இந்தியா

2 ஆண்டுகளில் 4 லட்சம் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்

DIN


ரயில்வே துறையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் சுமார் 4 லட்சம் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயக்கப்பட்டுவரும் 22 ரயில்களின் சேவை நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பை அவர் தில்லியில் புதன்கிழமை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 
ரயில்வே போக்குவரத்துத் துறையில் பல்வேறு வளர்ச்சி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் மக்களுக்கு அளிக்கப்படும் சேவையின் தரம் மேம்பட்டுள்ளது. ரயில்களின் வேகம், கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே அதிகமானோர் வேலை செய்யும் துறையாக ரயில்வே திகழ்ந்து வருகிறது. கிட்டத்தட்ட 12 லட்சம் பேர் ரயில்வேயில் பணியாற்றி வருகின்றனர்.
ரயில்வே துறையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பலர் ஓய்வு பெறவுள்ளனர். ஏற்கெனவே, ரயில்வே துறையில் 2.82 லட்சம் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இதில் 1.51 லட்சம் பணியிடங்களை நிரப்புவதற்கான நடைமுறை கடந்த 14 மாதங்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, 1.31 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. 2019-2020-இல் 53 ஆயிரம் ஊழியர்களும், 2020-21-இல் 46 ஆயிரம் ஊழியர்களும் ரயில்வே துறையில் ஓய்வு பெற உள்ளனர். இதையொட்டி, 99 ஆயிரம் கூடுதல் காலிப் பணியிடங்கள் ஏற்படவுள்ளன. இதனால், முதல் கட்டமாக 1.31 லட்சம் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கை வரும் பிப்ரவரி- மார்ச் மாதங்களில் தொடங்கி அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதத்திற்குள் முடிக்கப்படும். 
இரண்டாவது கட்டமாக 99 ஆயிரம் கூடுதல் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை அடுத்த ஆண்டு மே - ஜூன் மாதங்களில் தொடங்கி 2021, ஜூலை-ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்கப்படும். இதன் மூலம் ரயில்வே துறையில் அடுத்த இரு ஆண்டுகளில் சுமார் 4 லட்சம் பேர் பணிக்கு அமர்த்தப்படுவர். இப்பணியிடங்களில் ஏற்கனவே உள்ள எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது போக, அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 103-ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின்படி பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடும் அளிக்கப்பட உள்ளது.
வேலைவாய்ப்பு அதிகரிப்பு: ரயில்வே துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால், வேலைவாய்ப்பு அதிகரிக்கவில்லை என்று சிலர் பொய்ப் பிரசாரம் செய்து வருகின்றனர். அதில் உண்மையில்லை. தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது என்றார்பியூஷ் கோயல்.

பிகானீர்- சென்னை ரயில் மதுரை வரை நீட்டிப்பு
முன்னதாக, 22 ரயில்களின் சேவைகள் நீட்டிப்பு அறிவிப்பை அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டார். அதில், பிகானீர் - சென்னை அனுவ்ரத் விரைவு ரயில் (22632/22631) மதுரை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சென்னை எழுப்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், கொடைரோடு ஆகிய ரயில் நிலையங்களில் நிற்கும். அதேபோன்று, சேலம் - காட்பாடி (எம்இஎம்யு) ரயில் (வ.எண்: 6019/66020) அரக்கோணம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் முகுந்தராயபுரம், வாலாஜா ரோடு, சோளிங்கர் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT