உ.பி.யில் 10 பேர் கொல்லப்பட்ட விவகாரம்: 5 அதிகாரிகள் பணியிடைநீக்கம்

சோன்பத்ரா விவகாரத்தில் 5 அரசு அதிகாரிகளை பணியிடைநீக்கம் செய்துள்ளதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
உ.பி.யில் 10 பேர் கொல்லப்பட்ட விவகாரம்: 5 அதிகாரிகள் பணியிடைநீக்கம்


சோன்பத்ரா விவகாரத்தில் 5 அரசு அதிகாரிகளை பணியிடைநீக்கம் செய்துள்ளதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

வருவாய் துறை கூடுதல் தலைமைச் செயலர் தலைமையிலான குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு 10 தினங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் பிரச்னை தொடர்பாக 29 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கெனவே, இரு பிரிவினரிடையே நிலத் தகராறு எழுந்திருந்தபோதிலும் அந்தப் பிரச்னையை தீர்த்து வைக்காமல் இருந்ததற்காக காவல் துறை துணை ஆய்வாளர் உள்பட 4 காவலர்களும், ஒரு மாவட்ட நிர்வாக அதிகாரியும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 1955ஆம் ஆண்டிலிருந்து இரு தரப்பினருக்கு இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் வகுக்கப்பட்ட தவறான கொள்கைகள்தான் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படக் காரணம் என்று அந்த அறிக்கையில் யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டுள்ளார்.

கோராவல் பகுதியிலுள்ள முர்தியா கிராமத்தில் உள்ள நிலம் ஒன்றை ஐஏஎஸ் அதிகாரி ஒருவரிடமிருந்து அந்த கிராமத்தின் தலைவரான யக்யா தத் சில ஆண்டுகளுக்கு முன் வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என்று கிராம மக்கள் கூறி வந்தனர். இதனால், யக்யா தத்துக்கும், கிராம மக்களுக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், அந்த நிலத்தை கைப்பற்றுவதற்காக தனது அடியாள்களுடன் வந்த யக்யா தத்தை கிராம மக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது, கிராம மக்கள் மீது யக்யா தத்தும், அவரது அடியாள்களும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஒருவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

பாதிக்கப்பட்டவர்கள் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். துப்பாக்கி குண்டு காயங்களுடன் மீட்கப்பட்ட 18 பேர், அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com