நேபாளம், பூடான் நாடுகளில் ஆதார் செல்லத்தக்க ஆவணம்: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

நேபாளம், பூடான் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் 15 வயதுக்குள்பட்ட மற்றும் 65 வயதுக்கும் மேற்பட்ட இந்தியர்கள், ஆதார் அட்டையை பயண ஆவணமாக பயன்படுத்தலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேபாளம், பூடான் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் 15 வயதுக்குள்பட்ட மற்றும் 65 வயதுக்கும் மேற்பட்ட இந்தியர்கள், ஆதார் அட்டையை பயண ஆவணமாக பயன்படுத்தலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் பூடானுக்குச் செல்லும் இந்தியர்கள், கடவுச்சீட்டு, இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களை வைத்திருந்தால், அவர்கள் விசா பெற வேண்டியதில்லை. தற்போது, அந்த வரிசையில் நேபாளம், பூடான் ஆகிய நாடுகளில் செல்லத்தக்க பயண ஆவணமாக, ஆதார் அட்டையும் இடம்பெற்றுள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கியுள்ள 12 இலக்க எண் கொண்ட ஆதார் அடையாள அட்டையை இனி இந்தியர்கள் பயன்படுத்தலாம்.
இதற்கு முன்பு, 15 வயதுக்குள்பட்ட சிறார்கள் மற்றும் 65 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள், ஓட்டுநர் உரிமம், நிரந்தர வருமான வரி கணக்கு எண், குடும்ப அட்டை ஆகியவற்றை அடையாள அட்டையாகப் பயன்படுத்த முடியும். ஆதார் அட்டை ஆவணமாக சேர்க்கப்படவில்லை. 
எனினும், 15 முதல் 65 வயதுக்கு உள்பட்டவர்கள், ஆதார் அட்டையை பயண ஆவணமாகப் பயன்படுத்த முடியாது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் மேலும் கூறியதாவது: காத்மாண்டில் உள்ள இந்தியத் தூதரகம் வழங்கும் சான்றிதழை, இந்தியா-நேபாளம் இடையே பயணம் செய்வதற்கான ஆவணமாக இந்தியர்கள் பயன்படுத்த முடியாது. எனினும், அவசர காலங்களில், அந்தத் தூதரகம் அளிக்கும் சான்றிதழை வைத்து நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு இந்தியர்கள் வரலாம்.
15 முதல் 18 வயதுக்கு உள்பட்ட மாணவர்கள், தங்கள் பள்ளி முதல்வர் கையெழுத்திட்ட அடையாளச் சான்றுகளைப் பயன்படுத்தி நேபாளத்துக்குச் சென்று வரலாம் என்று அந்த அதிகாரி கூறினார்.
இந்தியாவின் சிக்கிம், அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களையொட்டி அமைந்துள்ள பூடானில் 60,000 இந்தியர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் கட்டுமானத் தொழில் மற்றும் நீர்மின்உற்பத்தி நிலையங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்களைத் தவிர, எல்லை வழியாக சுமார் 10,000 பேர் தினசரி பணியாளர்களாக பூடான் சென்று வருகின்றனர்.
இதேபோல், மற்றொரு அண்டை நாடான நேபாளத்தில் சுமார் 6 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள், மருத்துவம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நீண்ட காலமாக பணியாற்றி வருகிறார்கள். பலர் கட்டுமானத் தொழிலாளர்களாக அங்கு பணியாற்றி வருகிறார்கள் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com