பயங்கரவாதமும், பருவநிலை மாற்றமும் இரு பெரும் சவால்கள்: பிரதமர் மோடி

பயங்கரவாதமும், பருவநிலை மாற்றமும் மனித குலம் எதிர்கொண்டிருக்கும் இரு பெரும் சவால்களாக உள்ளன; இவ்விரு சவால்களில் இருந்தும்
தென்கொரியாவின் சியோல் நகரில் உள்ள யோன்செய் பல்கலைக்கழகத்தில் மகாத்மா காந்தியின் சிலையை  வியாழக்கிழமை திறந்து வைத்த பிரதமர் மோடி, தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன்.
தென்கொரியாவின் சியோல் நகரில் உள்ள யோன்செய் பல்கலைக்கழகத்தில் மகாத்மா காந்தியின் சிலையை  வியாழக்கிழமை திறந்து வைத்த பிரதமர் மோடி, தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன்.


பயங்கரவாதமும், பருவநிலை மாற்றமும் மனித குலம் எதிர்கொண்டிருக்கும் இரு பெரும் சவால்களாக உள்ளன; இவ்விரு சவால்களில் இருந்தும் மீண்டுவருவதற்கு மகாத்மா காந்தியின் போதனைகளும், கொள்கைகளும் உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பயங்கரவாதத்தை எதிர்கொள்வது குறித்து மோடி தெரிவித்திருக்கும் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
இரண்டு நாள் பயணமாக, தென்கொரியாவுக்கு வியாழக்கிழமை வந்த அவர், அந்நாட்டு அதிபர் மூன் ஜே-இன்னை, தலைநகர் சியோலில் சந்தித்துப் பேசினார். பின்னர், அங்குள்ள யோன்செய் பல்கலைக்கழகத்தில் மாகாத்மா காந்தியின் மார்பளவுச் சிலையை மோடி, மூன் ஜே-இன், ஐ.நா. முன்னாள் பொதுச் செயலர் பான்-கி-மூன் ஆகியோர் கூட்டாகத் திறந்து வைத்தனர். அப்போது, மோடி பேசியதாவது:
தென்கொரியாவின் முன்னணி பல்கலைக்கழகத்தில் மகாத்மா காந்தியின் சிலையைத் திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை மிகப்பெரிய கெளரவமாகக் கருதுகிறேன். அவரது 150-ஆவது ஆண்டு பிறந்த தினம் கொண்டாடப்படும் இந்த வேளையில், அவருக்கு சிலை திறக்கப்படுவது முக்கியத்துவம் நிறைந்த நிகழ்வாகும்.
பயங்கரவாதமும், பருவநிலை மாற்றமும் தற்போது மனித குலம் எதிர்கொண்டிருக்கும் இரு பெரும் சவால்களாக உள்ளன. இந்த நேரத்தில் மகாத்மா காந்தியின் வாழ்க்கையையும், அவரது போதனைகளையும் ஆராய்ந்தால், அந்த இரு பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
தீர்க்கதரிசியான அவர், எதிர்கால பிரச்னைகளுக்கு முன்கூட்டியே தீர்வு அளித்து விட்டுச் சென்றிருக்கிறார்.பயங்கரவாதப் பாதையில் செல்வோரை அஹிம்சை வழி மூலமாக மனமாற்றம் ஏற்படுத்துவதன் மூலம், பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும் என்று காந்தி போதித்துள்ளார்.
எனது நண்பரான பான்-கி-மூன், ஐ.நா. பொதுச் செயலராக பதவி வகித்த காலத்தில், மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை அஹிம்சை தினமாக அறிவித்தார். இதனால், பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கான வலிமையை நாம் பெற்றுள்ளோம். கடந்த நூற்றாண்டில் மனித குலத்துக்கு கிடைத்த மிகப்பெரிய கொடை மகாத்மா காந்தி. அவர் தனது போதனைகள், கொள்கைகள் ஆகியவற்றின் மூலம், எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கூறியிருக்கிறார். கடவுளும், இயற்கையும் மனிதர்களுக்குத் தேவையான அனைத்தையும் அளித்திருக்கிறார்கள். ஆனால், மனிதன் பேராசை கொள்ளக் கூடாது; அவ்வாறு செய்தால் அனைத்து இயற்கை வளங்களையும் இழக்க நேரிடும். நமது வாழ்க்கை முறை, தேவையைச் சார்ந்து இருக்க வேண்டும்; பேராசையின் அடிப்படையில் இருக்கக் கூடாது என்று காந்தி கூறியிருக்கிறார்.
அவரது காலத்தில், பருவநிலை மாற்றம் குறித்தோ, புவி வெப்பமயமாதல் குறித்தோ எந்தவொரு விவாதமும் நடைபெறவில்லை. ஆனால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு செயலையும் அவர் செய்ததில்லை. இயற்கையுடன் இயைந்து வாழ வேண்டும் என்று கற்றுக் கொடுத்திருக்கிறார். எதிர்கால சந்ததியினருக்காக, பூமிப்பந்தை தூய்மையாகவும், பசுமையாகவும் வைத்திருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார் என்று மோடி கூறினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய பான்-கி-மூன், காந்தியின் போதனைகளால் தாம் பெரிதும் ஈர்க்கப்பட்டதாகக் கூறினார். அவர் மேலும் கூறுகையில், நான் தூதரகப் பணியை, கடந்த 1972-இல் இந்தியாவில் இருந்து தொடங்கினேன். அப்போது, காந்தியின் கொள்கைகளால் பெரிதும் கவரப்பட்டேன் என்றார். 
போதி மரம் பரிசளிப்பு: நிகழ்ச்சியைத் தொடர்ந்து, தென்கொரிய நகர மேயர் கிம்ஹேவை சந்தித்த பிரதமர் மோடி, அவருக்கு போதி மரத்தை பரிசளித்தார். இந்தியா-தென்கொரியா இடையேயான உறவை குறிப்பிடும் விதமாக அந்த போதி மரம் பரிசளிக்கப்பட்டது.
அயோத்தியையும், கிம்ஹே நகரையும் இரட்டை நகரங்களாக மேம்படுத்துவதற்கு கடந்த 2000-ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, அயோத்தி நகரம் மேம்படுத்தப்பட்டது. அதன் பிறகு, தென்கொரியாவில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் அயோத்தி வருகின்றனர்.
முதலீடு செய்ய அழைப்பு: முதலீட்டுக்கு உகந்த சூழல் நிலவும் இந்தியாவில் தென்கொரிய நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்று மோடி அழைப்பு விடுத்துள்ளார். சியோல் நகரில் நடைபெற்ற இரு நாட்டு தொழில்துறை தலைவர்கள் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: ஹூண்டாய், சாம்சங், எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் என ஏற்கெனவே 600-க்கும் மேற்பட்ட கொரிய நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. இன்னும் பல நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம்.
கியா கார் தயாரிப்பு நிறுவனம், விரைவில் இந்தியாவில் விற்பனையைச் தொடங்க இருக்கிறது. கொரியவைச் சேர்ந்த தொழிலதிபர்கள் அலுவல் ரீதியாக இந்தியாவுக்கு வருவதை எளிமைப்படுத்த, இந்தியா வந்தபின் நுழைவு இசைவு வழங்கும் நடைமுறை கடந்த அக்டோபரில் அறிமுகம் செய்யப்பட்டது. வலுவான அடித்தளம் மீது இந்தியப் பொருளாதாரம் கட்டமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியப் பொருளாதாரத்தின் மதிப்பு 2.5 லட்சம் கோடி டாலராக (ரூ.177.8 லட்சம் கோடி) உள்ளது. இது, விரைவில் 5 லட்சம் கோடி டாலராக (ரூ.355.6 லட்சம் கோடி) உயரும்.
இந்தியா-தென்கொரியா இடையே கடந்த 2018-ஆம் ஆண்டில் 2,500 கோடி டாலர் (ரூ.1.78 லட்சம் கோடி) அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றது. இதை, வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 5,000 கோடி டாலராக (ரூ.3.55 லட்சம் கோடி) உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த 15 ஆண்டுகளில், உலக அளவில் பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கும் முதல் 3 நாடுகளுக்குள் இந்தியா முன்னேறும் என்றார் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com