இந்தியா

கடமை உணர்வு குறைந்து, உரிமை உணர்வு மேலோங்கிவிட்டது: பிரதமர் மோடி

DIN


சுதந்திரத்துக்கு முன்பு நமது நாட்டு மக்களிடையே கடமை உணர்வு அதிகம் இருந்தது; இப்போது மக்களிடையே உரிமை உணர்வு மேலோங்கியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
இப்போதைய சூழ்நிலையில் நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லவும், வளர்ச்சியை ஏற்படுத்தவும் இந்த இரு உணர்வுகளும் இருப்பது அவசியம் என்றும் மோடி தெரிவித்தார்.
மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு குஜராத் மாநிலத்தில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா சார்பில் 150 கி.மீ. தொலைவு நடைப் பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த 16-ஆம் தேதி தொடங்கிய இந்த நடைப் பயணம் பாவ்நகர் மாவட்டம், சனோசாரா கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் காணொலி (விடியோ கான்ஃபரன்சிங்) முறையில் மோடி பேசியதாவது:
மகாத்மா காந்தி எப்போதும் கடமையைச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தினார். ஆனால், நாடு சுதந்திரமடைந்த பிறகு கடமை உணர்வு சிறிது, சிறிதாக குறைந்து, இப்போது உரிமை உணர்வு மேலோங்கிவிட்டது. நாட்டை மேம்படுத்த இந்த இரு உணர்வுகளும் முக்கியமானது. உரிமைகளை நிலைநாட்டும் அதே நேரத்தில் தேசத்துக்கான நமது கடமைகளை மறந்துவிடக் கூடாது. கடமை உணர்வும், உரிமை உணர்வும் சம அளவில் இருக்க வேண்டும்.
7 நாள்கள் நடைபெற்ற இந்த நடைப் பயணத்தில் காந்தி உணர்வு பாதை முழுவதும் பரப்பப்பட்டுள்ளது. நாட்டின் பிற பகுதிகளிலும் இதேபோன்று காந்திய சிந்தனைகள் பரப்பப்பட வேண்டும். அப்போது நாட்டு மக்களிடையே கடமை உணர்வு அதிகரிக்கும். மகாத்மா காந்தி காட்டிய வழியில் தூய்மை இந்தியாவைப் படைக்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. பொதுமக்களின் மகத்தான பங்களிப்புடன் அத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வெற்றி மத்திய அரசுக்கு மட்டும் சொந்தமல்ல. நாட்டின் நலன்மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் சொந்தம். நாம் காந்திய வழியில் நடப்பதன் மூலம் நமக்கு வெற்றிகள் வசப்படுகின்றன.
மகாத்மா காந்தி நமது குஜராத் மண்ணில் பிறந்தவர். நமது குஜராத்தி மொழியைப் பேசியவர் என்பது நமக்கெல்லாம் பெருமை. நாட்டின் சுதந்திரத்தில் பெரும் பங்கு வகித்த சபர்மதி ஆசிரமம் நமது மாநிலத்தில் உள்ளது. எனவே, காந்திய வழியில் நடக்க வேண்டும் என்பதில் குஜராத் மாநில மக்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது.
நாட்டில் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை இல்லை என்பதை இந்த ஆண்டில் ஏற்படுத்த இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறோம். இதற்கு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவை என்றார் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT