வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவி பயன்பாடு: தேர்தல் ஆணையம் விரைவில் முடிவு

மக்களவைத் தேர்தலில் எத்தனை சதவீத வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்கு ஒப்புகைச் சீட்டு (விவிபிஏடி) கருவி பொருத்தப்பட வேண்டும்
வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவி பயன்பாடு: தேர்தல் ஆணையம் விரைவில் முடிவு


மக்களவைத் தேர்தலில் எத்தனை சதவீத வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்கு ஒப்புகைச் சீட்டு (விவிபிஏடி) கருவி பொருத்தப்பட வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் விரைவில் முடிவெடுக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில், விவிபிஏடி கருவிகளை எத்தனை சதவீத வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொருத்துவது என்பது குறித்த விவரமான அறிக்கையை இந்திய புள்ளியியல் நிறுவனம் (ஐஎஸ்ஐ) தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது.
அந்த அறிக்கையை தீவிரமாக பரிசீலித்து வரும் ஆணையம், இதுதொடர்பாக விரைவில் முடிவெடுக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் (இவிஎம்) மூலம் நடைபெறும் தேர்தலின் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்காக, அந்த இயந்திரங்களில் சிலவற்றில் விவிபிஏடி கருவிகள் பொருத்தப்படுகின்றன.
வாக்குப் பதிவின்போது, வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான சின்னத்தினைத் தேர்வு செய்து, இவிஎம் இயந்திரத்தின் பொத்தானை அழுத்திய பிறகு, அதனுடன் பொருத்தப்பட்ட விவிபிஏடி கருவி அந்தச் சின்னத்தை அச்சிட்டு வாக்களரிடம் சுமார் 7 விநாடிகளுக்குக் காட்டும். அதற்குப் பிறகு அந்த ஒப்புகைச் சீட்டு தனியாக துண்டிக்கப்பட்டு சீலிடப்பட்ட ஒரு பெட்டிக்குள் தானாகவே விழுந்துவிடும்.
இதன் மூலம், தாங்கள் விரும்பிய வேட்பாளருக்குத்தான் வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் உறுதி செய்துகொள்ள முடியும்.
மேலும், மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும், அச்சிடப்பட்ட பிறகு வாக்காளர்களால் சரிபார்க்கப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளையும் பின்னர் ஒப்பிட்டு, வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடைபெறவில்லை என்பதை பின்னர் உறுதி செய்துகொள்ள முடியும்.
தற்போதைய நிலையில், நேர்மையான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய ஒரு வாக்குச் சாவடிக்கு ஒரு விவிபிஏடி கருவி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
எனினும், இந்த விகிதம் போதாது என்றும், 50 சதவீத வாக்குப் பதிவு இயந்திரங்களில் விவிபிஏடி கருவி பொருத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
கடைசியாக, 30 சதவீத வாக்குப் பதிவு இயந்திரங்களில் அந்தக் கருவிகள் பொருத்த வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
87 லட்சம் வாக்குப் பதிவு இயந்திரங்களில் விவிபிஏடி கருவி பொருத்துவது நடைமுறைக்கு ஒத்துவராது என்று ஆணையம் தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து, எத்தனை சதவீத வாக்குப்  பதிவு இயந்திரங்களில் விவிபிஏடி கருவி பொருத்த வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு இந்திய புள்ளியியல் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அந்த அறிக்கை தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விரைவில் முடிவெடுக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com