பாஜக அரசை வீழ்த்துவோம்: கொல்கத்தா மாநாட்டில் எதிர்க்கட்சிகள் சூளுரை

மக்களவைத் தேர்தலில் பாஜக அரசை வீழ்த்துவோம் என்று காங்கிரஸ், திமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒருமித்த குரலில் தெரிவித்தனர்.
கொல்கத்தாவில் சனிக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் கைகோத்து நிற்கும் மு.க. ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், குமாரசாமி, சந்திரபாபு நாயுடு, ஃபரூக் அப்துல்லா, தேவெ கெளடா, மம்தா, மல்லிகார்ஜுன கார்கே, , சரத் பவார்,  கேஜ
கொல்கத்தாவில் சனிக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் கைகோத்து நிற்கும் மு.க. ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், குமாரசாமி, சந்திரபாபு நாயுடு, ஃபரூக் அப்துல்லா, தேவெ கெளடா, மம்தா, மல்லிகார்ஜுன கார்கே, , சரத் பவார்,  கேஜ

மக்களவைத் தேர்தலில் பாஜக அரசை வீழ்த்துவோம் என்று காங்கிரஸ், திமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒருமித்த குரலில் தெரிவித்தனர்.  மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் "ஒன்றுபட்ட இந்தியா' என்ற பெயரில் கொல்கத்தாவில் சனிக்கிழமை நடத்தப்பட்ட மாநாட்டில் இந்தக் கருத்து முன்வைக்கப்பட்டது.

காங்கிரஸ், திமுக, தெலுங்கு தேசம், தேசியவாத காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன் சமாஜ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் இந்த மாநாட்டில் பேசினர்.  அதேபோன்று பாஜக அதிருப்தி தலைவர்களும் மாநாட்டில் உரையாற்றினர். தலைவர்களின் பேச்சு விவரம்:

தேவெ கெளடா-முன்னாள் பிரதமர் (மதச்சார்பற்ற ஜனதா தளம்): வலிமை மிகுந்த தேசத்தை கட்டமைக்க நிலையான அரசு தேவையானதாகும். ஆனால், கடந்த மக்களவைத் தேர்தலில் 282 இடங்கள் கிடைத்தும்கூட, பிரதமர் நரேந்திர மோடி வலிமையான தேசத்தைக் கட்டமைப்பதை விடுத்து, நாட்டின் மதச்சார்பற்ற சூழலை அழிக்க வேண்டும்; அனைத்து அரசு அமைப்புகளையும் சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார்.

கூட்டணி அரசு என்பது நிலையற்றதாக இருக்கும்; அவர்களால் எதையும் சாதிக்க முடியாது என மோடி கூறி வருகிறார். ஆனால், நிலையான அரசை அமைத்து தேசத்தை பலப்படுத்த முடியும் என்பதை எதிர்க்கட்சிகள் நிரூபிக்க வேண்டும். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் தங்களின் கருத்து வேறுபாடுகளை மறந்து, பாஜகவை எதிர்கொள்ள ஒன்றிணைய வேண்டும்.

மல்லிகார்ஜுன கார்கே (காங்கிரஸ்): பாஜக ஆட்சியில், நாட்டின் அரசு அமைப்புகள் மற்றும் பொருளாதார அமைப்புகள் சிறுமைபடுத்தப்பட்டுள்ளன. நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதாக, வரும் தேர்தல் அமையும். எதிர்க்கட்சிகளாகிய நாம் ஒன்றிணையாத வரையில்,  மோடி, அமித் ஷா ஆகிய இருவரின்  ஜனநாயக விரோத செயல்களையும்,  மதச்சார்பின்மையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளையும் நாம் வேடிக்கை பார்க்க வேண்டியிருக்கும். 

ஊழல் குறித்து பேசுகையில் "நானும் சாப்பிட மாட்டேன்; பிறரையும் சாப்பிட விட மாட்டேன்' என மோடி அவ்வபோது கூறி வருகிறார். ஆனால் உண்மையில் நடப்பது என்ன! மோடி சாப்பிடுவதில்லை; இருப்பினும் அதானி, அம்பானி போன்ற அவரது கார்ப்பரேட் நண்பர்களை அவர் பலனடைய வைக்கிறார். 

சந்திரபாபு நாயுடு-ஆந்திர முதல்வர் (தெலுங்கு தேசம்): இந்நாட்டின் பிரதமர் விளம்பரப் பிரியராக இருக்கிறார். திறன் கொண்ட பிரதமராக அவர் இல்லை. விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதாக அவர் உறுதியளித்திருந்தார். ஆனால்,  விவசாயிகள் தற்போது தற்கொலை செய்து வருகின்றனர். 

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது. ஜிஎஸ்டி வரி அமலாக்கம் ஒரு மோசடி திட்டம். பொருளாதார வளர்ச்சி பின்தங்கியிருப்பதால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. 
பாஜக, மக்களை பிளவுபடுத்தி வருவதுடன் மலிவான அரசியலை நடத்தி வருகிறது. எதிர்க்கட்சிகளையும், அதன் தலைவர்களையும் பழிவாங்குவதற்காக சிபிஐ, அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகளை அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது.

கேஜரிவால்-தில்லி முதல்வர் (ஆம் ஆத்மி): மக்களவைத் தேர்தலில் மோடி - அமித் ஷா அணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார்களேயானால், அரசமைப்புச் சட்டத்தையே மாற்றி விடுவார்கள். அதன் பிறகு தேர்தலே நடக்காமல் போய்விடும். ஜெர்மனியில் ஹிட்லர் அமைத்ததைப் போன்ற பாசிச அரசை அவர்கள் நடத்தி வருகின்றனர்.

இந்தியாவை துண்டு, துண்டாக்க வேண்டும் என்பது பாகிஸ்தானின் கனவு. தேசத்தில் மதம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்துவதன் மூலமாகவும், மக்களிடையே பகையுணர்வை தூண்டுவதன் மூலமாகவும் அந்தக் கனவை நனவாக்கும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது.
ஃபரூக் அப்துல்லா-தேசிய மாநாட்டுக் கட்சி: எந்தவொரு தனிநபரையும் (மோடி) தோற்கடிப்பது அல்ல நமது நோக்கம்.  நாட்டைக் காக்க வேண்டும் என்பதும், சுதந்திரத்துக்காக போராடியவர்களின் தியாகங்கள் கெளரவிக்க வேண்டும் என்பதுமே நமது நோக்கம். 
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் என்பது ஒரு திருட்டு இயந்திரம். உண்மை அதுதான். உலகில் எங்குமே வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதில்லை.  வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தக் கூடாது என்பதை தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் குடியரசுத்தலைவரை சந்தித்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்த வேண்டும்.

வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வந்தால் மட்டுமே வெளிப்படைத்தன்மை இருக்கும்.

அகிலேஷ் யாதவ்-சமாஜவாதி கட்சித் தலைவர்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜவாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்திருப்பதால் நாட்டில் மகிழ்ச்சி அலை பரவியிருக்கிறது.

ஆனால், பாஜக கலக்கமடைந்துள்ளது. அங்கு ஒரு இடத்திலாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் வியூகம் அமைப்பதற்காக ஒன்றன் பின், ஒன்றாக கூட்டம் நடத்தி பாஜக ஆலோசித்து வருகிறது.

எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார்? என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எங்கள் தரப்பில் பிரதமர் யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். ஆனால், ஆளுங்கட்சியில் மோடி என்ற பெயர் மக்களின் அதிருப்தியை பெற்றுள்ளது. ஆகவே, பிரதமர் வேட்பாளருக்கான புதிய நபர் யார்? என்பதை அவர்கள் தெரிவிக்க வேண்டும்.

சதீஷ் சந்திர மிஸ்ரா-பகுஜன் சமாஜ் கட்சி: தலித் விரோத, சிறுபான்மையின விரோத மத்திய அரசை தூக்கியெறியும் நடவடிக்கையை உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜவாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் தொடங்கிவிட்டன.
அம்பேத்கர் இயற்றிய அரசமைப்புச் சட்டத்தைக் காக்க வேண்டுமெனில் பாஜக அரசை வீழ்த்துவது கட்டாயமாகும். அதற்கான அச்சாரமாக இந்த மாநாட்டின் வெற்றி அமைந்துள்ளது.

தேர்தலுக்குப் பிறகு பிரதமரை முடிவு செய்யலாம்: மம்தா

தேர்தலுக்குப் பிறகு பிரதமர் யார் என்பதை எதிர்க்கட்சிகள் முடிவு செய்து கொள்ளலாம்.  தற்போதைக்கு பாஜகவைத் தோற்கடிக்க கருத்து வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார். அவர் பேசியதாவது:

திருடர்களின் தாயாக இருப்பவர் உரத்த குரலில் பேசுவார் என்பது வங்கப் பழமொழி. வாராக்கடன், ரஃபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு, பயிர்க் காப்பீடு முறைகேடு என அனைத்து ஊழல்களும் பாஜக ஆட்சியில்தான் நிகழ்ந்துள்ளன. ஆனாலும், அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர நினைக்கின்றனர்.
மோடியின் ஆட்சியில் வங்கிகள், சிபிஐ, ரிசர்வ் வங்கி, பொருளாதாரம், ஜனநாயகம் ஆகிய அனைத்தும் மீட்டெடுக்க முடியாத சீர்குலைவை எதிர்கொண்டுள்ளன.

பாஜக அரசு காலாவதி தேதியை தாண்டிவிட்டது. அக்கட்சி தோற்கடிக்கப்படுவதை உறுதி செய்ய நாம் எல்லோரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். பிரதமர் யார் என்பது பிரச்னையல்ல என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com