மோடிக்கும், மம்தாவுக்கும் வேறுபாடில்லை: ராகுல் தாக்கு

தேர்தலின்போது மக்களுக்கு வாக்குறுதிகள் அளித்து, ஆட்சிக்கு வந்த பிறகு அதை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுவதில் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் வேறுபாடு இல்லை
மோடிக்கும், மம்தாவுக்கும் வேறுபாடில்லை: ராகுல் தாக்கு

தேர்தலின்போது மக்களுக்கு வாக்குறுதிகள் அளித்து, ஆட்சிக்கு வந்த பிறகு அதை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுவதில் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் வேறுபாடு இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார்.
மேற்கு வங்க மாநிலம், மால்டாவிலும், பிகார் மாநிலம், புர்னியாவிலும் காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் ராகுல் காந்தி பேசியதாவது:
மேற்கு வங்கத்தில், தனக்கு மட்டுமே பேசும் உரிமை உள்ளது போலவும், வேறு எவருக்கும் அந்த உரிமை கிடையாது என்பது போலவும் முதல்வர் மம்தா பானர்ஜி செயல்படுகிறார். மாநிலத்தில் அவர் எந்த மாதிரியான ஆட்சியை நடத்துகிறார் எனத் தெரியவில்லை.
கடந்த பல ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் எந்த மாற்றமும் நிகழவில்லை. மம்தா பானர்ஜியின் ஆட்சியில் எந்தவொரு வளர்ச்சியும் ஏற்படவில்லை. பிரதமர் மோடியைப் போலவே, அவரும் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் ஆட்சியின்போது சிலர் எவ்வாறு அச்சுறுத்தப்பட்டு, இலக்கு வைத்து தாக்கப்பட்டனரோ, அது மம்தா ஆட்சியிலும் தொடர்கிறது. 
யாரின் காவலாளி?: பிரதமர் மோடி, தன்னை "காவலாளி' என்று கூறிக்கொள்கிறார். எந்த இடத்திலாவது சாதாரண மனிதர்களின் வீட்டு வாசலில் காவலாளிகள் இருப்பதை பார்த்திருக்கிறீர்களா? பணக்காரர்களின் வீட்டு வாசலில் மட்டுமே காவலாளிகள் இருப்பார்கள். விஜய் மல்லையா, மெஹுல் சோக்ஸி, நீரவ் மோடி போன்ற ஊழல்வாதிகள், மோசடியாளர்களின் காவலாளியாக மோடி இருக்கிறார்.
அவர், அனில் அம்பானி, நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி போன்றவர்களின் பெயர்களை குறிப்பிடும்போது "சகோதரர்' என்கிறார். ஆனால், சாதாரண மக்களைக் குறிப்பிடுகையில் "நண்பர்கள்' என்பதோடு  நிறுத்திக் கொள்கிறார். 
ஏழைகளின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும், 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றெல்லாம் அவர் வாக்குறுதி கொடுத்தார். 
ஆனால், இதையெல்லாம் அவரால் ஏன் செயல்படுத்த முடியவில்லை என்பதை கூறியிருக்கிறாரா? விவசாயிகள், தொழிலாளிகள் மற்றும் இளைஞர்களின் நலனுக்காக அவர் ஏதேனும் செய்திருக்கிறாரா?
கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் என்ன நடந்திருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள். "நல்ல நாள்கள் வரப்போகிறது' என்ற மோடியின் முழக்கத்தை மிஞ்சி "காவலாளி ஓர் திருடர்' என்ற முழக்கம்தான் நாட்டில் பிரபலமாகி வருகிறது.
2014 மக்களவைத் தேர்தலின்போது, "நான் பிரதமராக விரும்பவில்லை. தேசத்தின் காவலாளியாக விரும்புகிறேன்' என்று மோடி கூறினார். தற்போது ரஃபேல் விவகாரத்தில் அவரது குற்றத்தை மக்கள் அறிந்துகொண்டதை அடுத்து, தேசியவாதம் பேசும் மோடி "அனைவரும் நாட்டின் காவலாளி' என்று வசனம் பேசுகிறார். நாள்தோறும் பொய் சொல்வதையே பிரதமர் மோடி வழக்கமாகக் கொண்டுள்ளார். 
இந்த மக்களவைத் தேர்தல், இரு கொள்கைகளுக்கு இடையிலான போட்டியாகும்.
ஒருபுறம், நாட்டை ஒற்றுமையுடன் வைத்திருக்க காங்கிரஸ் போராடி வருகிறது. மறுபுறம், நாட்டை  ஜாதி, மத அடிப்படையில் பிளவுபடுத்த வேண்டும் என்று பாஜக-ஆர்எஸ்எஸ்-மோடி அணி முயற்சித்து வருகிறது. 
காங்கிரஸின் நல்லாட்சி: ஆனால், காங்கிரஸ் கட்சி அப்படியல்ல. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தோம். காங்கிரஸ் அரசு அமைந்த இரண்டு வாரங்களுக்குள்ளாக அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது.
அதேபோன்று, மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தால் ஏழைகள் அனைவருக்கும் குறைந்தபட்ச வருவாய் உறுதி செய்யப்படும். தகுதியுடைய பயனாளர்களின் வங்கிக் கணக்கில் அந்தப் பணம் தானாகவே வரவு வைக்கப்படும். அரசு அலுவலகங்களில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். ஜிஎஸ்டி அமலாக்கத்தில் தகுந்த மாற்றங்கள் செய்யப்படும். 
ஏன் அமைதி?: அன்றாடம் உங்கள் கண்ணுக்கு முன்னால் களவு நடைபெற்றுக் கொண்டிருக்கையில் பொதுமக்கள் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீங்கள் மெளனமாய் வேடிக்கைப் பார்க்கப் போகிறீர்கள்? நல்ல விஷயங்கள் நடக்க வேண்டுமென்றால், நீங்கள் அதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்றார் ராகுல் காந்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com