மின்னணு வாக்குப்பதிவு இயந்திர விவகாரம்: ஊடுருவல் தொடர்பான போட்டியை நடத்தியது காங்கிரஸ்- பாஜக குற்றச்சாட்டு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஊடுருவுதல் தொடர்பான போட்டிக்கு ஏற்பாடு செய்ததே காங்கிரஸ் கட்சிதான் என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது. தில்லியில் செய்தியாளர்களுக்கு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திர விவகாரம்: ஊடுருவல் தொடர்பான போட்டியை நடத்தியது காங்கிரஸ்- பாஜக குற்றச்சாட்டு


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஊடுருவுதல் தொடர்பான போட்டிக்கு ஏற்பாடு செய்ததே காங்கிரஸ் கட்சிதான் என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது. தில்லியில் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:
லண்டனில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஊடுருவுதல் தொடர்பான போட்டி நடத்தப்பட்டுள்ளது. அதில் பேசிய இந்தியாவைச் சேர்ந்த கணினி வல்லுநர், 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். அதில் உண்மையில்லை.
லண்டன் போட்டிக்கு ஏற்பாடு செய்த இந்தியன் ஜர்னலிஸ்ட் அசோசியேஷன் அமைப்பின் தலைவராக இருக்கும் ஆஷிஷ் ரே, காங்கிரஸ்காரர் ஆவார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆதரித்து துதி பாடுவது அவரது வாடிக்கை. லண்டனில் ராகுல் காந்தி கலந்து கொண்ட பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ததும் அவர்தான். காங்கிரஸ் கட்சிக்காக சமூகவலைதளத்தில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை செய்து வரும் பிரசாரத்திலும் ஆஷிஷுக்கு பங்கு உண்டு. இதை பாஜக அம்பலப்படுத்தும்.
இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததன் மூலம், கடந்த 2014 மக்களவைத் தேர்தல் முடிவையே காங்கிரஸ் அவமதித்துவிட்டது. இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கலந்துகொண்டது ஏன்? எதன் அடிப்படையில் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்?
இந்திய ஜனநாயகம், தேர்தல் ஆணையத்தை அவமதிப்பதற்கு காங்கிரஸ் கட்சி செய்த சதியே, அந்நிகழ்ச்சியாகும். 2014 தேர்தல் தொடர்பாக குற்றச்சாட்டு தெரிவித்த நபரான சையது சுஜா, எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை. ஊடகத்தினரிடமும் பேசவில்லை. அப்படியிருக்கையில் மிகப்பெரிய குற்றச்சாட்டுகளை அவர் தெரிவிக்கிறார். மேற்குவங்கத்தில் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி முறைகேடு செய்தார் என காங்கிரஸ் குற்றம்சாட்டியது. அப்படிப்பட்ட கட்சி, மக்களவைத் தேர்தலை வாக்குச்சீட்டு அடிப்படையில் நடத்த வேண்டும் என விரும்புகிறதா?
அரசியல் அமைப்புகளை பலவீனப்படுத்துவதில் காங்கிரஸுக்கு மிகப்பெரிய பங்குண்டு. அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சி, பாஜக மீது பழிசுமத்துகிறது. அதேபோல், மறைந்த பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான கோபிநாத் முண்டே கொலை செய்யப்பட்டார் என்ற கருத்தும் மிகப்பெரிய வேதனையை தருகிறது. மரணமடைந்த நபரின் பெயரை பயன்படுத்தினால், அவர் அதை மறுக்க மாட்டார் என்பதற்காக கோபிநாத் முண்டே பெயர் பயன்படுத்தப்படுகிறது. கோபிநாத் முண்டே பிரேதத்தை பரிசோதித்த எய்ம்ஸ் மருத்துவர், கழுத்தில் அடிபட்ட காரணத்தினாலேயே அவர் இறந்ததாக தெரிவித்துள்ளார்.
1996ஆம் ஆண்டு முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பாஜக அல்லாத கட்சிகள்தான் பலமுறை வென்றுள்ளன. ஆனால் பாஜக வென்றதும், அந்த இயந்திரம் மீது சந்தேகம் எழுப்பப்படுகிறது என்றார் ரவிசங்கர் பிரசாத்.
முன்னதாக, பிரிட்டன் தலைநகர் லண்டனில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஊடுருவுதல் தொடர்பான போட்டி திங்கள்கிழமை நடத்தப்பட்டது. அப்போது தனது முகத்தை மறைத்துக் கொண்டு ஸ்கைப் செயலி மூலம் பேட்டியளித்த நபர் ஒருவர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரித்த பொதுத் துறை நிறுவன ஊழியர் தாம் என்றும், கடந்த 2014ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவன உதவியுடன் முறைகேடு செய்து பாஜக வெற்றி பெற்றது எனத் தெரிவித்தார். இதை தெரிந்து கொண்ட காரணத்தினால், மத்திய அமைச்சரான கோபிநாத் முண்டே கொலை செய்யப்பட்டதாகவும், அந்த கொலை சம்பவத்தை விசாரித்த என்ஐஏ அதிகாரியும் கொலை செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
அதேபோல், தம்முடன் பணிபுரிந்த ஊழியர்களும் கொலை செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். தம்மை கொலை செய்ய முயற்சி நடந்ததாகவும், அதிலிருந்து தப்பி, அமெரிக்காவுக்கு வந்துவிட்டதாகவும் அந்த நபர் தெரிவித்தார்.
இதனிடையே, லண்டனில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஊடுருவுதல் போட்டி தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் இருந்தார் என்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com