போஃபர்ஸால் ஆட்சியை இழந்தது காங்கிரஸ்; ரஃபேலால் மோடி மீண்டும் பிரதமர் ஆவார்

போஃபர்ஸ் ஒப்பந்தத்தால் காங்கிரஸ் வீழ்ச்சியடைந்தது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் வெற்றியளிக்கும் ஒப்பந்தமாக ரஃபேல் இருக்கும்
போஃபர்ஸால் ஆட்சியை இழந்தது காங்கிரஸ்; ரஃபேலால் மோடி மீண்டும் பிரதமர் ஆவார்


போஃபர்ஸ் ஒப்பந்தத்தால் காங்கிரஸ் வீழ்ச்சியடைந்தது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் வெற்றியளிக்கும் ஒப்பந்தமாக ரஃபேல் இருக்கும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 
பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இந்திய விமானப் படைக்கு ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவது என்று பாஜக அரசால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்து மக்களவையில் கடந்த புதன்கிழமை தொடங்கி விவாதம் நடைபெற்று வந்தது. 
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை பேசியபோது, ரஃபேல் விமானங்களை முதலில் முடிவு செய்யப்பட்டதைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு மத்திய அரசு வாங்குகிறது என்றும், விமான உதிரி பாக தயாரிப்பு ஒப்பந்தத்தை பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தை புறக்கணித்துவிட்டு, அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு பிரதமர் மோடி கிடைக்கச் செய்தார் என்றும் குற்றம்சாட்டினார். இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை பேசியதாவது:
ரஃபேல் விமானம் சார்ந்த ஒப்பந்தத்தை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு பெற்றுத் தரவில்லை என்று காங்கிரஸ் கட்சி முதலைக் கண்ணீர் வடிக்கிறது. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அந்நிறுவனத்தின் திறனை மேம்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.பாஜக ஆட்சியில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டன. 
பிரதமர் நரேந்திர மோடியின் 5 ஆண்டுகால ஆட்சியில் இடைத்தரகர்களின் தலையீடு இன்றி பாதுகாப்புத்துறை அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. போஃபர்ஸ் ஒப்பந்தம் குறித்து நான் பேச விரும்பவில்லை. ஏனெனில் அது ஒரு ஊழல்; ரஃபேல் அப்படியல்ல. போஃபர்ஸ் உங்களை வீழ்ச்சியடைய வைத்தது. ஆனால், ரஃபேல் ஒப்பந்தம் மோடியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரும். 
இந்திய விமானப்படை வலுவிழந்து வருகிறது என்பதை மறந்துவிட்டு ரஃபேல் ஒப்பந்தத்தை நீங்கள்(காங்கிரஸ்) நிறுத்தி வைத்தீர்கள். ரஃபேல் ஒப்பந்தம் உங்களுக்கு ஒத்து வரவில்லை. அதன் மூலமாக உங்களுக்கு பணம் கிடைக்கவில்லை.
பிரான்ஸிடம் இருந்து வாங்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 126-இல் இருந்து 36-ஆகக் குறைத்துவிட்டது என்று பொய்யான தகவலை நீங்கள் பரப்பி வருகிறீர்கள். மொத்தம் 18 விமானங்களை மட்டுமே பறப்பதற்கு தயார் நிலையில் வாங்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டிருந்தது. ஆனால், அந்த எண்ணிக்கையை நாங்கள் 36-ஆக உயர்த்தினோம்.
முதலாவது ரஃபேல் விமானம் செப்டம்பர் மாதத்தில் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுவிடும். 2022-ஆம் ஆண்டுக்குள்ளாக அனைத்து விமானங்களும் நாட்டுக்கு கிடைத்துவிடும். காங்கிரஸ் அரசைக் காட்டிலும் பாஜக அரசு ரஃபேல் விமானங்களுக்கு வழங்கும் விலை குறைவுதான். ரூ.526 கோடி என்ற அப்போதைய விலையை இப்போதைய விலையான ரூ.1,600 கோடியுடன் ஒப்பிடுவது என்பது, ஆப்பிளையும், ஆரஞ்சையும் ஒப்பிடுவதற்கு சமமாகும். 
2007-இல் நிர்ணயிக்கப்பட்ட அதே விலை 2017-ஆம் ஆண்டிலும் நீடிக்குமா? கால மாற்றத்தின் விலை ஏற்றத்தாலும், கரன்ஸி மதிப்பு மாற்றத்தாலும் அந்த விலையில் வேறுபாடு இருக்கும்.
அத்துடன் வெறும் விமானத்துக்கு மட்டுமான விலையையும், ஆயுதங்களுடன் கூடிய விமானத்தின் விலையையும் ஒப்பிட முடியாது என்றார் அவர்.

கேட்ட கேள்விக்கு பதில் இல்லை:  ராகுல் காந்தி​
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக தான் முன்வைத்த கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான நீண்ட கால பேச்சுவார்த்தையில் பங்கேற்றவர்களான இந்திய விமானப் படை தளபதி, பாதுகாப்புத்துறை அமைச்சர், செயலாளர்கள், விமானப் படை அதிகாரிகள் உள்ளிட்ட யாரேனும் ஆட்சேபணை தெரிவித்தார்களா, பிரதமர் அவற்றை கண்டுகொள்ளாமல் செயல்பட்டாரா என்ற கேள்வியை நான் முன்வைத்திருந்தேன். அந்தக் கேள்விக்கு பதில் அளிப்பதற்குப் பதிலாக, நான் அவமானப்படுத்திவிட்டேன்; பொய் சொல்லி விட்டேன் என்று அமைச்சர் கூறுகிறார். இந்த நாட்டின் இளைஞர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்காமல் அவர் நழுவிவிட்டார். என்னுடைய எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை. அனில் அம்பானியின் பெயரைக் கூட அவர் குறிப்பிடவில்லை என்றார் ராகுல் காந்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com