நலிவுற்ற யானைகளின் புகலிடமாகத் திகழும் பராமரிப்பு மையம்!

உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா அருகே செயல்பட்டு வரும் யானைகள் பராமரிப்பு மையம், நலிவுற்ற யானைகளுக்குப் புகலிடமாகத் திகழ்கிறது. 
நலிவுற்ற யானைகளின் புகலிடமாகத் திகழும் பராமரிப்பு மையம்!

உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா அருகே செயல்பட்டு வரும் யானைகள் பராமரிப்பு மையம், நலிவுற்ற யானைகளுக்குப் புகலிடமாகத் திகழ்கிறது. 

கரிய நிறம் கொண்ட யானைகள் எப்போதும் கண்களுக்கு விருந்தளிப்பவை. நீளமான தும்பிக்கையையும், அகலமான தலையையும் ஆட்டிக் கொண்டு நடந்து வரும் யானையின் பிரமாண்ட தோற்றம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனத்தையும் மகிழ்விக்கத் தவறுவதில்லை. ஆனால், பலமிக்க யானையும் மனிதர்களின் கட்டுப்பாட்டில் வரும் போது அவற்றின் சுதந்திரம் கேள்விக்குறியாகிறது. அதுபோன்று துன்புறும் யானைகளை மீட்டு பராமரிக்கும் பணியில் உத்தரப் பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தில் "வைல்டுலைஃப்எஸ்ஓஎஸ்' எனும் தன்னார்வ அமைப்பு ஈடுபட்டு வருகிறது. தில்லியில் இருந்து சுமார் 180 கி.மீ.தூரத்தில் மதுராவில் இருந்து ஆக்ரா செல்லும் சாலையில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் "யானைகள் பாதுகாப்பு, பராமரிப்பு மையம்' செயல்பட்டு வருகிறது.

இந்த மையத்தின் செயல்பாடு குறித்து "வைல்டுலைஃப்எஸ்ஓஎஸ்' அமைப்பின் யானைகள் பாதுகாப்புத் திட்ட இயக்குநர் பைஜு ராஜ் "தினமணி'யிடம் கூறியதாவது:  துன்புறுத்தலுக்கு உள்ளாகும் வனவிலங்குகளைப் பாதுகாக்கும் பணியில் "வைல்டுலைஃப்எஸ்ஓஎஸ்' அமைப்பு ஈடுபட்டு வருகிறது. 2010-இல், காஜியாபாத் பகுதியில் காயங்களுடன் யானை ஒன்றை மீட்டோம். அதன் பிறகு, சாலைகளில் காயமடையும், சட்டவிரோதமாக சாலைகளில் பிச்சை எடுக்கப் பயன்படுத்தப்படும் யானைகளைப் பாதுகாத்துப் பராமரிக்க 2010, ஏப்ரலில் மதுரா அருகே உள்ள ஃபரா பகுதியில் யானைகள் முகாமைத் தொடங்கினோம். தொடக்கத்தில் ஒரு யானையுடன் இந்த மையம் தொடங்கப்பட்டது. தற்போது 22 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், ஹரியாணாவில் உள்ள யானை முகாமில் மூன்று யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.  

இந்த யானைகள் தில்லி, மகாராஷ்டிரம், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து முகாமிற்கு கொண்டு வரப்பட்டவை. இவை உடல் நலிவுற்று, நோயுற்ற நிலையில் இருப்பவை. "ஆஷா' என்கிற யானை அதன் கால்கள், எலும்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் மத்திய பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டது. யானைகள் மிகவும் நுட்பமானவை. அவை அதிகமான பணிக்கு உள்படுத்தப்படும் போதும், தார்ச் சாலைகளில் நடக்கவைக்கப்படும் போதும் கால்களின் பாதங்கள், நகங்கள் பாதிக்கப்படுகின்றன. தில்லி அருகே மீட்கப்பட்ட ஒரு யானையின் பாதங்களில் பீங்கான் துகள்கள் இருந்தது. 

சில நேரங்களில் யானையின் மேலை அமர்ந்திருக்கும் பாகன், பிரம்பால் யானையின் தலையில் அடிக்கும் போது அதனுடைய கண் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. இதுபோன்று மிகவும் பலவீனமாக நிலையில் இந்த முகாமுக்கு கொண்டு வரப்படும் யானைகள் துன்புறுத்தப்படாமல் மகிழ்ச்சியாக இருப்பதற்கான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே சங்கிலிகளால் கட்டப்படாத யானைகள் பராமரிக்கப்படும் ஒரே மையம் இதுதான். நாட்டிலேயே முதல் முறையாக உத்தரப் பிரதேச மாநில வனத் துறையின் ஒத்துழைப்புடன் இயங்கும் " யானைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மையமும்' இதுதான். 

"பீனட்' எனும் யானை புணேயில் சர்க்கஸில் இருந்து மீட்கப்பட்டது. மதுரா யானைகள் முகாம் சுமார் 30 ஏக்கரில் உள்ளது. யானைகள் வசிப்பிட இடம் குறைவாகவும் அவை சுதந்திரமாக உலாவுவதற்கான இடம் அதிமாகவும் இருக்கும் வகையில் மையம் வடிவைக்கப்பட்டுள்ளது. இங்கு 9 முதல் 70 வயது வரையிலான யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கறுப்புக் கரடி, நாட்டுக் கரடி, சிறுத்தை, இமாலய கரடி, யானை ஆகியவற்றை பராமரிக்கும் வகையில் மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன், நாடு முழுவதும் எங்களுக்கு 11 பராமரிப்பு மையங்கள் உள்ளன. யானைகள் முகாமிற்கு தார்மிக ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் உத்தரப் பிரதேச அரசு உதவி வருகிறது.யானைகளுக்கு பசுந்தீவனம், வெல்லம், ஊட்டச்சத்து உணவு, ஊக்க மருந்து ஆகியவை அளிக்கப்படுகின்றன. யானைகளைப் பராமரிக்க 45 பாகன்கள், மூன்று கால்நடை மருத்துவர்கள், 10 இதரப் பணியாளர்கள் உள்பட மொத்தம் 70 பேர் வரை பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தன்னார்வலர்கள் அளிக்கும் நன்கொடை மூலம் இயங்கி வரும் இந்த முகாமில், 50 யானைகள் வரை பராமரிக்க திட்டமிட்டிருக்கிறோம். பாகன்களுக்கு உரிய பயிற்சியும் அளிக்கப்படு கிறது என்றார்.

25 ஏக்கரில் மருத்துவமனை

யானைப் பாதுகாப்பு மையத்தில் இருந்து ஓரிரு கிலோ மீட்டர் தூரத்தில் யானை மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக யானைகளுக்கான பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனை இதுவாகும். கடந்த ஆண்டு நவம்பரில்தான் இந்த மருத்துவமனை திறக்கப்பட்டது. சுமார் 25 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனையில் யானைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அரங்கம் உள்ளது.  மருத்துவமனைக்கு வரக்கூடிய யானையின் உடல் எடையை அளவிட புதிய கருவி, கால்நடை மருத்துவத்துக்கான தனி அறை, பரிசோதனைக் கூடம், கருத்தரங்கக் கூடம், மருந்துகளைப் பாதுகாப்பதற்கான அறை, மருத்துவர்களுக்கான தனியறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. யானைகளுக்கு மூட்டுவலி, கால்வலி, உடல் பாகங்களில் ஏற்படக்கூடிய காயம் ஆகியவற்றுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், நீர் சிகிச்சை அளிப்பதற்காக தனி தொட்டியும் கட்டப்பட்டுள்ளது என்றார் பைஜு ராஜ். இந்த மருத்துவமனையில் 70 வயதுடைய "கஜராஜ்' எனும் யானைக்கு உடல் காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருதைக் காண முடிந்தது. 2015-இல் இந்த யானை இங்கு கொண்டுவரப்பட்டது. அதன் உடலில் ஏற்பட்டுள்ள சில காயங்கள் மற்றும் நகப் பிரச்னைக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர் பிரதாப் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com