சித்தகங்கா பீடாதிபதி ஸ்ரீ சிவக்குமார சுவாமிகள் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

சித்தகங்கா பீடாதிபதி ஸ்ரீ சிவக்குமார சுவாமிகளின் உடல் மடத்துக்குள்ளேயே செவ்வாய்க்கிழமை முழு அரசு
சித்தகங்கா பீடாதிபதி சிவக்குமார சுவாமிகளின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றோர்.
சித்தகங்கா பீடாதிபதி சிவக்குமார சுவாமிகளின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றோர்.


சித்தகங்கா பீடாதிபதி ஸ்ரீ சிவக்குமார சுவாமிகளின் உடல் மடத்துக்குள்ளேயே செவ்வாய்க்கிழமை முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கர்நாடக மாநிலம், தும்கூரு நகரில் 15-ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட சித்தகங்கா மடம், லிங்காயத்து சமுதாயத்தினரை பக்தர்களாகக் கொண்டதாகும். இந்த மடத்தின் பீடாதிபதியாக 89 ஆண்டுகள் பணியாற்றிவந்த 111 வயதாகும் சிவக்குமார சுவாமிகளுக்கு, அண்மையில் சென்னையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து தும்கூரு திரும்பிய சுவாமிகளுக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டது. இதனால் சுவாசக்கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தும்கூரில் உள்ள சித்தகங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு, சிகிச்சை தரப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு சிவக்குமார சுவாமிகளின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து மடத்துக்கு மாற்றப்பட்டு, மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்துவந்தது.
இதனிடையே, சிவக்குமார சுவாமிகளின் உடல்நிலை திங்கள்கிழமை காலை மோசமடைந்தது. சிகிச்சை பலனளிக்காமல் காலை 11.44 மணிக்கு சிவக்குமார சுவாமிகள் லிங்கைக்கியமானார்.
இதனைத் தொடர்ந்து, தும்கூரில் உள்ள சித்தகங்கா மடத்தில் சிவக்குமார சுவாமிகளின் உடல் பொதுமக்கள், பக்தர்களின் இறுதி தரிசனத்துக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெகெளடா, முன்னாள் முதல்வர் சித்தராமையா, பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, அமைச்சர்கள் ஜமீர் அகமதுகான், எம்.பி.பாட்டீல், வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் குருஜி, சுத்தூர் மடத்தின் பீடாதிபதி தேசிகேந்திரசிவராத்திரேஸ்வர சுவாமிகள், ஆதிசுன்சுனகிரி மடத்தின் பீடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமிகள், மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், மடங்களின் பீடாதிபதிகள் நேரில் அஞ்சலி செலுத்தி, இறுதி தரிசனம் பெற்றனர்.
செவ்வாய்க்கிழமையும் பொதுமக்களின் இறுதி தரிசனத்துக்காக வைக்கப்பட்ட அவரது உடலுக்கு முதல்வர் குமாரசாமி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், சதானந்த கெளடா, துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், முன்னாள் பிரதமர் தேவெ கெளடா, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, யோகாகுரு பாபா ராம்தேவ், முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, சித்தராமையா, வீரப்ப மொய்லி, அமைச்சர்கள் டி.கே.சிவக்குமார், ஆர்.வி.தேஷ்பாண்டே உள்ளிட்டோர் இறுதி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, மாலை ருத்ராக்ஷி பல்லக்கில் வைத்து எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடல் மடத்துக்குள்ளேயே முழு அரசு மரியாதையுடன் சைவ முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com