56 இன்ச் மார்பை அளந்தது யார்? புல்வாமா தாக்குதல் குறித்து திக்விஜய் சிங் சரமாரித் தாக்கு

பிரதமர் நரேந்திர மோடியின் 56 இன்ச் மார்பை அளந்தது யார் என்று புல்வாமா தாக்குதல் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் சரமாரியாகச் சாடினார். 
56 இன்ச் மார்பை அளந்தது யார்? புல்வாமா தாக்குதல் குறித்து திக்விஜய் சிங் சரமாரித் தாக்கு

பிரதமர் நரேந்திர மோடியின் 56 இன்ச் மார்பை அளந்தது யார் என்று புல்வாமா தாக்குதல் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் சரமாரியாகச் சாடினார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

புல்வாமா தாக்குதல் நடைபெற்ற சம்பவத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி, ஜிம் கார்பெட் பூங்காவில் விளம்பரப் படத்தில் நடித்துக்கொண்டிருந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. ஆனால், அந்த நேரத்தில் அவர் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு தில்லி திரும்பியிருக்க வேண்டும். மேலும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவைக் குழுவுடன் அவசர ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும்.

மிக அதிக அளவிலான பாதுகாப்பு வாகனங்கள் செல்லும் போது, அந்த சாலையின் ஒவ்வொரு 10 முதல் 15 கி.மீ.களுக்கு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கும். அவ்வாறு இருக்கும்போது, 3.5 குயிண்டால் அளவிலான வெடிபொருட்களை எவ்வாறு கண்டுபிடிக்க முடியாமல் போனது? இதுபோன்ற கேள்விகளுக்கு மத்திய அரசால் பதிலளிக்க முடியவில்லை.

பாகிஸ்தானுடன் இந்தியா அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று கூறினால், அவர்களை தேச விரோதிகளாக சித்தரிக்கிறார்கள். ஆனால், இந்தியா வருகை தந்த சவூதி பட்டத்து இளவரசர், பயங்கரவாதம் குறித்து எதுவும் கூறாமல், இந்தியா, பாகிஸ்தான் நல்லுறவுக்கு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மட்டும் தெரிவித்துள்ளார்.

இதே கருத்தை வேறு யாராவது தெரிவித்திருந்தால், இந்நேரம் நாடு முழுவதும் மகிவும் பரபரப்பான சூழல் ஏற்பட்டிருக்கும். புல்வாமா தாக்குதல் பதில் நடவடிக்கைக்கு மிக தீவிரமாக செயலாற்ற வேண்டிய நேரத்தில், மோடி என்ன அழுத்தத்தில் இருக்கிறார் என்று தெரியவில்லை. பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையிலும், தேச நலனிலும் காங்கிரஸ் கட்சி எப்போதும் அரசியல் செய்தது கிடையாது.

ஏனென்றால் பயங்கரவாதத்தால் (இந்திரா, ராஜீவ் படுகொலைகள்) அதிகம் பாதிக்கப்பட்டது காங்கிரஸ் கட்சி தான். ஜஸ்வந்த் சிங் (அப்போதைய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்) மற்றும் அஜித் தோவல் (அப்போதைய உளவுத்துறை தலைவர்) ஆகியோர் தான் மசூத் அஸாரை (1999 காந்தஹார் குற்றவாளி) ஆஃப்கானிஸ்தானில் பத்திரமாக கொண்டு சேர்த்தனர். தற்போது அதே மசூத் அஸாரால் தான் இந்த புல்வாமா பயங்கரவாத தாக்குதலும் நடந்துள்ளது.

இத்தனை நடந்த பிறகும் பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவருக்கு 56 இன்ச் மார்பு என அளந்தது யார் என்று தெரியவில்லை? என்று குற்றம்சாட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com