தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 122-ஆவது பிறந்ததினத்தையொட்டி, தில்லி செங்கோட்டையில் போஸ் அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி
தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகத்தை திறந்து வைத்து பார்வையிடும் பிரதமர் நரேந்திர மோடி.
தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகத்தை திறந்து வைத்து பார்வையிடும் பிரதமர் நரேந்திர மோடி.


சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 122-ஆவது பிறந்ததினத்தையொட்டி, தில்லி செங்கோட்டையில் போஸ் அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை திறந்து வைத்தார். மேலும், ஜாலியன் வாலாபாக், முதல் உலகப் போர், 1857-ஆம் நடைபெற்ற முதல் இந்திய சுதந்திர போர், திரிஷ்யகலா கலை ஆகிய அருங்காட்சியகங்களையும் அவர் திறந்து வைத்தார்.
நேதாஜியின் பிறந்ததினம் புதன்கிழமை (ஜன. 23) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதையொட்டி அவரது வாழ்க்கை வரலாறு குறித்த அருங்காட்சியகத்தை செங்கோட்டையில் மோடி திறந்து வைத்தார். இதுதொடர்பாக சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
நேதாஜியின் பிறந்ததினத்தில் நான் அவரை தலைவணங்குகிறேன். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு தன்னை முழுவதுமாக அர்ப்பணித்தவர் அவர். போஸ் அருங்காட்சியகம், இந்திய வரலாறு மற்றும் கலாசாரம் குறித்த 4 அருங்காட்சியகங்களை திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். சுதந்திர போராட்ட வீரர்களின் வீரத்துக்கும், தியாகத்துக்கும் மரியாதை செய்யும் விதமாக இவை திறக்கப்பட்டுள்ளன. இந்த 4 அருங்காட்சியகங்களும் இணைந்த வளாகம் கிராந்தி மந்திர் என்று அழைக்கப்படும். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் ஆஸாத் ஹிந்த் பெளஜ் ஆகிய அருங்காட்சியகங்கள் இந்த வளாகத்தில் மிக முக்கியமானவை. இந்த வளாகத்தின் சுவர்கள் அனைத்தும் நமது நாட்டின் வரலாற்றை பறை சாற்றும் வகையில் உள்ளன. நாட்டின் வீர மகன்களான கர்னல் பிரேம் சாஹல், குர்பாக்ஷ் சிங் திலன் மற்றும் மேஜர் ஜெனரல் ஷா நவாஸ் கான் ஆகியோர் ஆங்கில ஆட்சியாளர்களால் மரண தண்டனை விதிக்கப்பட்டு நாட்டுக்காக உயிர் நீத்தவர்கள். 
கலை ஆர்வம் மிக்கவர்கள் கண்டிப்பாக திரிஷ்யகலா அருங்காட்சியகத்தை பார்வையிட வேண்டும். அந்த அருங்காட்சியகத்தின் மூலம் இந்திய கலை மற்றும் கலாசாரத்தின் நுண்ணிய தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
நேதாஜி அணிந்திருந்த தொப்பியை அளித்த அவரது குடும்பத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த தொப்பியும் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது என்று மோடி கூறினார்.
அருங்காட்சியகம் குறித்த தகவல்கள்: நேதாஜி மற்றும் இந்திய தேசிய ராணுவம்(ஐஎன்ஏ) அருங்காட்சியகத்தில் வீரர்கள் பயன்படுத்திய வாள், சீருடை ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி நேதாஜி மற்றும் ஐஎன்ஏ குறித்து எடுக்கப்பட்ட ஆவணப் படமும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஜாலியன் வாலாபாக் அருங்காட்சியகத்தில், ஜாலியன் வாலாபாக் படுகொலை குறித்த நிகழ்வுகள் நினைவகமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்திய வீரர்கள் செய்த தியாகங்கள், அவர்களது வீரம் ஆகியவை குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் முதல் உலகப்போர் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. போரில் ஈடுபட்ட வீரர்கள் செய்த தியாகங்கள் குறித்து சரோஜினி நாயுடு எழுதிய கிப்ட் பாடலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
1857-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்திய சுதந்திரப்போர் அருங்காட்சியகம், அந்தப் போரின் நிகழ்வுகள், போருக்காக இந்தியர்கள் செய்த தியாகங்கள் குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
திரிஷ்யகலா கலை அருங்காட்சியகத்தில் 16-ஆம் நூற்றாண்டு முதல் இந்தியா சுதந்திரமடையும் வரை இருந்த ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ரவி வர்மா மற்றும் அம்ரிதா செர்கில் ஆகியோரின் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com