இந்தியா

பாகிஸ்தான் தேசிய தின நிகழ்ச்சியை புறக்கணித்தது இந்தியா

DIN


பாகிஸ்தான் தேசிய தினத்தை முன்னிட்டு, தில்லியிலுள்ள அந்நாட்டின் தூதரகத்தில்  வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, இந்த முடிவை மத்திய அரசு  மேற்கொண்டது.
பாகிஸ்தான் நாட்டின் தேசிய தினம் சனிக்கிழமை (மார்ச் 23) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தில்லியிலுள்ள அந்நாட்டின் தூதரகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஒருவர் பங்கேற்பது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால், நிகழாண்டு நிகழ்ச்சிக்கு இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் யாரையும் அனுப்புவதில்லை என்று மத்திய அரசு முடிவு செய்தது. ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஹுரியத் தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டதைத்தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன்படி, தில்லியிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கவில்லை. அதேசமயம், ஹுரியத் அமைப்பின் முக்கியத் தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்று பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் 14-ஆம் தேதி தற்கொலைப் படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்கு, பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து, பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் கடந்த மாதம் 26-ஆம் தேதி வான்வழி தாக்குதல் நடத்திய இந்திய விமானப் படை, அங்கு செயல்பட்டு வந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத முகாம்களை அழித்தது. மறுநாள், இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்குதல் நடத்த முயன்றன. ஆனால், அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்த சம்பவங்களால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

SCROLL FOR NEXT