இருபது ஆண்டுகளில் 10 முதல்வர்களைக் கண்ட கர்நாடகம்: தொடரும் சாபத்தின் பின்னணி

காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சியின் நிலைத் தன்மை மீது செய்யப்பட்ட தாக்குதலில் இருந்து கர்நாடக அரசு தப்பிக்குமா? கடந்த இரண்டு வாரங்களாக நடந்து வரும் சர்ச்சை கவலைக்குரியதாகவே உள்ளது.
இருபது ஆண்டுகளில் 10 முதல்வர்களைக் கண்ட கர்நாடகம்: தொடரும் சாபத்தின் பின்னணி


பெங்களூரு: காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சியின் நிலைத் தன்மை மீது செய்யப்பட்ட தாக்குதலில் இருந்து கர்நாடக அரசு தப்பிக்குமா? கடந்த இரண்டு வாரங்களாக நடந்து வரும் சர்ச்சை கவலைக்குரியதாகவே உள்ளது.

ஏற்கனவே மூழ்கும் கப்பலைப் போல இருந்த குமாரசாமியின் அரசுக்கு, ஒவ்வொரு அதிருப்தி எம்எல்ஏக்களும் விமானம் ஏறும் போதெல்லாம் மேலும் சில துளைகள் ஏற்பட்டு, கடும் ஆட்டத்தைக் கண்டது.

எப்போது இதுபோன்ற நாடகங்கள் நடந்தேறினாலும் யாராலும் ஆட்சியாளர்களைக் காப்பாற்ற முடியாது. வாருங்கள்.. இந்த சாபக்கேட்டின் பின்னணியைப் பார்க்கலாம்.

எதுவாக இருந்தாலும்  தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ்நிலை கர்நாடகாவுக்கு புதுசுதான். ஆச்சரியமாக இருக்கிறதா? கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் கர்நாடகாவில் 5 முறை தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. அதில் 2 முறை கூட்டணி உடைந்தது, 3 முறை கூட்டணி அரசு அமைந்தது, இரண்டு முறை குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்றது. நீங்கள் நம்பினால் நம்புங்கள் 10 முதல்வர்கள் இந்த 20 ஆண்டுகளில் கர்நாடகாவை ஆண்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் நடக்கும் தேர்தல்களின் போது மக்கள் எப்போதும் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களித்து வந்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் இரண்டே முதல்வர்கள்தான் தங்களது முழு பதவிக் காலத்தை ஆண்டுள்ளனர். ஒன்று 1972ம் ஆண்டு முதல்வரான தேவராஜ் மற்றும் 2013ம் ஆண்டு முதல்வரான சித்தராமையா. ஆனால் இதே 20 ஆண்டுகளில் இவர்களுடன் 18 முதல்வர்கள் கர்நாடகாவை ஆண்டுள்ளனர். அவர்களில் எஸ்.எம். கிருஷ்ணா கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் முதல்வராக இருந்து சாதனை படைத்தார்.

கூட்டணி முறிவு, உள்கட்சி விவகாரம், ஊழல் குற்றச்சாட்டு போன்றவை கர்நாடகாவில் தொடர் ஆட்சி மாற்றத்துக்குக் காரணங்களாக அமைந்துவிட்டன.

இதே மதசார்பற்ற ஜனதா தளம் கடந்த 20 ஆண்டுகளில் மூன்று முறை கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது. இரண்டு முறை காங்கிரஸ் கட்சியுடனும், ஒரு முறை பாஜகவுடனும் கூட்டணி அமைத்தது. ஆனால் ஒரே ஒரு முறை மட்டுமே மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அதிகாரத்தை அனுபவிக்க முடிந்தது. இரண்டு முறையும் கூட்டணி முறிந்து ஆட்சி பறிபோனது.

இதில் 2004ம் ஆண்டு மஜத - பாஜகவுடன் கூட்டணி அமைத்து 20 - 20 என்று ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள முடிவு செய்தது. முதல் இரண்டரை காலத்துக்கு முதல்வராக குமாரசாமி பதவியேற்றுக் கொண்டார். 20 மாதங்கள் முடிந்தது, ஆனால், முதல்வர் பதவியை எடியூரப்பாவுக்கு விட்டுக் கொடுக்க குமாரசாமி மறுத்ததால், ஆட்சி கலைந்தது. 2008ம் ஆண்டு பேரவைத் தேர்தலுக்கு முன்பு கர்நாடகாவில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வந்தது யாருக்கும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்காது.

இதுபோல பலக் காரணங்களால் கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் கர்நாடகா 10 முதல்வர்களை சந்திக்கும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

தற்போதும், இதேப்போன்ற ஒரு துர்பாக்கிய நிலைக்குத்தான் மஜத - காங்கிரஸ் கூட்டணி தள்ளப்பட்டுள்ளது. 15க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் கொடுத்திருக்கும் நிலையில் வரும் வியாழக்கிழமை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக் கோர உள்ளார் முதல்வர் குமாரசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

குமாரசாமிக்கு அதிர்ஷ்டக் காற்று வீசுமா, சாபமே நீடிக்குமா? 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com