2004-2014 காலகட்டத்தில் ராகுலின் வருமானம் அதிகரித்தது எப்படி?

"காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் ஆட்சிக் காலத்தில், கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் வருமானம் அதிகரித்துள்ளது எப்படி?' என்று மத்திய அமைச்சர்
2004-2014 காலகட்டத்தில் ராகுலின் வருமானம் அதிகரித்தது எப்படி?

"காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் ஆட்சிக் காலத்தில், கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் வருமானம் அதிகரித்துள்ளது எப்படி?' என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தில்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சனிக்கிழமை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து ஈட்டும் வருமானத்தை தவிர ராகுல் காந்தி வேறு எந்த வகையிலும் வருமானம் ஈட்டவில்லை.
ஆனால், 2004, 2009, 2014 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தொகுதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ராகுல் காந்தி தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் அதிக வருமானம் குறிப்பிடப்பட்டு வந்துள்ளது.
2004ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2014ஆம் ஆண்டு தாக்கல் செய்த வேட்பு மனுவில் சுட்டிக் காட்டியுள்ளதை பார்க்கும்போது பல மடங்கு வருமானம் ராகுல் காந்தி ஈட்டியுள்ளது தெரிய வருகிறது.
2004 மக்களவைத் தேர்தலில் போட்டியிட ராகுல் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவில் அவரது வருமானம் ரூ.55,38,123 என்று குறிப்பிட்டுள்ளார். 2009இல் தனது வருவாய் ரூ.2 கோடி என்றும் 2014இல் ரூ.9 கோடி என்றும் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். எம்.பி.யாக இருக்கும் ஒருவரால்  எவ்வளவு வருமானம் ஈட்ட முடியும் என்பதை அறிவோம். எப்படி இவ்வளவு பெரிய தொகையை ஈட்டினார் என்று ராகுல் பதிலளிக்க வேண்டும்.
ரூ.55 லட்சத்திலிருந்து அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.9 கோடி அதிகரித்தது எப்படி? பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேராவின் வளர்ச்சி மாதிரியை ராகுலும் பின்பற்றத் தொடங்கிவிட்டார் போலும். ராபர்ட் வதேரா ரூ.6 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை முதலீடு செய்து, ரூ.700 கோடி முதல் ரூ.800 கோடி வரை 3 ஆண்டுகளில் வருவாய் ஈட்டியதை நாம் அறிந்திருப்போம். தற்போது ராகுல் காந்தி வளர்ச்சி மாதிரியை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பிரியங்காவுக்கும், ராகுலுக்கும் 4.69 ஏக்கர் நிலத்தில் தில்லியில் பண்ணை வீடு உள்ளது. அந்த இல்லம் ஃபைனான்சியல் டெக்னாலஜிஸ் (இந்தியா) லிமிடெட் (எஃப்டிஎல்) நிறுவனத்துக்கு வாடைகைக்கு அளிக்கப்பட்டது.
அந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் என்பது விதிமீறல்களுக்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகும். அந்த விதிமீறல் காலகட்டத்தில்தான் எஃப்டிஎல் நிறுவனத்துக்கு பண்ணை வீடு வாடகைக்கு விடப்பட்டது. அதற்காக எஃப்டிஎல் நிறுவனம் ரூ.40 லட்சம் காசோலை மூலம் செலுத்தியது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் தொடர்புடைய யுனிடெக் நிறுவனத்திடம் இருந்து முறையே ரூ.1.44 கோடி, ரூ.5.36 கோடி மதிப்பிலான 2 சொத்துகளை ராகுல் காந்தி வாங்கினாரா? இல்லையா? என்பது குறித்து  பதிலளிக்க வேண்டும்.
பாஜக அரசு மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே 2ஜி அலைக்கற்றை வழக்கின் விசாரணை இறுதிகட்டதை நெருங்கியது. 2ஜி அலைக்கற்றை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு தார்மிக அடிப்படையில் சரியாக இல்லை என்று அப்போதே குரலெழுப்பினேன். அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவர் போதிய சாட்சிக்காக 7 ஆண்டு முதல் 8 ஆண்டு வரை காத்திருந்ததாகத் தெரிவித்தார். இதற்கும், யுனிடெக் நிறுவனத்திடம் சொத்துகளை வாங்கியதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்பதில் சந்தேகம் எழுகிறது. இந்த விவகாரத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. விரைந்து விசாரணையை நடத்தி முடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார் ரவிசங்கர் பிரசாத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com