பாலகிருஷ்ண  ரெட்டி மேல்முறையீடு வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மேல்முறையீட்டு வழக்கு தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. 
பாலகிருஷ்ண  ரெட்டி மேல்முறையீடு வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு


தமிழக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மேல்முறையீட்டு வழக்கு தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. 
1998-ஆம் ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பாகனூரில், கர்நாடக எல்லையில் நடைபெற்ற போராட்டத்தின் போது கல்வீச்சு மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி உள்பட 16 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. 
மேலும், பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இத் தீர்ப்பை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 
அதில் இந்த வழக்கு விசாரணையின்போது பாலகிருஷ்ணா ரெட்டி தரப்பில், இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவு வந்ததுமே அமைச்சர் பதவியை பாலகிருஷ்ணா ரெட்டி ராஜிநாமா செய்துள்ளார். சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்கப் பரிசீலிக்க வேண்டும் என கோரப்பட்டது. ஆனால், சிறப்பு நீதிமன்றம் விதித்த உத்தரவுக்குத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து, தனக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி பாலகிருஷ்ணா ரெட்டி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீடு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி வினித் சரண் அறையில் பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, விசாரணை நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து பாலகிருஷ்ண ரெட்டிக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, பாலகிருஷ்ண ரெட்டி சார்பில் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி, 3 ஆண்டுச் சிறை தண்டனையை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரினார். இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், இது தொடர்பான மனு மீது தமிழக அரசு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். அதுவரை சரணடைவதில் இருந்து அளிக்கப்பட்ட விலக்கு தொடரும் எனத் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com