பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, கந்தூரி தேர்தலில் போட்டியில்லை

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, கே.சி.கந்தூரி ஆகியோர் போட்டியிடவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, கந்தூரி தேர்தலில் போட்டியில்லை

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, கே.சி.கந்தூரி ஆகியோர் போட்டியிடவில்லை என்பது உறுதியாகிவிட்டது. ஏனெனில், பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் அவர்கள் பெயர் இடம் பெறவில்லை. அவர்கள் இப்போது எம்.பி.யாக உள்ள தொகுதிகள், அடுத்த கட்ட தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டன.
முக்கியமாக, அத்வானியின் காந்திநகர் தொகுதி வேட்பாளராக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா அறிவிக்கப்பட்டுள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் பி.சி.கந்தூரியின் கர்வால் தொகுதிக்கு டி.எஸ்.ராவத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த தலைவர்களுக்கு பதிலாக அடுத்தகட்ட இளம் தலைவர்களுக்கு பொறுப்புகளை வழங்குவது என்று பாஜக ஏற்கெனவே முடிவெடுத்துள்ளது. அத்வானிக்கு இப்போது 91 வயதாகிறது. கே.சி. கந்தூரியின் வயது 84. கடந்த 1998-ஆம் ஆண்டு முதல் காந்திநகர் தொகுதி எம்.பி.யாக அத்வானி உள்ளார். ஒரு காலத்தில் அத்வானியின் தேர்தல் விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பில் அமித் ஷா இருந்தார். இப்போது, அவரே அத்வானியின் தொகுதியில் வேட்பாளராகியுள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவர்களான கல்ராஜ் மிஸ்ரா, பகத் சிங் கோஷியாரி ஆகியோர் ஏற்கெனவே மக்களவைத் தொகுதியில் போட்டியிட விருப்பம் இல்லை என்று அறிவித்துவிட்டனர். மற்றொரு மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி, கான்பூர் தொகுதி எம்.பி.யாக உள்ளார். அவரது தொகுதிக்கு முதலாவது வேட்பாளர் பட்டியலில் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. எனினும், ஜோஷியும் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மூத்த தலைவர்களை ஒருங்கிணைத்து மார்க்கதர்ஷன் மண்டல் என்ற வழிகாட்டுதல் குழுவை பாஜக அமைத்தது. அத்வானி, ஜோஷி ஆகியோர் இடம் பெற்றுள்ள இந்தக் குழுவின் கூட்டம் ஒருமுறை கூட நடைபெற்றதில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com