இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய மாட்டோம்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பிரச்னையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) மத்தியஸ்தம் செய்து வைக்காது என்று அந்த அமைப்பின் பொதுச் செயலர் விளாதிமீர்


இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பிரச்னையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) மத்தியஸ்தம் செய்து வைக்காது என்று அந்த அமைப்பின் பொதுச் செயலர் விளாதிமீர் நோரோவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:
இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களது பிரச்னைகளை பரஸ்பரம் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
அந்த இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
எஸ்சிஓ அமைப்பில் இணைவதற்கு முன்னர், இந்த அமைப்பின் அடிப்படை விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதாக இந்தியாவும், பாகிஸ்தானும் உறுதியளித்துள்ளன.
அவற்றில் ஒன்று, தங்களுக்கிடையிலான பிரச்னைகளை அமைப்பில் எழுப்பக் கூடாது என்பதாகும். காரணம், உறுப்பு நாடுகளுக்கிடையிலான பிரச்னைகளுக்கு எஸ்சிஓ அமைப்பு மத்தியஸ்தம் செய்து வைக்காது.
அந்த வகையில், இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையிலும் இந்த அமைப்பு மத்தியஸ்தம் செய்து வைக்காது.
எந்த வித நிபந்தனையும் இன்றி பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிட வேண்டும் என்பது எஸ்இஓ அமைப்பில் உறுப்பினராக இருப்பதற்கான மிக முக்கியமான நிபந்தனையாகும்.
எனவே, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியாவும், பாகிஸ்தானும் நிபந்தனையின்றி மேற்கொள்ளாவிட்டால் அந்த இரு நாடுகளும் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக செயல்பட முடியாது.
எஸ்சிஓ அமைப்பில் இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்த பிறகு, ஆப்கானிஸ்தானில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்துவதில் இரு நாடுகளும் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டு வருகின்றன.
கடந்த 12 ஆண்டுகளாக எஸ்சிஓ அமைப்பின் பார்வையாளர்களாக இருந்த அந்த இரு நாடுகளும், அமைப்பின் விதிமுறைகளை சிறந்த முறையில் பின்பற்றி வந்ததாலேயே அவை நிரந்தர உறுப்பு நாடுகளாக்கப்பட்டன.
தற்போது, எஸ்சிஓ-வின் செயலகம், பயங்கரவாதத்துக்கு எதிரான செயல்குழு போன்றவற்றில் இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகின்றனர்.
மேலும், கடந்த ஆண்டு எஸ்சிஓ நடத்திய பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டு ராணுவப் பயிற்சியில் 300-க்கும் மேற்பட்ட இந்திய - பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இணைந்து பங்கேற்றனர்.
இந்தியாவும், பாகிஸ்தானும் எஸ்சிஓ-வில் இணைந்த பிறகு, மக்கள்தொகை, பரப்பளவு, இயற்கை வளங்கள், பொருளாதாரம் ஆகியவற்றில் பிராந்தியத்தில் மட்டுமன்றி உலகிலேயே மிகப் பெரிய அமைப்பாக எஸ்சிஓ ஆகியுள்ளது.
உலகின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் இந்த அமைப்பு முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று பல நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர் என்றார் விளாதிமீர் நோரோவ்.
பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, ரஷியா, சீனா, கஜகஸ்தான், கிரிகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து கடந்த 2001-ஆம் ஆண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பில் நீண்ட காலமாக பார்வையாளராக  இருந்து வந்த இந்தியாவும், பாகிஸ்தானும், கடந்த 2017-ஆம் ஆண்டு நிரந்தர உறுப்பு நாடுகளாக இணைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com