ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஜிஎஸ்டி வரி விதிப்பில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக மாநில அளவில் செயல்பட்டு வரும்

ஜிஎஸ்டி வரி விதிப்பில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக மாநில அளவில் செயல்பட்டு வரும் தீர்ப்பாயங்களில் வழங்கப்படும் தீர்ப்பு குறித்து திருப்தியில்லை என்றால் அதுகுறித்து மேல்முறையீடு செய்வதற்காக தேசிய ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் தீர்ப்பாயம் தில்லியில் அமையும்.
மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் சார்பில் தலா ஒரு உறுப்பினரும், அக்குழுவுக்கான தலைவரும் இடம்பெறுவர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது என்று மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஜிஎஸ்டி வரி விதிப்பில் எழும் பிரச்னைகளுக்கு முறையான தீர்வைத் தருவதாக இந்தத் தீர்ப்பாயம் அமையும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார். முன்னதாக, ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும் என்ற பரிந்துரையை முன்வைப்பது என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் மாநில நிதியமைச்சர்கள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவு செய்தது. அந்த முடிவுக்கு தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது.
ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அமைப்பதற்கான ஒருமுறை செலவினம் என்பது ரூ.92.50 லட்சமாக இருக்கும் என்றும், அதற்கடுத்து ஆண்டுதோறும் ஏற்படும் செலவினங்கள் ரூ.6.86 கோடியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரன்சி பரிமாற்ற ஒப்பந்தம்: சார்க் நாடுகளுக்கு இடையேயான கரன்சி பரிமாற்றத்துக்காக ரூ.28,527 கோடியை ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. கரன்சி பரிமாற்றத்துக்காக சார்க் உறுப்பு நாடுகள் இந்தியாவிடம் கோரிக்கையை முன்வைக்கும் பட்சத்தில் அதை உடனடியாக பரிசீலனை செய்வதற்கு ஏதுவாக இந்தத் தொகை நிலுவையில் வைக்கப்பட்டிருக்கும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com