இந்தியா

இந்தியா மீது பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்தால் மிகுந்த சிக்கல் ஏற்படும்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

DIN


இந்தியாவில் மீண்டும் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நிகழுமானால், அது பாகிஸ்தானுக்கு மிகுந்த சிக்கல் ஏற்படுத்துவதாக அமையும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை மீண்டும் ஒருமுறை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் சிஆர்பிஎஃப் படையினர் மீது, பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதி கடந்த மாதம் 14-ஆம் தேதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் உருவானது.
இந்தச் சூழலில்,இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானின் பாலாகோட் பகுதிக்குள் நுழைந்து வெடிகுண்டுகளை வீசி பயங்கரவாத முகாம்களை தகர்த்தன. இதற்கிடையே, எல்லையில் ஊடுறுவ முயன்ற பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய விமானப்படையினர் சுட்டு வீழ்த்தினர். அந்தச் சண்டையின்போது, பாகிஸ்தானில் சிக்கிய இந்திய விமானி அபிநந்தன், பின்னர் விடுதலை செய்யப்பட்டு கடந்த 1-ஆம் தேதி நாடு திரும்பினார். இதையடுத்து, போர் பதற்றம் குறைந்தது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் மாளிகையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர், வாஷிங்டனில் செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக கடுமையான, தொடர் நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். குறிப்பாக, லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது ஆகிய இயக்கங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தப் பிராந்தியத்தில் மீண்டும் போர் பதற்றம் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை.
ஆனால், அதே சமயம், பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகளை எடுக்காத பட்சத்தில், இந்தியா மீது மேலும் ஏதேனும் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறுமானால், அது பாகிஸ்தானுக்கு மிகுந்த சிக்கலை ஏற்படுத்துவதாக அமையும். இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் போர் பதற்றம் உருவாகக் கூடும். இது இரு நாடுகளுக்குமே ஆபத்தானது என்றார் அவர்.
பயங்கரவாதத்துக்கு எதிராக அண்மைக் காலங்களில் பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்துள்ளதா என்ற கேள்விக்கு அந்த அதிகாரி பதில் அளிக்கையில், இப்போதைக்கு முழுமையாக மதிப்பீடு செய்துவிட முடியாது. ஆனால், சில நடவடிக்கைகளை பாகிஸ்தான் தொடங்கியுள்ளது. பயங்கரவாத குழுக்களின் சொத்துகளை முடக்கியுள்ளனர். மேலும் பயங்கரவாதிகள் சிலரையும் கைது செய்துள்ளனர். ஜெய்ஷ் அமைப்பின் இயங்கு தளங்கள் சிலவற்றை பாகிஸ்தான் அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
ஆனால், பாகிஸ்தான் இன்னும் அதிகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கடந்த காலங்களிலும்கூட, இதேபோன்ற கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுவிட்டு, பின்னர் விடுதலை செய்துவிட்டனர். சில சமயங்களில் பயங்கரவாதிகள் வெளிநாடு செல்லவும், பொதுக்கூட்டங்களை நடத்தவும் அனுமதிக்கப்பட்டனர். ஆகவே, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். 
பாகிஸ்தானுக்கு சர்வதேச அளவில் நெருக்கடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT