புல்வாமா தாக்குதலுக்கு பின் 2 மணி நேரம் பிரதமர் என்ன செய்து கொண்டிருந்தார்?: விளக்கம் தர காங்கிரஸ் வலியுறுத்தல்

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்த பின்னர் முதல் 2 மணி நேரங்களில் பிரதமர் என்ன செய்து கொண்டிருந்தார்? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.


புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்த பின்னர் முதல் 2 மணி நேரங்களில் பிரதமர் என்ன செய்து கொண்டிருந்தார்? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தாக்குதல் குறித்த விஷயத்தை முழுமையாக அறியாதவராக அவர் இருந்திருக்க வேண்டும் அல்லது அது தெரிந்தும் உணர்ச்சிவசப்படாதவராக இருந்திருக்க வேண்டும் என்று அக்கட்சி கூறியுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் மணீஷ் திவாரி, தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
புல்வாமா தாக்குதல் நிகழ்ந்த தினத்தில் பிற்பகல் 3.10 முதல் 5.10 மணி வரையில் பிரதமர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை அறிய விரும்புகிறோம். அந்த சமயத்தில் செல்லிடப்பேசி வாயிலாக உத்தரகண்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் நீங்கள் உரையாற்றியுள்ளீர்கள். ஆனால், புல்வாமா தாக்குதல் குறித்து எதையும் குறிப்பிடவில்லை. 
அதன் பின்னர் கார்பெட் தேசிய பூங்காவில் நடைபெற்ற படப்பிடிப்பு நிகழ்ச்சியிலும் நீங்கள் கலந்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பயங்கரவாத தாக்குதல் நடந்து முடிந்து 2 மணி நேரம் ஆகியும்கூட பிரதமருக்கு அதுகுறித்து தெரியாமல் இருந்திருக்க வேண்டும் அல்லது தாக்குதல் குறித்து தெரிந்திருந்தும் அதுகுறித்து சட்டை செய்யாதவராக இருந்திருக்க வேண்டும். இந்த 2 மணி நேரத்தில் பிரதமர் என்ன செய்து கொண்டிருந்தார் என்ற கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் என்றார் அவர்.
ராகுல் காந்தி விமர்சனம்: இந்த விவகாரத்தில் பிரதமரை விமர்சித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சுட்டுரையில் பதிவிட்டார். அத்துடன் சில படங்களையும் அவர் இணைத்து வெளியிட்டார்.
அந்தப் பதிவில், புல்வாமாவில் 40 வீரர்களை பலி கொண்ட பயங்கரவாதத் தாக்குதல் நடந்து 3 மணி நேரம் ஆன பின்னரும்கூட, பிரைம் டைம் மினிஸ்டர் படப்பிடிப்பை தொடர்ந்திருக்கிறார். நாட்டு மக்களின் இதயங்களிலும், பலியான வீரர்களின் குடும்பங்களிலும் கடல் அளவு கண்ணீர் நிறைந்திருந்தது. அந்த சமயத்தில் தண்ணீர் மீது படப்பிடிப்பை நடத்தி பிரதமர் சிரித்துக் கொண்டிருக்கிறார் என்று விமர்சித்துள்ளார்.

பொய் பேசும் ராகுல்: பாஜக பதிலடி
புல்வாமா தாக்குதல் சமயத்தில் பிரதமர் படப்பிடிப்பை நடத்தியதாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டை பாஜக திட்டவட்டமாக மறுத்துள்ளது. அன்றைய தினம் காலைப் பொழுதில் எடுத்த படங்களை பதிவிட்டு ராகுல் காந்தி பொய் பேசி வருவதாக அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து சுட்டுரையில் பாஜக வெளியிட்டுள்ள பதிவில், ராகுல் காந்தி அவர்களே. உங்கள் பொய் செய்திகளைக் கேட்டு நாடு களைப்படைந்துவிட்டது. உங்களுக்கு வேண்டுமானால் அந்தத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருக்கலாம். ஆனால், நாட்டு மக்களுக்கு அதுகுறித்து மாலையில்தான் தெரியவந்தது. அடுத்தமுறை இன்னும் நல்லதொரு பொய்யை சொல்ல முயற்சியுங்கள். ஆனால், அதில் வீரர்களுடைய தியாகத்தை தொடர்புபடுத்த வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com