விவசாயிகளுக்கு ரூ.6,000 வழங்கும் திட்டம் மோடிக்கு வாக்குகளைப் பெற்றுத் தரும்: ஆய்வு தகவல்

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 உதவித்தொகை வழங்கும் திட்டம் வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான


விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 உதவித்தொகை வழங்கும் திட்டம் வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணிக்கு வாக்குகளைப் பெற்றுத் தரும் என்று ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த நிதிச்சேவை நிறுவனமான யூபிஎஸ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பசுவதைத் தடைச் சட்டத்தால், உத்தரப் பிரதேசத்தில் கால்நடைகள் அநாதையாக கைவிடப்பட்டு பொது இடங்களில் அதிகம் சுற்றித் திரியும் பிரச்னை தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்பு உள்ளது என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதத் தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் சிறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 உதவித் தொகை அளிக்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டது. இதன்படி சுமார் 5 ஏக்கர் (2 ஹெக்டேர்) வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஓராண்டில் 3 தவணைகளாக ரூ.6,000 அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதன் மூலம் 12 கோடி விவசாயிகள் பயனடைவார்கள். இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.20,000 கோடியும், அடுத்த நிதியாண்டில் ரூ.75,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஒரு நாளைக்கு சுமார் 17 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. இதனால் அவர்களுக்கு பயன் ஏதுமில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில் வரும் மக்களவைத் தேர்தல் குறித்து ஸ்விட்ர்லாந்து நிறுவனம் இந்தியாவில் நேரடியாக கள ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது தேசிய அளவில் மோடிக்கு ஆதரவான அலை வீசியது. ஆனால், இந்தத் தேர்தலில் அப்படி எந்த அலையும் வீசவில்லை. அதே நேரத்தில் பிரதமர் பதவிக்கு பொருத்தமான தலைவர் என்ற நிலையில் மோடி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். ஏனெனில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு மக்கள் மத்தியில் மோடியைவிட குறைவாகவே செல்வாக்கு உள்ளது.
ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 வழங்கும் திட்டம், மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்குகளைப் பெற்றுத் தரும். அதே நேரத்தில் நாட்டில்அதிகபட்சமாக 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில், அநாதையாக கைவிடப்பட்ட கால்நடைகள், வயல்வெளி, தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இது அரசு மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தலில் அந்தந்த பிராந்தியப் பிரச்னைகளும் அதிகம் எதிரொலிக்க வாய்ப்பு உள்ளது.
வேலையின்மை பிரச்னை, கிராமப்புற பொருளாதாரம் மேம்படாதது, ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையின் பாதிப்புகளை எதிர்க்கட்சிகள் முன்னிறுத்தி பிரசாரம் செய்யும்போது அது அவர்களுக்கு சாதகமாக அமையும் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com