இந்தியா

இந்திய மாலுமிகளுடன் சென்ற இரு கப்பல்களில் தீ: 14 பேர் பலி: ரஷிய கடல் பகுதியில் விபத்து

DIN


ரஷிய கடல் பகுதியில் இந்தியா, துருக்கி, லிபியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாலுமிகளுடன் சென்ற இரு சரக்கு கப்பல்களில் நேரிட்ட தீ விபத்தில், 14 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷியா, கிரைமீயா இடையேயான கெர்ச் நீரிணை பகுதியில் திங்கள்கிழமை இந்த தீ விபத்து நேரிட்டதாக ரஷிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரு கப்பல்களிலும் தான்சானியா நாட்டின் கொடி பறந்துள்ளது. ஒரு கப்பல், திரவ இயற்கை எரிவாயுவை ஏற்றிச் சென்ற கப்பலாகும். மற்றொன்று, டேங்கர் கப்பல். ஒரு கப்பலில் இருந்து மற்றொன்றுக்கு எரிபொருளை மாற்றும் போது, திடீரென வெடிப்பு ஏற்பட்டு தீப்பிடித்துள்ளது என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில், தி கேண்டி என்ற பெயரிலான கப்பலில் 17 மாலுமிகள் இருந்துள்ளனர். அவர்களில் 9 பேர் துருக்கியையும், 8 பேர் இந்தியாவையும் சேர்ந்தவர்கள். தி மேஸ்ட்ரோ என்ற மற்றொரு கப்பலில், 15 மாலுமிகள் இருந்துள்ளனர். இவர்களில் 7 பேர் துருக்கியைச் சேர்ந்தவர்கள். 7 பேர் இந்தியாவையும், ஒருவர் லிபியாவையும் சேர்ந்தவர் என்று ரஷிய ஊடகங்களில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மொத்தம் 14 மாலுமிகள் உயிரிழந்துள்ளதாக, கிரைமீயா பிரதமர் செர்கெய் அக்ஷியோனோவ் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 
அவர் மேலும் கூறுகையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து இப்போது என்னால் எதுவும் கூற முடியாது. ஆனால், 14 மாலுமிகள் உயிரிழந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது என்றார். 
இதுதொடர்பாக ரஷிய கடற்சார் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: ஒரு கப்பலில் நிகழ்ந்த வெடிப்பால் ஏற்பட்ட தீ, மற்றொரு கப்பலுக்கும் பரவியுள்ளது. இதையடுத்து, உயிர் தப்புவதற்காக மாலுமிகள் கடலில் குதித்துள்ளனர். இதுவரை 12 மாலுமிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் 6 பேரை காணவில்லை. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இரு கப்பல்களிலும் இதுவரை தீ அணைக்கப்படவில்லை. மோசமான வானிலை காரணமாக, மீட்கப்பட்டவர்களை கரைக்கு அழைத்து வருவதில் தாமதம் நிலவுகிறது என்றார் அவர்.
இந்த விபத்தில் மாயமான 6 பேரும் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என கருதப்படுவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. கெர்ச் நீரிணையானது, ரஷியா - உக்ரைன் ஆகிய இரு நாடுகளின் கப்பல் போக்குவரத்துக்கும் முக்கியமான பகுதியாகும். உக்ரைனின் மரியுபோல் துறைமுகத்திலிருந்து கருங்கடல் பகுதிக்கு இவ்வழியாகவே கப்பல்கள் செல்ல முடியும். ரஷியாவை பொருத்தவரை, கிரைமீயாவுக்கு செல்வதற்கான எளிதான வழி இந்த நீரிணைதான்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT