுருவி வந்து, பயங்கரவாத சதித் திட்டம் குறித்து திட்டமிட்டு, அடில் அகமது உள்ளிட்டவர்களுக்கு சதித் தீட்டத்தை நிறைவேற்ற பயிற்சி அளித்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டது ஜெய்ஷ் - இ - மொஹம்மது பயங்கரவாத இயக்கத்தின் தளபதி ரஷீத் காஸி என்று புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. ரஷீத் காஸி குப்வாரா அருகே இந்திய எல்லைக்குள் சில உதவியாளர்களுடன் இரண்டு மாதங்களுக்கு முன்பு, வெவ்வேறு பகுதிகளில்  ஊடுருவியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவன் கண்ணிவெடித் தாக்குதலில் கைதேர்ந்தவன் என்றும், பிப்ரவரி 14ம் தேதி தற்கொலைத் தாக்குதல் நடத்திய அடில் அகமது தாருக்கு இவன் பயிற்சி அளித்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு உதவிய மற்றொரு பயங்கரவாதி கம்ரான். இவன் பூஜ்ச் அருகே எல்லைக்குள் ஊடுருவி வந்திருக்கலாம். முக்கியமாக, இந்த தாக்குதலை நடத்த பாகிஸ்தானில் இருந்து எத்தனை பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பார்கள் என்பதை இந்திய ராணுவத்தினரால் இதுவரை உறுதி செய்ய முடியவில்லை. ஆனால் குறைந்தது 10 பயங்கரவாதிகளாவது இந்த சதிச் செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

இந்த தீவிரவாதிகள் அனைவரும் குறிப்பிட்ட இடைவெளியில் இந்திய எல்லைக்குள் ஊடுருவியிருக்கலாம் என்றும், பெரும்பாலும் பூஞ்ச் அருகே ஊடுருவியிருக்க வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவுக்குள் ஊடுருவிய அனைத்து பயங்கரவாதிகளும் தங்களுடன் ஏராளமான வெடிபொருட்களை சுமந்து வந்திருக்கின்றனர். இதன் மூலம் எல்லையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பாதுகாப்பு நடவடிக்கையின் உறுதித் தன்மையில் கேள்வி எழுகிறது.

புல்வாமா தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்யும் நிபுணர்கள் அனைவரும், இந்த சதித்திட்டம் மிகவும் திட்டமிட்டு தாக்குதல் நடக்கும் நேரம், இடம் உள்ளிட்டவை துல்லியமாக முடிவு செய்து நடத்தப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.
 

இந்த நிலையில் தெற்குக் காஷ்மீரில், புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டதாகக் கூறப்படும் ரஷீத் மற்றும் கம்ரான் ஆகியோர் மறைந்திருக்கும் பகுதியை ராணுவத்தினர் சுற்றி வளைத்து கடுமையான துப்பாக்கிச் சூடு நடத்தியதில்,  இருவரும் கொல்லப்பட்டதாக ராணுவத்தினர் இன்று அறிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com