பெங்களூருவில் விமான கண்காட்சி வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து: 300க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பன்னாட்டு இந்திய விமானத் தொழில் கண்காட்சி நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாகன நிறுத்துமிடத்தில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.
பெங்களூருவில் விமான கண்காட்சி வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து: 300க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பன்னாட்டு இந்திய விமானத் தொழில் கண்காட்சி நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாகன நிறுத்துமிடத்தில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.

விமானக் கண்காட்சி நடைபெறும்  இடத்துக்கு அருகே அமைக்கப்பட்டிருந்த வாகன நிறுத்துமிடத்தில் ஏராளமான கார்கள் நின்றிருந்தன. அப்போது எதிர்பாராதவிதமாக இங்கே தீப்பற்றியதில் 300க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் கருகின. உடனடியாக தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
 

இந்திய விமானப் படை, இந்துஸ்தான் வானூர்தி நிறுவனம்(எச்ஏஎல்) மற்றும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புஆகியவற்றின் கூட்டு முயற்சியில் 12-ஆவது பன்னாட்டு இந்திய விமானத் தொழில் கண்காட்சி, பெங்களூரு எலஹங்கா விமானப் படை தளத்தில் புதன்கிழமை தொடங்கியது. 

இதைத் தொடர்ந்து, இந்திய விமானப் படையின் வெவ்வேறு வகையான இலகுரக போர் ஹெலிகாப்டர்கள், சிறுவிமானங்கள், இலகுரக போர்விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய விமானப்படையின் பெருமைமிகு அங்கமாக விளங்கும் தேஜஸ் இலகுரக போர்விமானம், சாரங்க் ஹெலிகாப்டர், தனுஷ், ருத்ரா, துருவ் இலகுரக போர் ஹெலிகாப்டர்கள், சுகோய்-30-எம்.கே.ஐ. இலகுரக போர்விமானம், டக்கோடா விமானம், ஜக்குவார் விமானம், ஹாக் ஹெலிகாப்டர், எம்.ஐ.-17 ஹெலிகாப்டர், எச்டிடி-40 பயிற்சிவிமானம், இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர்(எல்யூஎச்), சாரஸ் போர்விமானம், ஏர்பஸ்-ஏ-330 பயணிகள் விமானம், போயிங்-பி-52, அமெரிக்காவின் பி8ஐ விமானம், எஃப்-16 இலகுரக போர்விமானம்,பிரான்சின் ரஃபேல் இலகுரக போர்விமானங்களின் மெய்சிலிர்க்கும் சாகசங்கள் நடைபெற்றன.

மோசமான ஏற்பாடு
இந்திய விமானத் தொழில் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் சீராக செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே எழுந்தது. முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. விழா அரங்கிற்கு செல்ல சீராக பாதையில்லை. தொடக்க விழாவுக்கு செல்லும் பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால்,வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கடும் இன்னலுக்கு உள்ளானார்கள். 

இதனால் ஒருசிலர் உரிய நேரத்திற்கு வரமுடியாதசூழல் ஏற்பட்டு, தாமதமாக வந்ததால் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

தொடக்கவிழாவின்போது கழிவறை, சிற்றுண்டு, தேநீர் வசதிகளும் சரியாக இல்லாததால் வெளிநாட்டினர் பெரும் இன்னலை அனுபவித்தனர். உணவு அரங்கங்கள் உரிய நேரத்தில் அமைக்கப்படாததால், உணவு பரிமாறுவதில் தாமதம் ஏற்பட்டது. ஊடகவியலாளர்கள் காலை சிற்றுண்டி கிடைக்காமல் ஒருமணி நேரம் காத்திருக்க நேர்ந்தது. எல்லாவற்றையும்விட கண்காட்சியை காணவந்த வெளிநாட்டினரும் உற்சாகமாக இல்லை.

இந்த நிலையில் வாகன நிறுத்துமிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து நேரிட்டிருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com