புல்வாமா தாக்குதல்: பாகிஸ்தான் ராணுவத்துக்கு தொடர்பு- இந்திய ராணுவம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த 14ஆம் தேதி நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம், ஐஎஸ்ஐ உளவு அமைப்பு ஆகியவற்றுக்கு தொடர்பிருப்பதாக
புல்வாமா தாக்குதல்: பாகிஸ்தான் ராணுவத்துக்கு தொடர்பு- இந்திய ராணுவம்


ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த 14ஆம் தேதி நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம், ஐஎஸ்ஐ உளவு அமைப்பு ஆகியவற்றுக்கு தொடர்பிருப்பதாக இந்திய பாதுகாப்புப் படை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஸ்ரீநகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்திய ராணுவத்தின் துணைத் தளபதி கே.ஜே.எஸ். தில்லான், காஷ்மீர் காவல்துறை ஐ.ஜி. எஸ்.பி. பானி, சிஆர்பிஎஃப் ஐ.ஜி. ஜூல்பிகர் ஹசன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு, ஸ்ரீநகரில் பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
புல்வாமாவில் 14ஆம் தேதி தாக்குதலை நடத்தியது ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பாகும். அந்த அமைப்பை ராணுவம், ஐஎஸ்ஐ உளவு அமைப்பு மூலம் பாகிஸ்தான் அரசுதான் கட்டுப்படுத்துகிறது. அந்த அமைப்பில் இருக்கும் தளபதிகளில் பெரும்பாலானோர், பாகிஸ்தானியர்கள். அவர்கள்தான் காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பை வழிநடத்துதல், கட்டுப்படுத்துதல், தாக்குதல் சதித் திட்டத்தை செயல்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்கின்றனர்.
புல்வாமாவில் தற்கொலைத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருள்கள் போல, இதற்கு முன்பு காஷ்மீரில் வேறு எந்த தாக்குதல்களிலும் பயன்படுத்தப்பட்டதில்லை. சிரியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில்தான் தாக்குதலுக்கு இவ்வளவு அதிகமாக வெடிபொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பு, பாகிஸ்தான் ராணுவத்தால் தோற்றுவிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும். அந்த அமைப்பை கட்டுப்படுத்துவது பாகிஸ்தான் ராணுவமும், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயும்தான்.
புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு நேரடி தொடர்பு இருப்பது 100 சதவீதம் உறுதியாகும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளில் சேர்ந்துள்ள இளைஞர்களின் பெற்றோர்களுக்கு ஓர் வேண்டுகோள் விடுக்கிறோம். பயங்கரவாதத்தை கைவிட்டு, சரணடையும்படியும், அமைதி வாழ்க்கைக்கு திரும்பும்படியும் தங்களது மகன்களை பெற்றோர் வலியுறுத்த வேண்டும். இல்லையெனில், அவர்களின் மகன்கள் கொல்லப்படுவர்.
காஷ்மீரில் துப்பாக்கிகளை கைகளில் எடுத்தவர்கள், சரணடைய வேண்டும், இல்லையெனில் அவர்கள் கொல்லப்படுவர். இதுதான் அவர்களுக்கு நாங்கள் விடுக்கும் எச்சரிக்கை செய்தியாகும். புல்வாமாவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-ஏ-முகமதுவின் தளபதியாக காஷ்மீரில் செயல்பட்ட கம்ரான், அந்தத் தாக்குதல் நடைபெற்ற 100 மணி நேரங்களில் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டு விட்டார். புல்வாமா தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி கம்ரானின் செயல்பாடுகளை பாதுகாப்புப் படை தீவிரமாக கண்காணித்தது. அதையடுத்து, அந்த அமைப்பினரை சுற்றிவளைத்து தாக்குதல் தொடுத்தது. இதில் கம்ரான் கொல்லப்பட்டார்.
எல்லை வழியே பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளை ஊடுருவ செய்து வருகிறது. அவ்வாறு இந்தியாவுக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகள் யாரும் உயிருடன் திரும்பிச் செல்ல மாட்டார்கள் என்று அவர்கள் தெரிவித்தனர்.
புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற பேருந்து மீது வெடிபொருள் நிரப்பப்பட்ட வாகனத்தை மோதி ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் வெடிக்க செய்தார். இதில் 40 வீரர்கள் பலியாகினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com