25 ஆண்டுகளில் காசநோயை  முற்றிலுமாக ஒழிக்க முடியும்: சர்வதேச நிபுணர்கள் கருத்து

மருத்துவ ஆராய்ச்சிக்கு முறையாக செலவு செய்தால், காசநோயை வரும் 2045-க்குள் முற்றிலுமாக ஒழித்து விட முடியும் என்று சர்வதேச மருத்துவ நிபுணர் குழுவினர் கருத்து தெரிவித்துள்ளனர்.


மருத்துவ ஆராய்ச்சிக்கு முறையாக செலவு செய்தால், காசநோயை வரும் 2045-க்குள் முற்றிலுமாக ஒழித்து விட முடியும் என்று சர்வதேச மருத்துவ நிபுணர் குழுவினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித குலத்தை காசநோய் பீடித்துள்ளது. இந்த நோயால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்க்கு ஆண்டொன்றுக்கு 16 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். உரிய நேரத்தில் கண்டறிந்து, சிகிச்சை அளித்தால், காசநோயை முற்றிலும் தடுக்க முடியும் என்று சர்வதேச மருத்துவ நிபுணர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சர்வதேச அளவிலான மருத்துவ ஆராய்ச்சி இதழான லான்சட் பத்திரிகையில், காசநோய் மற்றும் நுரையீரல் நோய்க்கு எதிரான சர்வதேச மருத்துவ சங்கம் சார்பில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், கூறப்பட்டிருப்பதாவது:
உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கினருக்கு காசநோய் பாதிப்பு உள்ளது. மலேரியா, ஹெச்ஐவியைப் போன்று ஆண்டுதோறும் லட்சக் கணக்கானோர் காசநோய்க்கு உயிரிழந்தாலும், புதிய தடுப்பு மருந்துகள் ஏதும் தற்போது இல்லை. மேலும், ஹெச்ஐவியை ஒழிப்பதற்கு ஒதுக்கப்படும் நிதியில் 10 சதவீதம் மட்டுமே காசநோயை ஒழிப்பதற்கு ஒதுக்கப்படுகிறது.
காசநோயைக் குணப்படுத்துவதற்கான மருத்துவ செலவு, பொருளாதார பாதிப்பு என ஆண்டொன்றுக்கு ரூ.21.95 லட்சம் கோடி இழப்பு ஏற்படுகிறது. தற்போது புழக்கத்தில் இருக்கும் மருந்துகளும், மருத்துவ சிகிச்சை முறைகளும் போதுமானவையாக இல்லை. ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக  2 சதவீதத்தினரை மட்டுமே குணப்படுத்த முடிகிறது. தற்போதைய மருத்துவ சிகிச்சை முறை அனைத்தையும் பயன்படுத்தினாலும் கூட, மருத்துவ பரிசோதனைகளில் உள்ள குறைபாடுகளால் 8 லட்சம் பேர் உயிரிழக்கக் கூடும். இந்நிலையில், கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரஸில் அண்மையில் புதிய வகை மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதால், 80 சதவீத நோயாளிகள் குணமடைந்தனர். மற்ற நாடுகளிலும், இந்த சிகிச்சை முறையால் பலர் பலனடைந்துள்ளனர். இது, மருத்துவ உலகுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
நோயின் தாக்கம் அதிகரிப்பதற்கு ஏற்ப புதிய வகை மருந்துகளையும் கண்டுபிடிக்க வேண்டியது அவசியமாகிறது. எனவே, மருத்துவ ஆராய்ச்சிக்காக, ஆண்டொன்றுக்கு ரூ.2.05 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com