பாகிஸ்தானுக்கான உபரி நதிநீர் நிறுத்தப்படும்: இந்தியா அடுத்த அதிரடி

சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவுக்கான பங்கிலிருந்து பாகிஸ்தானுக்கு கிடைத்து வரும் உபரி நீரை நிறுத்துவதென முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்தது. 
பாகிஸ்தானுக்கான உபரி நதிநீர் நிறுத்தப்படும்: இந்தியா அடுத்த அதிரடி


சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவுக்கான பங்கிலிருந்து பாகிஸ்தானுக்கு கிடைத்து வரும் உபரி நீரை நிறுத்துவதென முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்தது. 
பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு, சமீபத்தில் புல்வாமாவில் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்டுவரும் பதிலடி நடவடிக்கைகளில் ஒன்றாக இதுவும் கருதப்படுகிறது.
முன்னதாக, நெருங்கிய வர்த்தக கூட்டு நாடு அந்தஸ்து ரத்து, பாகிஸ்தான் பொருள்கள் இறக்குமதிக்கு 200 சதவீத கலால் வரி என அந்நாட்டுக்கு நெருக்கடி தரும் இரு நடவடிக்கைகளை ஏற்கெனவே மத்திய அரசு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உபரி நதிநீர் பகிர்வை நிறுத்தும் முடிவு குறித்து நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது சுட்டுரைப் பதிவில் வியாழக்கிழமை கூறியிருந்ததாவது:
நதிநீர் பங்கீட்டில், இந்தியாவின் பயன்பாடுபோக, இந்தியாவுக்கான பங்கிலிருந்து பாகிஸ்தானுக்கு கிடைத்து வரும் உபரி நீரை நிறுத்துவதென, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. கிழக்கிலிருந்து பாயும் நதிகளில் இருந்து இந்தியாவுக்கான பங்கில் எஞ்சியிருக்கும் உபரிநீர், இனி ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு மடைமாற்றப்படும்.
ராவி நதியில் ஷாபூர்கண்டி அணை கட்டும் பணிகள் தொடங்கி விட்டன. நமக்கான நதிநீர் பங்கானது, உஜ் நதியில் கட்டப்படும் அணையில் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து ஜம்மு காஷ்மீருக்கு பயன்படுத்தப்படும். எஞ்சிய நதிநீரானது, 2-ஆவது ராவி-பியாஸ் இணைப்பின் மூலமாக இதர மாநிலங்களுக்கு பாயுமாறு செய்யப்படும் என்று அந்த சுட்டுரைப் பதிவில் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
6 ஆண்டுகள் ஆகும்: பாகிஸ்தானுக்கான உபரிநீரை நிறுத்தும் முடிவு 2 மாதங்களுக்கு முன்பாகவே மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ள அரசு அதிகாரிகள், அதைச் செயல்படுத்த இன்னும் 6 ஆண்டுகள் ஆகலாம் என்று கூறினர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:
பஞ்சாப் மாநிலத்தில், ராவி நதி பாயும் வழித்தடத்தில் ஷாபூர்கண்டி அணையை கட்டும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்புதல் வழங்கியிருந்தது. 
தற்போது அதன் கட்டுமானப் பணிகள் தொடங்கிவிட்டன. அந்த அணையின் உயரம் 100 மீட்டரை எட்டும்போதுதான் பாகிஸ்தானுக்கான உபரிநீர் பாய்வதை தடுக்க இயலும். 
மீறல் இல்லை: இந்தியாவின் இந்த நடவடிக்கையானது எந்த வகையிலும் சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தை மீறிய வகையில் இருக்காது. ஏனெனில், இந்தியா தனக்கு உரித்தான நீரை பயன்படுத்திக் கொள்ள மேற்கொள்ளும் முயற்சியாகவே இந்த நடவடிக்கைகள் பார்க்கப்படும்.
கடந்த 1960-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தின்படி, கிழக்கிலிருந்து பாயும் ராவி, பியாஸ், சட்லஜ் நதிகளின் நீரை இந்தியா பிரதானமாக பயன்படுத்துவது எனவும், மேற்கிலிருந்து பாயும் சிந்து, ஜீலம், செனாப் நதிகளின் நீரை பாகிஸ்தான் பிரதானமாக பயன்படுத்திக் கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. 
இதில், ராவி, பியாஸ், சட்லஜ் நதிகளின் நீரில் இந்தியாவின் பங்கு என்பது, 14.37 லட்சம் கன அடியாகும். இதில் அந்த நதிகளின் குறுக்காக 3 பிரதான அணைகளை கட்டியதன் மூலமாக இந்தியா தனக்கான பங்கில் 95 சதவீத நீரை பயன்படுத்தி வருகிறது. எஞ்சிய 5 சதவீத அளவு நீர் (அதாவது 65,340 கன அடி) பாகிஸ்தானுக்கான உபரி நீராகச் செல்கிறது.
அந்நாட்டுக்கு அவ்வாறு உபரியாகப் பாயும் தனது பங்கு நீரையும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்தியா கூடுதலான அணைகளை கட்டி வருகிறது. கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவின் பங்கிலிருந்து உபரிநீரை பாகிஸ்தான் பெற்று வந்துள்ளது. எனவே, தற்போது இந்தியா தனது பங்கு நீரை நிறுத்தி வைப்பது என்பது, ஒப்பந்தத்தை மீறிய செயலாகாது என்று அந்த அதிகாரிகள் கூறினர்.
முன்னதாக, உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் நகரில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, யமுனை நதியை சுத்தப்படுத்தும் பணியை நாம் தொடங்கிவிட்டோம். இதுநாள் வரையில் நமது பங்கு நீரை பாகிஸ்தான் உபரியாகப் பெற்று வந்தது. இனி ராவி, பியாஸ், சட்லஜ் நதிகளில் 3 அணை கட்டும் திட்டங்களை செயல்படுத்தி நமது பங்கு நதிநீர் யமுனை நதிக்கு மடை மாற்றப்படும் என்று கூறியிருந்தார்.
ஷாபூர்கண்டி அணை: ராவி நதியில் ரூ.2,793 கோடி மதிப்பில் ஷாபூர்கண்டி அணை கட்டப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்கான பணிகள் கடந்த 2013-ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டபோதிலும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் எழுப்பிய சில விவகாரங்களால் அந்தத் திட்டப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பஞ்சாப்-ஜம்மு காஷ்மீர் இடையே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து அந்த திட்டப் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இந்த அணை கட்டும் திட்டத்துக்காக மத்திய அரசு நிதியுதவியாக, 2018-19 முதல் 2022-23 வரையிலான 5 ஆண்டு காலத்துக்கு ரூ.485.38 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com