எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து 3-ஆவது நாளாக அத்துமீறல்

 ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து 3-ஆவது நாளாக அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.


 ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து 3-ஆவது நாளாக அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.
இதுதொடர்பாக பாதுகாப்புத் துறை செய்தி தொடர்பாளர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
ஜம்மு மாவட்டத்தில் உள்ள அக்னூர் பகுதியின் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதி அருகேயுள்ள இந்திய ராணுவ முகாம்கள் மீது திங்கள்கிழமை இரவு பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தீவிர தாக்குதல் நடத்தினர். 
அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவத்தினரும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். பல மணி நேரம் வரை இந்த மோதல் நீடித்தது. எனினும் இரு தரப்பிலும் எவ்வித பாதிப்பும் இல்லை. 
இதேபோல, ரஜெளரி மாவட்டத்தில் உள்ள சுந்தர்பானி நிலை அருகேயுள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியிலும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அதையும் பாதுகாப்பு படையினர் முறியடித்தனர் என்று கூறினார்.
முன்னதாக, ரஜெளரியில் உள்ள இதே பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமையிலும் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அப்போது, இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர். 
 காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது கடந்த மாதம் 14-ஆம் தேதி பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். 
அதற்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது விமானப் படை மூலமாக இந்தியா தாக்குதல் நடத்தியது. அதையடுத்து, கடந்த ஒரு மாத காலமாக, ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த 2003-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லைப் பகுதியில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை 110 முறைக்கும் மேல் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com