இந்தியா

"பயங்கரவாதிகளுடன்தான் போர் காஷ்மீரிகளுடன் அல்ல': பிரதமர் நரேந்திர மோடி

DIN

"ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நாம் நடத்தி வரும் போர், பயங்கரவாதிகளுக்கு எதிரானதே தவிர, காஷ்மீர் மக்களுக்கு எதிரானது அல்ல' என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 

புல்வாமா தாக்குதல் சம்பவத்தை அடுத்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் காஷ்மீர் மாணவர்கள் தாக்கப்படுவதாக வெளியான தகவல்களை குறிப்பிட்ட பிரதமர் மோடி, "எனது காஷ்மீரைச் சேர்ந்த மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது, ஒவ்வொரு இந்தியரின் கடமையாகும்' என்றார்.

ராஜஸ்தான் மாநிலம், டோங்க் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி, தொண்டர்களிடையே மேலும் பேசியதாவது:

நமது போர் பயங்கரவாதத்துக்கு எதிரானதே தவிர, காஷ்மீருக்கோ, அந்த மாநில மக்களுக்கோ எதிரானது அல்ல. உண்மையில் அந்தப் போர் காஷ்மீர் மக்களை பாதுகாப்பதற்கானதாகும். ஏனெனில், காஷ்மீர் இளைஞர்களும் பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் நம்மோடு இணைய அவர்களும் தயாராக இருக்கின்றனர். 40 ஆண்டுகளாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு வரும் அவர்கள், அமைதியை விரும்புகின்றனர். அவர்களை நம்மோடு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

காஷ்மீர் மக்கள்தான் அமர்நாத் யாத்ரீகர்களை பாதுகாக்கின்றனர். ஓராண்டுக்கு முன்பு அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, காயமடைந்தவர்களுக்காக ரத்த தானம் செய்து அவர்களது உயிரைக் காத்தது காஷ்மீர் முஸ்லிம் மக்கள் தான். 

தவறு செய்யக் கூடாது: பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் வெற்றிபெற வேண்டும் என்றால், நாம் எந்தத் தவறும் செய்துவிடக் கூடாது. காஷ்மீர் மக்களை பயங்கரவாதிகளால் பாதிக்கப்படுபவர்களாகத் தான் நாம் பார்க்க வேண்டும்.

எனது காஷ்மீரைச் சேர்ந்த மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது, ஒவ்வொரு இந்தியரின் கடமையாகும்.

இந்த விவகாரத்தில் முந்தைய அரசுகள் விஷ விதைகளை தூவிச் சென்றுள்ளன. ஆனால் இந்த அரசு, காஷ்மீர் மக்களின் கனவுகளை நனவாக்கும். காஷ்மீரில் உள்ள பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி உறுப்பினர்களிடம் கலந்துரையாடும்போது, எந்தவொரு பள்ளிக்கும் பயங்கரவாதிகள் தீ வைக்க அனுமதிக்கக் கூடாது என்று வாக்குறுதி வாங்கினேன். அப்போது முதல் இன்று வரையில் அங்கு எந்தவொரு பள்ளிக் கட்டடமும் தீக்கிரையாகவில்லை.

கணக்கு தீர்க்கப்படும்: பெரும்பாலான நாடுகளும், உலகளாவிய அமைப்புகளும் புல்வாமா தாக்குதலுக்கு எதிராக ஒருமித்த குரல் எழுப்பின. அந்தத் தாக்குதலில் தொடர்புடைய ஒரு முக்கியமான பயங்கரவாதியை, அவருக்குத் தகுதியான இடத்துக்கு (மரணம்) நமது பாதுகாப்புப் படையினர் அனுப்பி வைத்துவிட்டனர். 

நமது எல்லைகளை பாதுகாக்கும் படையினர் மீதும், எனது அரசு மீதும், சக்தி மற்றும் நீதிக்கு சொந்தமான கடவுளாம், மாதா பவானியின் அருள் மீதும் நாட்டு மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பாகிஸ்தானில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. மனிதநேயத்தின் எதிரிகளுக்கு தக்க பாடம் புகட்டப்படுவதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை நான் மேற்கொண்டு வருகிறேன். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் நமது ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முறை பயங்கரவாதத்துக்கு எதிரான கணக்கு தீர்க்கப்படும். அதுவும் முற்றிலுமாகத் தீர்க்கப்படும்.

முன்னேறி வருகிறோம்: பயங்கரவாதத்துக்கான ஆதரவு தொடர்ந்து வரும் என்றால், உலகில் அமைதி ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை. பயங்கரவாதத்துக்கு எதிராக உலகமே ஒருமித்த குரல் கொடுத்து வருகிறது. பயங்கரவாதத்துக்கு காரணமாக இருப்பவர்களை தண்டிப்பதற்காக நாம் பலம் கொண்டு முன்னேறி வருகிறோம்.

கடும் நடவடிக்கை: இந்தியாவில் இருந்துகொண்டு பிரிவினைவாதத்தை தூண்டுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு எதிராக மேலும் அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படும். புல்வாமா தாக்குதல் வலியை நம்மால் பொறுத்துக்கொள்ள இயலாது. அத்தகைய வலியை அனுபவித்த பிறகு அமைதியாக வேடிக்கை பார்க்க முடியாது. பயங்கரவாதத்தை எவ்வாறு ஒடுக்குவது என எங்களுக்குத் தெரியும். இது புதிய கொள்கைகள் கொண்ட இந்தியாவகும்.

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற பிறகு, வாழ்த்து தெரிவிப்பதற்காக அவரோடு தொலைபேசியில் உரையாடினேன். அப்போது "இந்தியா-பாகிஸ்தான் இடையே பல்வேறு சண்டைகள் நிகழ்ந்துவிட்டன. அனைத்திலும் இந்தியா வென்றுள்ளது. பாகிஸ்தானுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இனியாவது நாம் ஏழ்மை மற்றும் கல்லாமைக்கு எதிராக போரிடுவோம்' என்று கூறினேன்.

அதற்கு இம்ரான் கான், "மோடி அவர்களே! நான் பதான் இனக்குழுவின் மகன். உண்மையே பேசுவேன்; உண்மையாகவே நடந்துகொள்வேன்' என்று கூறினார். ஆனால், அவர் தனது வாக்கிலிருந்து பின்வாங்கிவிட்டார். 

வருத்தமளிக்கிறது: இந்தியாவில் வாழும் சிலர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசி வருவது வருத்தமளிக்கிறது. புல்வாமா தாக்குதல் போன்ற சம்பவங்கள், நாட்டை துண்டாடுவதற்கான கோஷம் எழுப்புபவர்களுக்கு பலம் சேர்ப்பதாக அமைகிறது. அவர்கள் பாகிஸ்தானுக்குச் சென்று, "என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். மோடியை ஆட்சியிலிருந்து அகற்றுங்கள்' என்று கூறுகின்றனர். அவர்களே, மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்த பிறகு, துணிச்சலாகச் செயல்படத் தவறியவர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT