இந்தியா

பிரிவினைவாத தலைவர்கள் பாதுகாப்பு வாபஸ்: ஜம்மு-காஷ்மீர் அரசு அதிரடி

தினமணி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பிரிவினைவாதத் தலைவர்கள் 6 பேருக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை அந்த மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளது. புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் 40 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கையை அந்த மாநில அரசு எடுத்துள்ளது.
 இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு மூத்த அதிகாரிகள் கூறியதாவது:
 பிரிவினைவாதத் தலைவர்கள் மிர்வாய்ஸ் உமர் பரூக், அப்துல் கனி பட், பிலால் லோன், ஹாஷிம் குரேஷி, பசல் ஹக் குரேஷி, ஷப்பீர் ஷா ஆகிய 6 பேருக்கு பயங்கரவாதிகளால் இருக்கும் அச்சுறுத்தலை கவனத்தில் கொண்டு அவர்களுக்கு மாநில அரசு பாதுகாப்பு அளித்து வந்தது. மிர்வாய்ஸ் உமர் பரூக்கின் தந்தை மிர்வாய்ஸ் ஃபரூக்கை கடந்த 1990-ஆம் ஆண்டில் பயங்கரவாதிகள் கொலை செய்தனர். இதேபோல், அப்துல் கனி லோனை கடந்த 2002-ஆம் ஆண்டில் கொலை செய்தனர். இதை பரிசீலித்து மேற்கண்ட 6 பிரிவினைவாத தலைவர்களுக்கும் மாநில அரசு பாதுகாப்பு அளித்தது. அதேநேரத்தில் தீவிர நிலைப்பாட்டை வலியுறுத்தி வரும் பிரிவினைவாதத் தலைவர்களான சையது அலி ஷா கிலானி, யாசின் மாலிக் ஆகியோருக்கு மாநில அரசு சார்பில் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை.
 புல்வாமா தாக்குதல் சம்பவம் குறித்து ஆய்வு நடத்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சனிக்கிழமை வந்தபோது மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநில அரசின் பாதுகாப்பில் இருக்கும் பிரிவினைவாதிகள், பாகிஸ்தானிடம் இருந்தும், அந்நாட்டின் உளவுத்துறையிடம் இருந்தும் நிதியுதவி பெறுவதாகவும், இதனால் அவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் தெரிவித்தார். இதன்படி, 6 பிரிவினைவாதத் தலைவர்களுக்கும் அளிக்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பை மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை திரும்பப் பெற்றது.
 பிரிவினைவாதத் தலைவர்கள் 6 பேருக்கும், அவர்களின் வீட்டுக்கும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸார் ஞாயிற்றுக்கிழமை மாலை திரும்பப் பெறப்பட்டனர். இதேபோல், பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பிற சலுகைகளையும் திரும்பப் பெறுவதற்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 ஹூரியத் கருத்து: ஜம்மு-காஷ்மீர் அரசின் இந்நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹூரியத் அமைப்பு, உண்மை நிலவரம் இதனால் மாறிவிடாது எனக் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "ஹூரியத் தலைவர்களின் இல்லங்களில் போலீஸார் பாதுகாப்புக்கு இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, உண்மை நிலவரம் எதுவும் மாறிவிடாது. அப்படியேதான் இருக்கும். தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று மாநில அரசிடம் ஹூரியத் தலைவர்கள் ஒருபோதும் கேட்டதில்லை. ஆனால் மாநில அரசுதான், ஹூரியத் தலைவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து, அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை என்று வலியுறுத்தி வந்தது. அதே அரசுதான், போலீஸ் பாதுகாப்பை திரும்பப் பெறுவது தொடர்பான முடிவை தற்போது எடுத்துள்ளது. இதனால் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை' என்றார்.
 பாஜக வரவேற்பு: பிரிவினைவாதத் தலைவர்கள் 6 பேரின் போலீஸ் பாதுகாப்பை ஜம்மு-காஷ்மீர் அரசு திரும்பப் பெற்றிருப்பதை பாஜக வரவேற்றுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் ஜம்மு-காஷ்மீர் மாநில தலைவர் ரவீந்தர் ரெய்னா கூறியதாவது:
 காஷ்மீர் மக்களின் உண்மையான எதிரிகளே, ஹூரியத் தலைவர்கள்தான். காஷ்மீர் பள்ளத்தாக்கின் அமைதியை சீர்குலைப்பவர்கள் அவர்கள்தான். அவர்களுக்கான போலீஸ் பாதுகாப்பை திரும்பப் பெற்றிருப்பது வரவேற்கக்கூடிய நடவடிக்கையாகும். அவர்களை கைது செய்து, திகார் மற்றும் ஜோத்பூர் சிறைச்சாலைகளில் அடைத்தால் நன்றாக இருக்கும்.
 ஹூரியத் தலைவர்கள் பாவிகள். புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு, ஹூரியத் தலைவர்கள்தான் பொறுப்பு. காஷ்மீர் மக்கள் தற்போது பயங்கரவாத பிரச்னையை எதிர்கொள்கிறார்கள் எனில், அதற்கு கிலானி, மிர்வாய்ஸ், ஷப்பீர் ஷா, யாசின் மாலிக் ஆகியோர்தான் காரணம். அவர்களது வாரிசுகள், லண்டனில் கல்வி பயிலுகின்றனர். ஐரோப்பாவில் சந்தோஷமாக இருக்கின்றனர். துபையில் அவர்களுக்கு சொத்துகள் இருக்கின்றன. ஆனால் காஷ்மீரில் இருக்கும் சிறார்களை கல்வீச்சில் ஈடுபடும்படியும், அப்பாவிகளை கொலை செய்யும்படியும் ஹூரியத் தலைவர்கள் தூண்டி விடுகின்றனர் என்றார் அவர்.
 பின்னணி: ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் சென்ற வாகனங்களை குறிவைத்து தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் கடந்த வியாழக்கிழமை தாக்குதல் நடத்தினார். வெடிபொருள் நிரப்பப்பட்ட வாகனத்துடன் வந்து, சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற பேருந்து மீது மோதி வெடிக்க செய்தார். இதில் பேருந்தில் சென்ற சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் உடல்சிதறி பலியாகினர். 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
 இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கு தக்க நேரத்தில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று இந்திய அரசு தெரிவித்தது. பிரதமர் நரேந்திர மோடியும், இந்திய வீரர்களின் உயிர் தியாகம் வீண் போகாது என்று அறிவித்தார். பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தையும் இந்தியா திரும்பப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, காஷ்மீரைச் சேர்ந்த பிரிவினைவாத தலைவர்கள் 6 பேரின் போலீஸ் பாதுகாப்பை ஜம்மு-காஷ்மீர் அரசு வாபஸ் பெற்றுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திற்பரப்பு அருவி நீச்சல் குளத்தில் மூழ்கி பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா் பலி

தீரா் சத்தியமூா்த்தி நினைவு நாள்

புதுகையில் ஆட்சியரகம் முன்பு கருகிய நெற்பயிா்களைக் கொட்டி போராட்டம்

திருச்சி தொகுதி தோ்தல் பாா்வையாளா் புதுக்கோட்டையில் ஆய்வு

கந்தா்வகோட்டை பள்ளியில் நலக் கல்வி மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT